பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, தனது மோசமான திரையுலக அனுபவத்தைச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
திரையுலக வாழ்வு மிகவும் இலகுவாக இருக்கும் என்று நினைப்பவர்கள் மத்தியில், தான் கடந்து வந்த கசப்பான தருணம் குறித்துக் கூறியுள்ளார்.

பாலிவுட் திரைப்படம் ஒன்றில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருந்த சமயம், அப்படத்தின் இயக்குநர் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக பிரியங்காவின் உள்ளாடையைக் (Underwear) காட்டும்படி, அவருடைய ஒப்பனையாளரிடம் கூறியிருக்கிறார். இரண்டு நாள்கள் அந்தப் படத்தில் நடித்த பிறகு, அதற்கு மேல் பிரியங்காவால் அந்த இயக்குநருடன் தொடர்ந்து பணிபுரிய முடியவில்லை. அதோடு தயாரிப்பு நிறுவனத்திடம் பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டு, படத்தில் இருந்து விலகியுள்ளார்.
தான் படத்தை விட்டு விலகியது குறித்து அந்த நேர்காணலில் பிரியங்கா சோப்ரா கூறுகையில், ``நான் ஓர் ஆணை மயக்கும் அண்டர்கவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அவரை மயக்கும் சமயத்தில், ஒரே நேரத்தில் ஓர் ஆடையைக் கழற்ற வேண்டும். எனக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆடை இருக்க வேண்டும் (Layer up) என விரும்பினேன்.

படத் தயாரிப்பாளர், `இல்லை, நான் அவளுடைய உள்ளாடைகளைப் பார்க்க வேண்டும். இல்லையேல், இந்தப் படத்தைப் பார்க்க மற்றவர்கள் ஏன் வருவார்கள்' என்றார். இதை அவர் என்னிடம் சொல்லாமல், அவர் அதை என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் கூறினார்.
அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம். எனது கலை முக்கியமல்ல, நான் என்ன பங்களிக்கிறேன் என்பது முக்கியமல்ல. நான் ஒன்றுமில்லாதவள் என்று உணரச் செய்த சம்பவம் அது ’’ என்று மனம் வருந்தியுள்ளார். இவரின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.