மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி- 347

‘ஆப்சென்ட்’ கணவர்... அடிவயிற்றில் கலக்கம்!

காதலித்துத் திருமணம் செய்துகொண்டவள் நான். இன்று அந்தக் காதல் கணவர்தான் என் கண்ணீரைப் பெருக்குகிறார்!

என் டைரி- 347

இரு வீட்டாரையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டோம். அழகாக, அன்பாக, அற்புதமாக வாழ்க்கையை ஆரம்பித்தோம். அவருக்கு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளர் பணி. போதுமான வருமானம். முதல் திருமண நாளை, கையில் எங்களின் ஒரு மாதப் பெண் குழந்தையுடன் கொண்டாடியபோது, இந்த உலகத்திலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணாக உணர்ந்தேன்!

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் உருண்டோடிய நிலையில், 'மூணு மாச புராஜெக்ட்... முடிச்சுட்டு வந்துடுவேன்...’ என்று சொல்லி வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். இப்போது என் மகளுக்கு ஐந்து வயதாகிறது. இன்னும் வரவில்லை. ஆனால், தினமும் என்னிடமும், குழந்தையிடமும் போனில் பேசிவிடுவார். மாதாமாதம் செலவுக்குப் பணம் அனுப்பிவிடுவார். அவ்வப்போது புகைப்படங்கள் அனுப்புவார். 'உன்னையும் குழந்தையும் பார்க்காம, என்ன வாழ்க்கை இதுனு வெறுத்துப் போகுது. ஆனா, வேலை கான்ட்ராக்ட் அப்படி. என்ன செய்ய?’ என்று புலம்புவார்.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் இதுவரை எங்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில்... குழந்தையுடன் தனித்தே இருக்கிறேன். இப்படி நாங்கள் இருவரும் ஏக்கத்துடன் வருடங்களைக் கடந்து கொண்டிருக்க, அக்கம்பக்கம் இருப்பவர்களோ, என்னவெல்லாமோ சொல்லி என்னைக் குழப்புகிறார்கள். 'அஞ்சு வருஷமாவா புராஜெக்ட்?’, 'கான்ட்ராக்ட்னா கிளம்பும்போது ஏன் மூணு மாசத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போகணும்?’, 'உன் வீட்டுக்காரர் உன்னை ஏமாத்தறார்னு தோணுது’, 'அவர் ஆபீஸ், ஃப்ரெண்ட்ஸ்னு கேட்டுப்பாரு. அவரை முழுசா நம்பி உன் வாழ்க்கையை வீணாக்காதே...’ என்று ஏகப்பட்ட அறிவுரைகள்.

அக்கம்பக்கத்தில் இப்படிச் சொல்கிறார்கள் என்று கணவரிடம் வருத்தப்பட்டால், 'அவங்களோட எல்லாம் நீ ஏன் பேச்சு வெச்சுக்கிற? நம்ம குடும்பத்தைப் பத்தி சொல்ற? நம்ம சூழ்நிலையை அவங்களுக்கு எல்லாம் விளக்கத் தேவையில்ல. நீ நிம்மதியா இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் வலியுறுத்திக் கேட்டால்... சண்டையுடன்தான் முடிகிறது போன் பேச்சு ஒவ்வொரு தடவையும்!

ஊரார் பேச்சைக் கேட்பதால் ஏதாவது வினை வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் அச்சமாக இருக்கிறது. மறுபக்கம்... கணவர் மீது சந்தேகம் வந்திருப்பதும் உண்மை.

தெளிவது எப்படி தோழிகளே?!

பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 346- ன் சுருக்கம்

என் டைரி- 347

”தவமிருந்து பெற்ற மகன் என்பதால், பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம். வீட்டில் லேப்டாப், இன்டர்நெட் கனெக்‌ஷன் என எல்லா வசதிகளையும் அவனுக்கு செய்துகொடுத்தோம். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 7-ம் வகுப்பு வரை படிப்பில் படுசுட்டியாக இருந்தவன், அதன்பிறகு மந்தமானான். மாலையில் தினம் ஒரு மணி நேரம் விளையாடியவன், தற்போது வெளியே செல்லாமல், ’ஹோம் வொர்க்... ஸ்டடி பண்றேன்’ என எதையாவது சொல்லி, லேப்டாப் முன் தவம் கிடக்கிறான். ஒருநாள் எதேச்சையாக அவனுடைய அறையில் நுழைந்தபோது, பார்க்கக் கூடாத வெப்சைட்டுகளைப் பார்த்து அவன் மனதைக் கெடுத்துக் கொண்டிருப்பது தெரிந்து அதிர்ந்தேன். நெட் கனெக்‌ஷனை துண்டித்தாலும் பிரச்னை முடியவில்லை. வீட்டில் யாரிடமும் பேசாமல், முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம் என்றால், வரமறுக் கிறான். கணவரோ, நான் பிள்ளையை வளர்த்தது சரியில்லை என்று என்னைக் கடிந்துகொள்வதோடு, தன் வேலையில் கவனமாகிவிடுகிறார். இதனால், ’அவனது எதிர்காலம் என்னவாகும்?’ என நினைத்து துடிக்கிறேன். அவனை மாற்ற வழிகாட்டுங்கள் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

நல்ல விஷயங்களைப் புரியவையுங்கள்!

இன்று பெரும்பாலான பெற்றோர் சந்திக்கும் பிரச்னை இது. இந்த வயதில் அவனுக்குத் தனி அறை ஒதுக்கியது நீங்கள் செய்த பெரும் தவறு. 'டீன் ஏஜ்’ல் அடியெடுத்து வைக்கும் உங்கள் மகனுக்காக நீங்களும், உங்கள் கணவரும் சிறிதுகூட நேரம் ஒதுக்கவில்லை என்பது உங்கள் கடிதத்தில் இருந்து தெளிவாகிறது. நீங்கள் செய்த அடுத்த தவறு நெட் கனெக்‌ஷனை ஒரேயடியாக துண்டித்தது. இப்படிச் செய்வதால் கோபம் அதிகரிப்பதோடு, அதன் மீதான ஈர்ப்பு அதிகமாகவே செய்யும். மாறாக இன்டர்நெட்டில் உள்ள நல்ல விஷயங் களைப் புரியவையுங்கள். பெற்றோரைவிட பெரிய மனநல மருத்துவர்கள் குழந்தைகளுக்கு யாரும் கிடையாது என்பதைப் புரிந்து செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

பக்குவமாக சொல்லுங்கள்!

விடலைப் பருவத்தில் பாதை மாறுவது பலருக்கும் நேர்ந்திருக்கிறது. உங்கள் மகனும் அதில் சிக்கியது துரதிர்ஷ்டமே! உங்கள் மகன் மிகவும் மதிக்கும் உறவினரையோ அல்லது மனநல மருத்துவர் ஒருவரை குடும்ப நண்பர் என்றோ அறிமுகப்படுத்தி அவனோடு பேசவையுங்கள். நல்லது எது என்பதை பக்குவமாக புரியவையுங்கள். கொஞ்ச நாட்கள் இணையத்தை மறக்கும் வகையில் எங்காவது சுற்றுலா சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்!

- எஸ்.கௌரிலக்ஷ்மி, ஸ்ரீரங்கம்

அன்பினால் கல்லும் கரையும்!

அன்பினால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை, தொடர்ந்து பலமுறை அவனை அணுகி மிகுந்த பரிவோடு புத்தி சொல்ல முயற்சி செய். முதல் இரண்டு மூன்று முறைகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சியில் உன் வழிக்கு வருவான். அன்பினால் கல்லும் கரையும். அவன் கண்ணில் படும்படி விவேகானந்தர் புத்தகங்கள், நீதிக் கதைகளை எடுத்து வை. சுலபமாக உன் வழிக்கு அவன் வர வாழ்த்துகள்.

- பி.கஸ்தூரி, வந்தவாசி