மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 341

வளர்ந்துவிட்ட மகள்... வாழத் துடிக்கும் மனசு!

னக்காக நான் வாழ நினைக்கிறேன். இது சரியா, தவறா என்பதே இப்போது என் பிரச்னை!

பல்கலைக்கழகத் தேர்வில் 'கோல்டு மெடலிஸ்ட்’ என்ற பெருமையைப் பெற்று என் கிராமத்துக்குள் நுழைந்தபோது, ஊரே என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தொடர்ந்து பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் வெளியாகும்போதெல்லாம் என் குடும்பத்தாரும் உறவினர்களும் நெகிழ்ந்து பாராட்டினார்கள். மேல் படிப்புக்கு அனுமதி கேட்டபோது, 'அப்பாவுக்கு வயசாயிடுச்சும்மா... கல்யாணத்துக்குப் பிறகு படியேன்...’ என்றார் அம்மா. வீட்டுக்கு மூத்த மகள் என்பதால் அப்பாவையும் தங்கைகளையும் மனதில் வைத்து சம்மதித்தேன்.

என் டைரி - 341

புகுந்த வீட்டில் என் மேல் படிப்புக்குத் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ய ஆரம்பித்தார் கணவர். இதற்கிடையே குழந்தை பிறந்துவிட, வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் இருந்த என் பெற்றோரைப் பார்க்கவே கூடாதென வீட்டுச் சிறையில் அடைத்தார். வருடங்கள் உருண்டோடின. அவர் திருந்தவில்லை. தினம் தினம் குடித்துவிட்டு வந்து என்னையும் என் 15 வயது மகளையும் கொடுமை செய்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவருடைய கொடுமை தாங்க முடியாமல் அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்துவிட்டு பிறந்த வீட்டுக்கு வந்தேன். என் திறமைக்காக பெருமைப்பட்ட ஊரும் உறவினர்களும், 'ஆயிரம்தான் இருந்தாலும் புருஷனை அனுசரிச்சுப் போகணும்’, 'ஒரு பொம்பளைக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுக்குற அளவுக்கு எங்க இருந்து துணிச்சல் வந்துச்சு’ என என்னைத் தூற்ற ஆரம்பித்தார்கள். ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே ஒரு வழியாக போராடி கணவரிடமிருந்து விவாகரத்தும் பெற்றுவிட்டேன். அப்பாவுக்கு பாரமாக இருக்க வேண்டாமென வீட்டிலிருந்து வெளியேறி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, என் மகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்.

கணவரின் துணையும், பெற்றோரின் ஆதரவுமின்றி மகளுடன் தனியாக வாழ்வதன் தினசரி சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தோழிகள், மறுமணம் செய்துகொள்ள அறிவுறுத்துகிறார்கள். வயது வந்த மகளுக்குத் தாயாக இருந்து கொண்டு மறுமணம் செய்துகொள்ள மனது இடம் தரவில்லை. ஒருவேளை மகளின் திருமணத்துக்குப் பிறகு கடைசி காலத்துக்கு துணை தேவையாக இருக்குமோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. மேலும், எனக்கான வாழ்க்கையை நான் வாழவே இல்லையே என்ற ஏக்கமும் ஒருபுறம் உள்ளது.

திருமணம் பற்றி யோசிப்பதா? இல்லை, இப்படியே இருந்துவிடலாமா? விடை சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 341

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 340ன் சுருக்கம்

''பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடனேயே  திருமணம் எனக்கு. 23 வருடங்கள் ஓடிவிட்டன. திருமண வயதில் இரண்டு பெண் குழந்தைகள், பள்ளி செல்லும் ஒரு பையன் உள்ளனர். எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக படிப்பின்மீது ஆர்வம் பொங்குகிறது. என் கணவர் மற்றும் பிள்ளைகள் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது என் தவிப்பை, விரக்தியாக மாற்றுகிறது. போட்டித் தேர்வுக்கு நான் படிப்பதை பார்த்து, 'மருமகன் வரப்போற நேரத்துல உனக்கு ஏன் இந்த வேலை?’ என்று கேலி பேசும் உறவுகள் நான் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்வார்கள் என்று தயக்கமாக இருக்கிறது. ’40 வயதில் என்ன படிப்பு ஆசை?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டாலும், என் மகன் படிப்பதை பார்க்கும் போதெல்லாம்,  என் படிப்பு ஆசை விஸ்வரூபமெடுக்கிறது. 'எங்கிருந்து, எதனால் வந்தது இந்த ஆசை?’,  'இது தவறா? எதற்காக என் ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும்?’ என்ற தொடர் கேள்விகளால் நிம்மதியிழந்திருக்கிறேன். நான் படிக்கட்டுமா, வேண்டாமா தோழிகளே?'

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 341

 100

உன்னால் முடியும் தோழி!

தோழி... உன் படிப்பு ஆர்வத்துக்கு கணவர் ஊக்கம் தரவில்லையென்றாலும் அவர் தடை சொல்லாததை பெரிய அனுகூலமாகக் கொள். இனி யாருடைய கேலியையும் பொருட்படுத்தாதே. வீட்டுக் கடமைகளைச் செவ்வனே முடித்துவிட்டு மீதமுள்ள நேரத்தை படிப்புக்காக செலவிடு. கஷ்டப்பட்டு படிப்பவர்களைவிட இஷ்டப்பட்டு படிப்பவர்கள்தான் கல்வியில் சாதனை படைத்திருக்கிறார்கள். நீயும் அந்த வரிசையில் இடம்பெற வாய்ப்புண்டு. நீ பெறும் உயர் கல்வி உன் அறிவை விசாலமாக்குவதோடு, போட்டித் தேர்வுகளில் நம்பிக்கையோடு பங்குபெற்று வெற்றிபெறச் செய்யும். உன் வயதைச் சொல்லி நீ படிப்பதை ஏளனம் பேசியவர்கள் வாயடைத்துப் போவர்.

- ரா.கீதாஞ்சலி, திருக்கோவிலூர்

வயது தடையில்லை!

40 வயதிலும் நீங்கள் படிக்க ஆசைப்பட்டது வரவேற்க வேண்டியது. படிக்க வயது தடை இல்லை. தங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளை உட்காரவைத்து, 'படிப்பு என்பது அறிவைப் பெருக்குவதோடு, பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவும் உதவும் என்பதை தெளிவுபடுத்துங்கள். மேலும் ’இந்தப் படிப்பு உத்யோகம் பார்ப்பதற்காக இல்லை’ என சொல்லிப்பாருங்கள். நிச்சயம் சம்மதிப்பார்கள்.

- ச.லட்சுமி, கரூர்

வெற்றி உன் பக்கம்!

உரிய நேரத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. காலம், நேரம், முயற்சி, வெற்றி எல்லாம் ஒருசேர அமைய வேண்டும். கடவுள் உன்னை ஏதோ ஒரு பதவியில் அமர்த்தப்போகிறார்... அதன் உந்துதல்தான் இந்த படிப்பு ஆர்வம் என்பதை உன் கணவருக்குப் புரிய வை. உன் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ நிறைவாக  செய்திருக்கும்போது, உன் ஆர்வத்துக்கு அவர்கள் 'சல்யூட்’ வைத்தே ஆகவேண்டும். ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் நான்கூட எம்.ஏ. தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன். 40 வயதெல்லாம் ஒரு வயதா? இல்லவே இல்லை! துணிந்து இறங்கு... வெற்றி வாகை சூடலாம்.

-  ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82