2023-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா (Miss India) பட்டத்தை வென்றிருக்கிறார், 19 வயதான நந்தினி குப்தா.
ஃபெமினா (Femina) என்ற பெண்களுக்கான இதழ், ஆண்டுதோறும் `ஃபெமினா மிஸ் இந்தியா' என்ற தேசிய அளவிலான அழகிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்பவர்கள், உலக அழகிப்போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2023-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா போட்டி மணிப்பூரின் இம்பால் நகர், குமான் லம்பாக்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற போட்டியின் இறுதிச்சுற்றில், ராஜஸ்தானின் கோட்டா நகரத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினி குப்தா `மிஸ் இந்தியா' பட்டத்தை வென்றார்.
முதல் ரன்னர் அப்- ஆக டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சாவும் (Shreya Poonja), இரண்டாவது ரன்னர் அப்- ஆக தௌணோஜம் ஸ்ட்ரேலாவும் (Thounaojam Strela) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நந்தினி குப்தா தன்னுடைய 10 வயதில் இருந்தே மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வது குறித்து கனவு கண்டிருக்கிறார். தன்னுடைய பள்ளிப் படிப்பை செயின்ட் பால்ஸ் சீனியர் உயர்நிலைப் பள்ளியில் முடித்திருக்கிறார். தற்போது லாலா லஜபதி ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.9 வருட கனவு நனவான மகிழ்ச்சியில் இருக்கிறார் நந்தினி.
வாழ்த்துகள் நந்தினி குப்தா!