மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி-259

நிம்மதியைப் பறித்த கணவனின் காதலி !

வாசகிகள் பக்கம்

'கையைச் சுடும்' என்று சொன்னாலும், தீயைத் தொடும் பிள்ளைபோல், பிடிவாதமாகக் கிடக்கும் என் மனம்தான், என் பிரச்னை!

எனக்குக் காதல் திருமணம். நானும் அவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்களை மீறி திருமணம் செய்துகொண்டோம். இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட எங்கள் குடும்பங்களிடம் தொடர்பு எதுவும் இல்லாமல்... எனக்கு அவர், அவருக்கு நான் என்றே வாழ்கிறோம்... இல்லை, வாழ்ந்து வந்தோம் - அந்த எஸ்.எம்.எஸ். வாசகங்களை நான் பார்த்த நாள் வரை.

என் டைரி-259
##~##

என் கணவரின் மொபைலை அன்று எதார்த்தமாக எடுத்து பார்த்தபோது, அவருக்கு ஒரு பெண் தொடர்ந்து அனுப்பி இருந்த 'ரொமான்டிக் மெஸேஜ்’களும், அவற்றுக்கு இவர் அனுப்பி இருந்த 'ரிப்ளை’களும் என் உயிரைத் திடுக்கிட வைத்தன. பிறகு, அந்தப் பெண்ணுக்கு கால் செய்து, அவளை நேராகச் சென்று பார்த்தேன். ''அவர் திருமணமானவர். நான்தான் அவர் மனைவி. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் உன்னை ஏமாற்றியதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். விலகிச் சென்றுவிடு...'' என்றேன். அவள் பதில் என்னை உறைய வைத்தது. ''எனக்கு எல்லாம் தெரியும். அவரால் உங்களையும், குழந்தைகளையும் விட்டு இருக்க முடியாது. அதேபோல என்னை விட்டும் இருக்க முடியாது. எனவே, இருவரும் அவருடன் வாழ்வோம்'' என்றாள் திடமாக.

வீடு திரும்பிய நான், கணவரிடம் சண்டையிட்டு, அழுது ஓய்ந்து, ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டேன். அதில் என் கணவர் மனம் மாறினார். அந்தப் பெண்ணும் ''இனி நான் உங்கள் வாழ்க்கையில் வரமாட்டேன். ஸாரி'' என்று என்னிடம் மன்னிப்பு கேட்டு, வேறு ஊருக்குச் சென்றுவிட்டாள். முன்போலவே என் மீது அன்பாக இருக்கிறார் என் கணவர். ஆனால், நான்தான் நிம்மதியாக இல்லை.

என் கணவர் தவறை உணர்ந்து திருந்திவிட்டார் என்பது என் புத்திக்குத் தெரிகிறது. ஆனால், என் மனமோ, 'இந்த அன்பு போலியானது. நீ மீண்டும் ஏமாற்றப்படுகிறாய்...’ என்று என்னை விரட்டுகிறது. விளைவு, தினமும் அவரை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறேன். திடீரென அவர் அலுவலகத்துக்குச் சென்று, அவர் அங்குதான் இருக்கிறாரா என்று செக் செய்கிறேன். வீட்டுக்கு வர அரை மணி நேரம் தாமதமானாலும், கோபத்தில் தகிக்கிறேன். அவருக்குத் தெரியாமல் அவர் மொபைலை எடுத்து, மெஸேஜ், கால்ஸ் பார்க்கிறேன். மொத்தத்தில், நிம்மதியின்றித் தவிக்கிறேன். என் கணவரின் நிம்மதியையும் பறிக்கிறேன். அதற்காக, என் கணவரை முழுதாக நம்பி, மீண்டும் ஒரு துரோகத்தைச் சந்திக்கும் வலுவும் எனக்கு இல்லை.

இந்த மனப்போராட்டத்தில் இருந்து எப்படி மீள்வது நான்?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி-259

100

என் டைரி 258-ன் சுருக்கம்

என் டைரி-259

''இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்... படிக்க வைத்து, திருமணம் முடித்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் முழுமையாக செய்து முடித்துவிட்டோம் நானும் என் கணவரும். ஆனால், எங்களுக்கென எதையும் சேர்த்து வைக்காமல், பிள்ளைகளையே நம்பியிருந்ததால், இந்த 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது வேதனையில் வாடுகிறோம். மகன்கள் இருவரும் மனைவிமார்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடைசி மகள் வீட்டில்தான் காலம் தள்ளி வருகிறோம். என்றாலும், மகன்கள் வீட்டில்தான் உயிர் போக வேண்டும் என்று எங்கள் மனம் ஏங்குகிறது. வயதானவளுக்கு வழி காட்டுங்களேன்.'

வாசகிகளின் ரியாக்ஷன்

சட்டத்தை நீட்டுங்கள்... சரிப்பட்டு வரும்!

'பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு!’ என்பதை அறியாதவர்களா நீங்கள்? ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கும், பெற்றோரை கடைசி காலத்தில் உதறி தள்ளும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! இத்தனை அனுபவித்த பிறகும் உங்கள் மகன்கள் வீட்டில்தான் உங்கள் உயிர் போக வேண்டும் என்று நினைப்பதுதான் உங்களின் பலவீனம். இந்த நினைப்பை தூக்கி எறிந்துவிட்டு, உரிமையோடு பிள்ளைகளிடம் உங்களுக்கு உதவ சொல்லி, அதன் வழியாக தனியாக வீடு எடுத்து தங்கி நிம்மதியாக இருங்கள். இல்லையா... மனதை கல்லாக்கி கொண்டு, முதியோர்களை பராமரிக்க மறுத்த குற்றத்துக்காக அவர்கள் மீது சட்டப்படி புகார் கொடுக்க இப்போதே புறப்படுங்கள். இதற்காகத்தானே சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது!

- இ.டி.ஹேமமாலினி, சென்னை-53
மற்றும் ஜி.வி.சாந்தி, கீழ் திண்டல்

பிள்ளைகளுக்கு ஏன் தொந்தரவு?

பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து, அவர்களுக்கென ஒரு குடும்பம் அமைந்த பின், அவர்களிடம் அரவணைப்போ அல்லது பணம் சம்பந்தமான உதவிகளோ எதிர்பார்ப்பது தவறு. இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில்... கணவன், மனைவி, குழந்தைகளை பராமரித்துக் கொள்வதே பெரிய சவாலாக உள்ளது. அப்படியிருக்கும்போது உங்களையும் வைத்து கவனிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? தன்னுடன் உங்களை வைத்து கொள்ளத்தான் பிள்ளைகளால் முடியாதே தவிர, பணம் தர மறுப்பார்கள் என்று தோன்றவில்லை. அவர்களிடம் பணம் கேட்டு, தனி வீடு பார்த்து தங்குங்கள். மற்றவர்களுக்கு தொல்லை தரவில்லை என்கிற மன நிம்மதியும் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் இருவரின் மிச்ச சொச்ச வாழ்க்கையும்  இனிதே கழியும். மற்றவர்களை சாராமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

- சுலோசனா சம்பத், கோயம்புத்தூர்

முதியோர் இல்லமே முக்தி தரும்!

மற்ற பிள்ளைகள் எல்லாம் கைவிட்ட நிலையில், உங்கள் இருவரையும் இரண்டாவது மகள் கவனித்துக் கொள்வது பாராட்டத்தக்கது. உங்கள் மாப்பிள்ளை ஒன்றும் தவறாக பேசிவிடவில்லையே... உங்கள் பிள்ளைகள் செய்யும் அநியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இதில் மனதை வருத்திக் கொள்ளும் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். இரண்டாவது மகள் வீட்டில் தங்கியிருப்பது சங்கடமாக இருந்தால், எதைப் பற்றியும் நினைக்காமல், முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடுங்கள். இன்று வசதியானவர்கள் பலரும், வெளிநாட்டுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு, சக முதியோர்களுடன் இப்படித்தால் இல்லங்களில் வசிக்கிறார்கள்... சந்தோஷமாக. அப்படியே நினைத்துக் கொண்டு நீங்களும் நிம்மதியாக காலத்தைத் தள்ளுங்களேன்!

ராஜி குருசுவாமி, சென்னை-88