மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 343

தினம் தினம் கொல்லும் சித்தப்பாவின் மரணம்!

சாவின் கைக்குச் சென்று மீண்டவள் நான். ஆனால், `உயிர் பிழைத்ததற்கு பதில் உயிர் பிரிந்திருக்கலாமே’ என்றே மறுகுகிறேன் அனுதினமும்!

என் வீட்டில் குடிகார அப்பாவும், கோபக்கார அம்மாவும் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருப்பதால், நிம்மதி என்ற ஒன்றை நான் சுவாசித்ததே இல்லை. இவர்கள் சண்டை பற்றி அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என்னிடம் விசாரிக்கும்போதும், ‘என்ன இன்னிக்கு உங்க வீட்டுல சத்தத்தைக் காணோம்?!’ என்று கிண்டல் செய்யும்போதும், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால், என் வருத்தங்களைப் பகிர உடன்பிறப்புகளும் இல்லை. இதனால் வாழ்க்கையே விரக்தியாகிக் கிடந்தேன்.

என் டைரி - 343

அன்றும் வீட்டில் சண்டை. சமாதானப்படுத்த முடியாத சகதிச் சண்டை. `இவர்களுடன் வாழ்வதைவிட சாவதே மேல்’ என்று, தோப்பில் உள்ள கிணற்றில் போய் குதித்துவிட்டேன். நீச்சல் தெரியாது என்றாலும், சாவைப் பார்த்த பயத்தில் உயிர் ஆசை வந்ததால் ஒரு கல்லைப் பற்றிக் கிடந்தேன். அப்போது எதார்த்தமாக அந்த வழியாக வந்த சித்தப்பா, என்னைப் பார்த்துப் பதற, நான் அவரைப் பார்த்துக் கதற, காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். ஆனால், கிணற்றுப் பாறையில் அவர் தலை அடிபட, என் கண் முன்னாலேயே தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டார்.

நான்கு மணி நேரம்... உயிரற்ற என் சித்தப்பாவும், உயிருடன் நானும் அந்தக் கிணற்றுக்குள் கிடந்தோம். பின்னர் அவ்வழியே வந்த சிலர் பார்த்து என்னையும், சித்தப்பாவையும் கிணற்றில் இருந்து தூக்கினர். என் சித்தியும் அவர் மகளும் அடித்துக்கொண்டு அழுத காட்சி என் விழிகளில் அப்படியே உறைந்துபோயுள்ளது.

‘உங்க வீட்டுச் சண்டையில ஊரான் வீட்டு உயிர் போயிருச்சே...’ என்று உறவுகளும், ஊராரும் என் அப்பா, அம்மாவையும் என்னையும் சபிக்க, ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு வந்துவிட்டோம். இப்போது என் அப்பா, அம்மா சண்டை போடுவதில்லை. காரணம், வீட்டில் யாரும் யாருடனும் பேசிக்கொள்வதே இல்லை. என் அப்பாவையும், அம்மாவையும், என்னையும் குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. என்னைக் காப்பாற்ற வந்து காலனிடம் சென்ற என் சித்தப்பாவின் கடைசி நொடிகளும், சித்தி, தங்கையின் கண்ணீரும் தூக்கத்திலும் என்னிடம் நியாயம் கேட்கின்றன.

இந்த 25 வயதில், நிம்மதியற்றுக் கிடக்கிறேன். செய்த பாவத்துக்குத் தண்டனையாக, திருமணம் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறேன். ஆனாலும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று அவ்வப்போது நினைக்கத் தோணுகிறது. எப்படி மீள நான் இந்த மனப்போராட்டத்தில் இருந்து..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 343

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 342-ன் சுருக்கம்

‘‘கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் நான் பரிசு பெற்ற தகவல் வார இதழில் வெளியானதைப் பார்த்து எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள். அதில், ஒன்று மட்டும் சமூக அக்கறையோடு இந்திய எல்லையிலிருந்து எழுதிய ஒரு ராணுவ வீரருடையது! எங்கள் கடித நட்பு, காலப்போக்கில் காதலானது. ஒரு வருடம் கடந்த நிலையில், போருக்குப் போவதாக கடிதம் மூலம் தெரிவித்தார். அதன்பிறகு அவரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அவரின் ராணுவ முகவரி தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை. 15 வருடங்கள் ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் அவர் கடிதங்களை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன். ‘அவர் செத்துட்டார்னு நினைச்சு உன் வாழ்க்கையைத் தேடு. இல்லைனா, அவரைத் தேடிப் போ!’ என்று என் தோழி சொல்வது, 35 வயதில் சிந்திக்க வைக்கிறது. அவரைத் தேடிச் சென்று... உயிருடன் இல்லை என்றோ, வேறு திருமணம் செய்துகொண்டார் என்றோ தகவல் கிடைத்தால், அதை ஜீரணிக்க எனக்கு திராணி இல்லை. மேலும், என்னால் அவருக்கு புதுக்குழப்பம் வந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறேன். ஆனால், ‘அவர் உயிரோடு எனக்காக திருமணம் செய்யாமலிருந்தால்?’ என்ற தவிப்பும் கொல்கிறது. நான் என்ன செய்யட்டும்?”

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

நடைமுறை வாழ்க்கை முக்கியம்!

கானல் நீரைத் தேடிப் பருக நினைக்கும் உன் எண்ணம் முட்டாள்தனமானது. அவரை மறப்பது கடினம் என்பது நீ அவர் மீது வைத்த அன்பிலிருந்து புரிகிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கை வேறு. இனியும் தாமதிக்காமல் முதலில் யாரையாவது மணந்துகொள். அதன் பிறகு அவரது நினைவு வந்தால்கூட ‘வாழ்க்கையின் சுவாரஸ்யங்களுள் இதுவும் ஒன்று’ என நினைத்து வாழ்க்கையை ஓட்டுவதுதான் சிறந்த முடிவு.

- இரா.நந்தினி, வந்தவாசி

மணமாலை சூடு!

உன் தோழி கூறியது சரிதான். காத்திருந்து காலத்தை வீணடித்தது போதும்; மனதை திடப்படுத்திக்கொண்டு உடனே அவரைத் தேடிச் செல். மேலும் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள். அவர் இல்லை என்றாலும், உன் வாழ்க்கையை வீணடிக்காமல், உனக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து மணமாலை சூடு.

- ஆர்.ராஜேஸ்வரி, ஸ்ரீமுஷ்ணம்

நடந்ததை மற... நடப்பதை நினை!

பெண்ணே... உன் முட்டாள்தனத்தைக் கண்டு நீயே நொந்துகொள்கிறாய். உடனே உன் பெற்றோரிடம் பேசி, உனக்கு ஏற்றவருடன் திருமணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல். கடந்த காலத்தை கெட்ட கனவாக மறந்துவிட்டு... நிகழ்காலத்தை அனுபவித்து, சந்தோஷமாக வாழ்ந்துகாட்டு! வெற்றிகரமான மணவாழ்க்கை அமைய வாழ்த்துகள்.

- ப்ரீத்தா ரங்கசாமி, சென்னை-4