மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 370

என் டைரி - 370

தங்க கூண்டு... தலைகுனிவு வாழ்க்கை!

ங்களா, கார், அந்தஸ்து, கௌரவம் என்று எங்கள் கூட்டுக் குடும்பத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், எனக்கும் என் கணவருக்கும் வீட்டுக்குள் எந்த மரியாதையும் இல்லாததே என் துன்பம். காரணம், அனைத்தும் என் மாமனாரின் சுயசம்பாத்தியம். ஒரே பையனான என் கணவருக்குத் தொழிலில் எந்த நிர்வாகப் பொறுப்பும் தராமல், ‘உதவி’யாக வைத்திருக்கிறார். என் மாமியார் மற்றும் மூன்று நாத்தனார்களும், ‘இது என் வீட்டுக்காரர் சம்பாத்தியம்’, ‘இது எங்க அப்பா சம்பாத்தியம்’ என்ற கர்வத்தில், என்னையும் என் கணவரையும் துளியும் மதிப்பதில்லை. இப்படி அடிமையாக இருந்து கழிக்கும் வாழ்க்கை, நிகழ்காலத்தை ரணமாக்கிக்கொண்டிருக்கிறது.

என் டைரி - 370

என் கணவர் தனக்கு புது மொபைல் வாங்கவோ, எனக்கு ஒரு புடவை எடுக்கவோ, என் பையனின் டியூஷன் ஃபீஸ் கட்டவோ... குறைந்தபட்சம் காய்கறி வாங்கவோகூட என் மாமனாரிடம் சென்று நிற்க வேண்டும். ‘ஆடம்பரமா செலவு செய்ய, இது கொள்ளையடிச்ச சொத்தில்ல. நான் உழைச்சு சம்பாதிச்சது’ என்று, அடிப்படை செலவுகளுக்குக் கொடுக்கும் பணத்தைகூட இந்த அடிக்கோடு இன்றி கொடுக்க மாட்டார் என் மாமனார். ‘இப்படியே சில்லறை செலவுகளுக்குக்கூட கையேந்த முடியுமா? உங்களை பிசினஸில் ஒரு வேலையாளா நினைச்சாவது மாசச் சம்பளம் கொடுக்கச் சொல்லுங்க உங்கப்பாவை’ என்றால், கணவர் மௌனமாக இருக்கிறார். எங்கே என் கணவர் கைமீறிவிடுவாரோ என்று அவர்கள் செய்யும் தந்திர வேலைகள், அடுத்த கொடுமை. ‘இங்க பாருடா... மாமனாரு காசு கொடுத்தாரு, ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காசு வாங்குனேன்னு ஏதாச்சும் தொழில் ஆரம்பிக்கப் போய், எல்லாத்தையும் தொலைச்சுடாதே! உன் ஜாதகத்துலயே உங்கப்பா நிழல்லதான் நீ நிக்கணும்னு இருக்கு. மீறிப்போனா தெருவுக்கு கொண்டு வந்துருமாம் விதி’ என்றெல்லாம் நாக்கூசாமல் சொல்லி, என் கணவரை சுயசிந்தனை, சுயமுயற்சியற்றவராய் வைத்திருக்கிறார்கள். 

மாமனார், மாமியார், நாத்தனார்கள் என்று அனைவரையும் அனுசரித்துச் செல்லும் என்னையும், என் கணவரையும் உறவுகள், சொந்தங்கள் பாராட்டும் சமயங்களில்கூட, ‘சும்மாவா? எங்களுக்கு அப்புறம் சொத்தெல்லாம் எடுத்துக்கப் போறது அவங்கதானே?’ என்று ஏதோ இந்த சொத்துக்காகவே நாங்கள் அவர்கள் காலடியில் கிடப்பதுபோல பேசி புண்படுத்துவார்கள். இதுபோல் இன்னும் எண்ணற்ற அவமானங்களைக் கடந்துதான் கழிந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.

‘அவங்க சொத்தே நமக்கு வேண்டாம். சுதந்திரமும் சுயகௌரவமும் போதும். விட்டுட்டு வாங்க... மாசச் சம்பளத்துக்கு ரெண்டு பேரும் வேலைக்குப் போவோம். இந்த அடிமை வாழ்க்கையை இன்னும் 20 வருஷத்துக்கு என்னால அனுபவிக்க முடியாது, அதுக்குள்ள நம்ம ஆயுளும் கரைஞ்சிடும்’ என்றால், தன் மனதும் ரணப்பட்டுக் கிடந்தாலும், மகன் என்ற கடமையை மீற முடியாமல் தவிக்கிறார் கணவர். 

இந்தத் தங்கக் கூண்டில் இருந்து நாங்கள் எப்படி விடுதலை பெறுவது..? ஆலோசனை கூறுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 369-ன் சுருக்கம்

என் டைரி - 370

``காதல் திருமணம் செய்துகொண்ட என் பெற்றோர் பிரிந்து வாழ, நானும் என் தங்கைகளும் அப்பாவுடன் இருக்கிறோம். டீக்கடை வைத்திருக்கும் அப்பா எங்களைப் படிக்க வைத்து, ஒரு தாயாக இருந்து வழிநடத்துகிறார். இந்நிலையில், கல்லூரி நண்பன் ஒருவனுடனான நட்பு நாளடைவில் காதலானது. நான் பணியில் சேர்ந்த நிலையில், எனக்கு ஒரு நல்ல வரன் வந்து, என் அப்பாவுக்கு பிடித்துப்போக... என் காதலைச் சொன்னேன். இதைக் கேட்ட அப்பா, ‘காதல் திருமண வாழ்க்கைத் தோல்விக்கு உதாரணமாக நானும் உங்கம்மாவும் இருப்பது போதும்’’ என்கிறார். என் காதலனிடம் சொன்னபோது, `‘உன் அப்பா சொல்றதும் ஒருவிதத்தில் சரிதான்... முடிவு உன்னோடது!’’ என்கிறான்.

தாயுமானவனாக வளர்த்த அப்பாவா... வெற்றிப்படிகளில் என்னை ஏற்றிவிட்ட காதலனா? நான் என்ன செய்வது?!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

காதலனைக் கைப்பிடிக்க போராடு!

ஒருபக்கம் பாசமான அப்பா... மறுபக்கம் நேசமுள்ள காதலன்... நடுவில் திரிசங்கு நிலையில் நீ..! அப்பாவின் காதல் திருமண வாழ்க்கை, தோல்வியில் முடிந்ததால், உன் காதல் திருமணத்தை ஏற்க மறுக்கிறார். எல்லா காதலும் தோல்வியில் முடிவதில்லை என்பதை எடுத்துச் சொல். உன் காதலன் நல்லவராக இருக்கும்பட்சத்தில், இப்போது வேலையில்லாமல் இருந்தாலும், நாளைக்கே நல்லவேலை கிடைத்தால்... உங்கள் திருமணத்துக்குப் பிறகு, உன் தங்கைகளை நல்லவிதமாக கரைசேர்ப்பார். உன் தந்தையை தன் தந்தை போல பார்த்துக் கொள்வார். மொத்தத்தில், உங்கள் வாழ்க்கை வெளிச்சம் பெறும். மனம் காதலனிடம் இருக்கும்போது, அப்பா சொல்பவரைக் கைப்பிடித்தால், உன் வாழ்க்கை என்னவாகும்? ஆகவே, எல்லாவற்றையும் எடுத்துக் கூறி, அப்பா மனதை மாற்று. ஆல் தி பெஸ்ட்!

- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்

பெற்ற மனதை மதித்து நடந்துகொள்!

 உன்னை வளர்த்து படிக்க வைத்தது உன் தந்தை; வேலை கிடைக்க உதவியதோ காதலர். அப்படிப்பட்ட உன் காதலர் நல்ல மனம் படைத்தவர் என்பதை உன் தந்தையிடம் சொல்லி அவர் சம்மதத்தோடு காதலனை மணந்துகொள்; ெபற்ற மனம் வாழ்த்தும்.

 - சி.மலர்விழி, கரூர்

காதலை கெட்ட கனவாக மறந்துவிடு!

நீ வாழ்வில் சறுக்கிவிட்டால், உன்னைப் பற்றிய கனவுக்கோட்டை தூளாகிவிடும் என்பதால், உன் அப்பாவை நினைத்துப் பார். பெண் பிள்ளைகளுக்காக இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் கண்ணியமாக உங்களை வளர்த்த அப்பாவின் தியாகத்துக்கு, நீ உன் நிரந்தர முடிவெடுக்க இயலாத காதலையும், காதலனையும் தியாகம் செய்வதுதான் சரி. அந்தக் காதலை (கானலை) கெட்ட கனவாக நினைத்து மறந்து, அப்பாவிடம் உன் திருமண வாழ்வுக்கு சம்மதம் தெரிவித்துவிடு! உன் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்!

- வி.ஸ்ரீவித்யா, நங்கநல்லூர்