மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 340

படிக்கத் துடிக்கும் மனசு... தடையாய் நிற்கும் வயசு!

ன்னைப் படுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆசைக்குத் தீர்வு தெரியாமல் தவிக்கிறேன்!

பன்னிரண்டாவது முடித்தவுடனேயே திருமணம் எனக்கு. 23 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், கல்யாண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்லும் ஒரு பையன் உள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏதோ ஓர் ஆர்வத்தில் அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து படிப்பின் மீது எனக்கு அதிக ஆர்வம், ஆசை வந்துவிட்டது. ஏன், வெறி என்றுகூட சொல்லலாம்!

பன்னிரண்டாம் வகுப்போடு அப்பா என் படிப்பை நிறுத்தியபோதுகூட, இவ்வளவு தவிக்கவில்லை. 'அன்று விவரம் தெரியாமல் பட்டப்படிப்புப் படிக்காமல் விட்டுவிட்டோமே, அப்பாவின் காலில் விழுந்தோ, சண்டை போட்டோ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கலாமே’ என்றெல்லாம் ஏங்கும் அளவுக்கு, படிப்பு மீது பிரியமாகிக் கிடக்கிறேன் இப்போது. ஆனால், என் வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது, என் தவிப்பை, விரக்தியாக மாற்றுகிறது.

என் டைரி - 340

'வீட்டில் இருந்தே பட்டப்படிப்பு படிக்கட்டுமா?’ என்ற கேள்விக்கு, மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகிறார் கணவர். பிள்ளைகளோ, என் ஆசையைப் புரிந்துகொண்டவர்களாக இல்லாமல், 'ஏன் உனக்கு இந்த வீண் வேலை?’ என்கிறார்கள். நான் ஏற்கெனவே போட்டித் தேர்வுக்குப் படிப்பதைப் பார்த்து, 'மருமகன் வரப்போற நேரத்துல உனக்கு எதுக்கு இந்த ஆசை எல்லாம்?’ என்று கேலி பேசிய உறவுகள், இப்போது பட்டப்படிப்பு படிக்கப் போகிறேன் என்றால் என்ன சொல்வார்களோ என்று தயக்கமாக இருக்கிறது.

'40 வயதில் என்ன ஆசை இது’ என்று, என்னை நானே கேட்டுக்கொண்டாலும், என் பையன் படிப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறது அந்த ஆசை. எப்படியாவது படித்தே ஆக வேண்டும் என்று மனம் உறுதிபெறும் நொடி, ஆனால், வீட்டில் உள்ளவர்களே என்னை ஊக்குவிக்கவில்லையே என்ற வருத்தம், அந்த உறுதியைக் குலைக்கிறது.

எங்கிருந்து, எதனால் வந்தது எனக்கு இந்த ஆசை? இது தவறா? படித்து என்ன வேலைக்கா செல்லப் போகிறோம்? நான் படிப்பதால் யாருக்கும் கஷ்டம், நஷ்டம் இல்லையே? எதற்காக நான் என் ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும்?  தொடர் கேள்விகளால் மனதின் நிம்மதி தொலைக்கிறேன். நான் படிக்கட்டுமா, வேண்டாமா தோழிகளே..?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 339ன் சுருக்கம்

”29 வயதாகியும் திருமணமாகாத எனக்கு, பெரிய விசாரணை எதுவுமின்றி மணமுடித்து வைத்தனர். கணவர் வீட்டிலோ 24 மணி நேரமும் கிச்சனே கதி, அக்கம்பக்கம் பேசக்கூடாது, தாம்பத்யத்தில் இணையும் நாளைக்கூட மாமியார்தான் முடிவெடுப்பார். இதற்கிடையே நான் கர்ப்பமாக, கணவர் மற்றும் மாமியாருக்கு எந்த சந்தோஷமும் இல்லை. அழுகையுடனும், குழப்பத் துடனும் நாட்கள் கடந்தபோதுதான் ஓர் உண்மை தெரிந்தது. அது... அவருக்கு தாரதோஷம் இருப்பதால் அதைக் கழிப்பதற்காகவே என்னைத் திருமணம் முடித்து, விவாகரத்து செய்து, பிறகு உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்யவிருந்த அவர்களின் திட்டம்.

என் டைரி - 340

கருவைக் கலைக்க மறைமுகமாக திட்டமிடுவது தெரிந்து மறுத்தேன். நேரடியாக அவர்கள் மிரட்ட, பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து கூட்டியபோது என் நடத்தை பற்றி தவறாகப் பேசினார்கள். மறுமணத் திட்டம் பற்றி சொல்லியும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஒரு வாரத்தில் என் பிறந்த வீட்டுக்கு விவாகரத்து நோட்டீஸ் வந்தது. இனி போராடி சேர்ந்தாலும் வாழ்க்கையில் இனிமையாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை காரணமாக அழுதுகொண்டிருக்கிறேன். என்ன செய்வது தோழிகளே?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 340

 100

மூடநம்பிக்கை மறந்துபோகும்!

ஒருபோதும் விவாகரத்துக்கு சம்மதிக்காதே! அதேசமயம் ஒரு போராளியைப்போல் நெஞ்சுறுதியுடன் கணவர் வீட்டாரை எதிர்கொள். இப்போது பிரிந்திருந்தாலும், உன் கணவன் இன்னொரு திருமணம் செய்கிறாரா என்று கண்காணி. அதேநேரத்தில் உன் குழந்தையைப்  பெற்று, அன்போடு வளர்த்தெடு. வாரிசு மற்றும் தாரத்தை மறந்துவிட்டு புதிய வாழ்க்கை அமைய வழியில்லாதபோது, தாரதோஷம் என்ற மூடநம்பிக்கை மெல்ல மெல்ல உன் கணவரிடம் தகர்ந்துபோகும். நிச்சயம் அவர் உன்னை நாடிவரக்கூடும், நம்பிக்கை கொள்!

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்

ஏன் போராடுகிறாய்?

இனி போராடி சேர்ந்தாலும் வாழ்வில் இனிப்பு இருக்காது என்று நீயே சொல்லிவிட்டாய். பிறகு அதற்காக ஏன் போராடுகிறாய்? குழந்தை மீது ஆசையாக இருப்பதாகச் சொல்கிறாய். குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமானதல்ல. எனவே, குழந்தையைக் கலைத்துவிட்டு விவாகரத்து செய். இல்லற வாழ்க்கை மட்டுமே உயர்ந்ததல்ல. எத்தனையோ பெண்கள் கல்வி, விளையாட்டு, அரசியல், இலக்கியம், சினிமா என்று வேறு பல துறைகளில் சாதிக்கும்போது நீ உனக்கான துறையை தேர்ந்தெடுத்து சிறப்பாகச் செய்.

- கே.பிரேமா, சென்னை-99

ஏன் விவாகரத்து..?

விவாகரத்து மூலமாக அவரை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள இடம் கொடுக்காதே. இப்போது தாரதோஷம் என்பவர்கள் திருமணத் துக்குமுன் அதற்கான பரிகாரம் செய்துவிட்டு உன்னை மணம் முடித்திருக்கலாமே! நடந்தது நடந்துவிட்டது. இன்றைய சூழலில் நீ தைரியமாக அவர்கள் மீது கேஸ் போடு அல்லது மகளிர் ஆணையத்தில் புகார் செய். மேலும், உன் கணவர் குடும்பத்துக்கு தகுந்த பாடம் கற்பி. உன் மீது பிழையில்லாதபோது நீ ஏன் விவாகரத்து தரவேண்டும்..?

- எஸ்.சுகந்தி, கீழ்வேளூர்