மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 345

கல்யாணத்தை காலி செய்த ‘முகநூல் நட்பு’!

டெக்னாலஜி உலகின் அபாயங்கள் பற்றி இன்று பலரும் அறிவுறுத்திக் கொண்டிருந்தாலும், அதற்குப் பலியாகும் விட்டில்பூச்சிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்... என்னைப் போல!  

பள்ளிக் காலத்திலிருந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறேன். தினமும் நானும் என் தோழிகளும் எங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றிக் கொண்டே இருப்போம். இதற்கு வரும் கமென்ட், லைக் எல்லாம் எங்களை இன்னும் அதிக படங்களைப் பதிவேற்றத் தூண்டும். கல்லூரி சென்ற பிறகு இது இன்னும் வேகமெடுத்தது. கல்ச்சுரல்ஸ், செமினார், வொர்க்‌ஷாப், இன்டர்ன்ஷிப் என்று செல்லும் இடங்களில் எல்லாம் அறிமுகமாகும் நண்பர்கள், முகநூலிலும் நண்பர்கள் வட்டத்தில் இணைய ஆரம்பித்தனர்.

என் டைரி - 345

இப்படித்தான் பக்கத்து ஊரிலிருக்கும் பிரபலமான கல்லூரிக்கு கல்ச்சுரல்ஸுக்காக சென்றபோது அறிமுகமான ஒருவன், முகநூல் நண்பனானான். சில மாதங்களில், என்னைக் காதலிப்பதாக வந்து நின்றான்.’படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில், காதல் எல்லாம் வேண்டாம். என்னால் உன்னை காதலனாகவெல்லாம் யோசிக்க முடியவில்லை' என்று பக்குவமாக எடுத்துக்கூறி, நண்பர்களாகவே தொடர்வோம்' என்றேன். இதையேற்று அவனும் நல்ல தோழனாகவே பழகி வந்தான்.

கல்லூரி இறுதியாண்டின் போது வீட்டில் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள். வந்த வரனை எனக்கும் பிடித்திருந்தது. கல்லூரிப் படிப்பு முடிய இன்னும் ஒரு செமஸ்டர் இருந்த நிலையில், படிப்பு முடிந்ததும் திருமணம் என்று முடிவானது. இந்நிலையில்தான், தன் கோர புத்தியை காண்பித்தான் என் 'நண்பன்’. முகநூலில் நான் பதிவேற்றிய, என் தோழிகளுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் பலவற்றை மார்ஃபிங் செய்து, நான் அவனுடன் இருப்பதைப் போல மாற்றினான். எங்கள் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பினான். அது என் கவனத்துக்கு வந்து நான் திகைத்துப் போய் நிற்க, எனக்கு நிச்சயம் முடிந்திருந்த மாப்பிள்ளைக்கும் அனுப்பிவிட்டான்.

'அது மார்ஃபிங்’ என்று உறவினர்கள், கல்லூரி நண்பர்கள், மாப்பிள்ளை வீட்டினர் என்று அனைவரிடமும் கத்தி கத்திச் சொன்னாலும், சிலரே நம்பினர்.

மாப்பிள்ளை வீட்டினர், 'அப்படியே பொய்யா இருந்தாலும், இந்த போட்டோவை பார்த்த எல்லார்கிட்டயும் நாங்க போய், ரொம்ப நல்ல பொண்ணு. ஒரு பையன் ஒரு தலையா காதலிச்சானாம்னு இந்தக் கதையையெல்லாம் சொல்லிட்டிருக்க முடியாது!’ என்று திருமணத்தையே நிறுத்திவிட்டனர்.

இந்தப் பிரச்னையில் சொந்த ஊரில் இருந்தே வெளியேறிவிட்டோம். 'உன் மேல் இருந்த காதலால்தான் அப்படிப் பண்ணிட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோ...’ என்று இன்னும் என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறான் அந்தக் கயவன். வெளிப்படையாக அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், என் வாழ்க்கையை அது மேலும் சிக்கலாக்கிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதனால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

தெளிவுகொடுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 344-ன் சுருக்கம்

என் டைரி - 345

”ஒரே மகளை, கணவரும் நானும்... தோழன், தோழியாக வளர்த்தெடுத்தோம். படிப்பு உள்பட எல்லாம் அவள் விருப்பப்படியே! 22 வயதில், ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதாக அறிமுகப்படுத்தியவள், 'பி.இ படித்து நல்ல சம்பளத்தில் இருக்கிறார்’ என்றாள். 'அம்மாவின் மறைவுக்குப் பின் ஊரை காலி செய்துவிட்டு அப்பாவுடன் வந்துவிட்டதால், உறவுகள் எதுவுமில்லை' என்றார் அந்தப் பையன்.  நண்பர்களிடம் விசாரிக்கலாம் என்றபோது ’அதெல்லாம் தேவையில்லை' என்று தடுத்துவிட்டாள் மகள். அவள் விருப்பப்படி திருமணம் முடிந்தது!

சமீபத்தில், ஒரு விசேஷத்தில் எங்கள் மாப்பிள்ளையைப் பார்த்த உறவுப்பெண் ஒருவர், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து வழக்கு நடந்து வருவது பற்றி சொல்லக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்தோம்! மகளிடம் கேட்டபோது, எல்லாம் தெரிந்தே கல்யாணம் செய்துகொண்டதாக சொன்னவள், 'அந்தப் பெண்தான் சரியில்லை’ என்றாள். டைவர்ஸ் ஆகாமல் இன்னொரு கல்யாணம் செய்தது தவறு என்பதையும், ஜீவனாம்ச சிக்கல் பற்றியும் சொல்லி நாங்கள் பதற, 'எல்லாம் நாங்க பார்த்துக்குவோம்!'' என்று அசட்டுக் காதலோடும், வயிற்றில் ஆறு மாத சிசுவோடு பயமே இல்லாமல் சொல்கிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நிற்கிறோம்!''

வாசகிகல் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 345

 100

கடவுளிடம் வேண்டுங்கள்!

கல்யாணமானவன் என்று தெரிந்தும், பெற்றோராகிய உங்களிடம் சொல்லாமலும், விசாரிக்கவிடாமலும் தடுத்திருக்கிறாள் உங்கள் மகள். உண்மை தெரிந்து நீங்கள் துடிக்கும்போது  ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று துணிச்சலுடன் சொல்லும் பெண்ணை என்ன செய்ய முடியும்? வயிற்றில் குழந்தை வேறு. எல்லாம் நல்லபடியாக நடக்க கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

ஜே.ஸ்வேதா, சென்னை - 78

பிரச்னைகளை சமாளிப்பாள்!

கல்வி, வேலை, திருமணம் என எல்லாவற்றிலும் முழு சுதந்திரம் கொடுத்து நல்லது, கெட்டது தெரியுமளவுக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள். தன் காதலன் பற்றி எல்லா விவரங்கள் தெரிந்து, அதன் பின்விளைவுகளையும் யோசித்துதான் கல்யாணம் பண்ணியிருக்கிறாள். இனி எதிர்வரும் பிரச்னைகளையும் அவள் சமாளிப்பாள் என்று நம்பி, அவள் முடிவுகளுக்கு துணையாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

விஜயலஷ்மி, மதுரை

உறுதுணையாக இரு!

உன் மகளைப்போல் ஒரு பெண் மருமகளாகக் கிடைத்திருந்தால், என் மகன் இறந்திருக்க மாட்டான். என் 75 வயது அனுபவத்தில் சொல்கிறேன்... நீ உன் மகளுக்கு உறுதுணையாக இருந்து அவளை வழிநடத்து. கடவுளின் அருளும், என்னைப் போன்ற பெரியவர்களின் ஆசியும் அவர்களைக் காக்கும்.

ஏ.ரெஜினாமேரி, திருச்சி