மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 344

மகளுக்கென்று ஒரு மனம்!

என் டைரி - 344

ன் மகள், கால் வைத்துள்ளது சுகத்திலா... சுழலிலா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தாய் நான்!

என்னுடையது காதல் திருமணம். எங்களின் ஒரே மகளை, கணவரும் நானும்... தோழன் - தோழியாக இருந்தே வளர்த்தெடுத்தோம். படிப்பு, மேற்படிப்பு, வேலை, திருமணம் என அனைத்தும் அவள் விருப்பப்படியே!

22 வயதில், `‘இவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’' என்று ஒரு பையனை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவள், `‘பி.இ பட்டதாரி... நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்’' என்று சொன்னாள். குடும்ப பின்புலம் பற்றிக் கேட்டபோது, `‘அம்மா இறந்துவிட்டார். அப்பா மட்டுமே. அம்மாவின் மறைவுக்குப் பின் சிறுவயதிலேயே நானும் அப்பாவும் சொந்த ஊரைவிட்டு நகர்ந்துவிட்டதால், உறவுகள் எல்லாம் அறுந்துவிட்டன'’ என்றார் பையன். `‘அவர் நண்பர்களிடம் ஒருமுறை விசாரித்துவிடலாம்’' என்றபோது, `‘நானும் அவரும் ஒரே ஆபீஸ்லதான் வேலை செய்றோம். அவர் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் எனக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான். அதனால தனியா விசாரிக்கத் தேவையில்ல’' என்றாள் மகள். ஒரு சுபநாளில் திருமணமும் முடிந்தது!

என் டைரி - 344

சமீபத்தில் ஒரு விசேஷத்தில் எங்கள் மாப்பிள்ளையைப் பார்த்த உறவுக்காரப் பெண் ஒருவர், `‘இவரா உங்க மாப்பிள்ளை? இந்தப் பையனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சு! எங்க வீட்டுக்கு மூணாவது வீட்டு மாடியிலதான் இருந்தாங்க. ஆனா, அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் சண்டை... பிரிஞ்சுட்டாங்க. விவாகரத்து வழக்கு நடந்துட்டு இருக்குனு கேள்விப்பட்டேன்!’' என்று சொல்ல, அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம் நானும் அவரும்!

மகளிடம் இந்த அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தவித்து, பிறகு ஒருவழியாகச் சொன்னபோது, `‘ஆமா... தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்!’' என்று அவள் சலனமில்லாமல் சொல்ல, சுக்குநூறாகிப் போனோம். `‘அந்தப் பொண்ணுதான் சரியில்ல. இவர் மேல எந்தத் தப்பும் இல்ல’' என்று நியாயம் வேறு பேசினாள்.

`‘டைவர்ஸ் ஆகாத நிலையில, அவரு இன்னொரு கல்யாணம் செஞ்சதே தப்பு. தவிர, ஜீவனாம்ச சிக்கல் எல்லாம் வேற இருக்கே...’' என்று நாங்கள் பதறி அழுதால், `‘எல்லாம் நாங்க பார்த்துக்குவோம்!’' என்று மனதில் அசட்டுக் காதலோடும், வயிற்றில் ஆறு மாத சிசுவோடு நிற்கும் அவளைப் பார்க்கவே மனம் பற்றி எரிகிறது எங்களுக்கு.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்கிறோம் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 343-ன் சுருக்கம்

‘‘சாவின் கைக்குச் சென்று மீண்ட நான், ஏன் உயிர் பிழைத்தேன் என்று மறுகிக்கொண்டிருக்கிறேன்.

என் டைரி - 344

என் குடிகார அப்பா, கோபக்கார அம்மா இடையே ஏற்படும் சண்டை பற்றி அக்கம்பக்கமும், உறவினர்களும் கிண்டல் செய்வார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம், கண்ணீர் பெருக்கெடுக்கும். ஒரு நாள், என் பெற்றோரிடையே சமாதானப்படுத்த முடியாத சண்டை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நான் கிணற்றில் குதித்தேன். ஆனால், உயிர்மீது ஏற்பட்ட ஆசையால் ஒரு கல்லைப் பற்றிக் கிடந்தேன். அந்த வழியாக வந்த என் சித்தப்பா, காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். பரிதாபம்... பாறையில் தலை அடிபட்டு என் கண் முன்னேயே உயிர் விட்டார். நான்கு மணி நேரம்... உயிரற்ற என் சித்தப்பாவும், உயிருடன் நானும் கிணற்றுக்குள் கிடந்தோம். பின்னர் அந்த வழியாக வந்த சிலர் எங்களை மீட்டனர். அப்போது என் சித்தியும் அவர் மகளும் அழுத காட்சி என் விழிகளில் அப்படியே உறைந்துபோனது.

என்னையும், என் பெற்றோரையும் ஊரும் உறவுகளும் சபிக்க, அங்கிருந்து வேறு ஊருக்கு வந்துவிட்டோம். இப்போது என் அப்பா, அம்மா சண்டை போடுவதில்லை. ஆனால், எங்களை குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. இந்த 25 வயதில், செய்த பாவத்துக்குத் தண்டனையாக, திருமணம் வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். வாழ்க்கையே வேண்டாம் என்றும் தோன்றுகிறது. எப்படி மீள்வது நான்?!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

தயங்காமல் திருமணம் செய்துகொள்!

ஒருமுறை, நீ தற்கொலைக்கு முயன்று, அதுவே உன் சித்தப்பாவின் சாவுக்கு காரணமானது போதும்! இத்துடன் தற்கொலை எண்ணத்தை மறந்துவிடு. கால ஓட்டத்தில் சோகத்தின் சுவடு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும். தயங்காமல் திருமணம் செய்துகொள்; உன் திருமணம் நிச்சயம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். உன் சித்தி, தங்கையின் நலனில் நீ எடுத்துக்கொள்ளும் அக்கறை, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக அமையும்.

 - என்.ரங்கநாயகி, கோவை

தங்கையை வாழ வை!

எப்போதுமே சுயநலமாக முடிவெடுப்பதை விட்டுவிட்டு உன்னால் பாதிக்கப்பட்ட சித்தப்பா குடும்பத்தினரை நினைத்துப்பார். தங்கையின் எதிர்காலத்தை நினைத்து அவளை படிக்கவைக்க உதவிசெய். நீ படித்திருந்தால், உன் சொந்தக்காலில் நின்று சித்திக்கும், தங்கைக்கும் உதவிசெய். அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்து வாழவைக்க முயற்சிசெய். உன் சித்தப்பாவின் ஆன்மா உன்னை நினைத்துப் பெருமையுடன் சாந்தியடையும். 

- செந்தமிழ் கந்தசாமி, ஆண்டிமடம்

பரிகாரம் தேடு!

உன்னைக் காப்பாற்றும் நல்லெண்ணத்துடன் உடனடி செய்கையாய் கிணற்றில் பாய்ந்ததில் உன் சித்தப்பா உயிர்விட்டது வேதனைக்குரியதுதான். ஆனால், அவர் உயிர் உன்னால் போகவில்லை... நீ கொலைகாரியும் இல்லை என்பதை நீ உணர வேண்டும். கணவனை இழந்த உன் சித்தி மற்றும் தந்தையை இழந்த மகள் ஆகியோருடைய வாழ்க்கை மேம்பட உன்னால் முடிந்த உதவிகளை செய்து, உன் ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்.

- லக்ஷ்மி வாசன், சென்னை-33