தோழி வேடத்தில் வந்த துரோகி!
வாசகிகள் பக்கம்

'நெஞ்சம் நெருங்கிய நட்பு' என்று நினைத்து நான் உருகினேன். ஆனால், திட்டமிட்டு என்னை சதிவலையில் சிக்க வைத்திருக் கிறாள், 'தோழி' என்றபடி என்னிடம் பழகியவள். இப்போது துரோகத்தின் அனலில் துடிக்கிறேன் நான்.
சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிற எனக்கு, சில மாதங்களுக்கு முன், அறிமுகமில்லாத ஒரு மொபைல் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தவறுதலாக ராங் கால் செய்ததற்காக தன்மை யாக மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண்ணின் பக்குவம் எனக்குப் பிடித்துப் போக, 'எங்கே இருக்கீங்க..?’, 'என்ன வேலை பார்க்கறீங்க..?’ என்று தொடர்ந்தது எங்கள் பேச்சு. இருவருமே பரஸ்பர விவரங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தோழிகளாகவும் மாறிப்போனோம். அத்தனை சீக்கிரமாக 'உயிர்த் தோழி' என்றும் ஆகிப்போனாள்.
##~## |
துக்கம், சந்தோஷம் என மனதின் பக்கங்கள் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்தேன்... என் காதல் உட்பட. அவளும் என்னிடம் ஆத்மார்த்தமாக இருந்தாள். இந்த நட்பு பந்தத்தில் இறுகி இருந்த நான், என் காதலன் என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை தாமதமாகத்தான் உணர்ந்தேன். காரணம் புரியாமல், அதையும் என் தோழியிடமே பகிர்ந்து, புலம்பினேன். ''நீ இல்லாமல் அவனால் வாழ முடியும்னா, அவன் இல்லாமலும் உன்னால் வாழமுடியும். அவனை விட்டுடு!'' என்றாள். ஆனால், அது எனக்குச் சுலபமாக இல்லை. இன்னொரு பக்கம் என் தோழியோ, 'அவன் கெட்டவன்' என்பதையே என்னிடம் மீண்டும் மீண்டும் அழுந்த உணர்த்துவதில் குறியாக இருந்தாள்.
இந்நிலையில்தான் ரெஸ்டாரன்ட் ஒன்றில் என் தோழியும், என் காதலனும் சந்தித்ததைப் பார்த்தேன். என்ன நடக்கிறது என்று புரியாமல், என் காதலனிடமே கேட்டேன். அவர்களின் நாடகத்தில் நான் கோமாளிப் பாத்திரம் ஆகியிருந்தது, எனக்குத் தெரியவந்தது.
என் காதலனும், தோழியும் ஏற்கெனவே காதலித்தவர்கள். இருவருக்குள்ளும் சண்டை வந்து இடையில் பிரிந்து இருக்கிறார்கள். அப்போதுதான் அவன் என்னைக் காதலித்து இருக்கிறான். மீண்டும் அவனைச் சந்தித்தவள், தான் திருந்திவிட்டதாகவும், அவனைப் பிரிந்த வருத்தத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறி கண்ணீர் வடிக்க, அவனும் மனம் மாறியிருக்கிறான். இவர்களுக்கு இடையில் நான் சிக்கிக் கொண்டிருக்க, ''நீ கவலைப்படாதே. அவகிட்ட ஃப்ரெண்டாகி, அவள் உன்னை மறக்கும் அளவுக்கு செய்கிறேன்!'' என்று உறுதிகொடுத்துதான் என்னிடம் வந்திருக்கிறாள் 'ராங் கால்’ ரூபத்தில்!
இப்போது அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், அணு அணுவாகச் சாகிறேன் நான். காரணம், என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் தோல்வி, துரோகம் இது. அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று கொப்புளிக்கும் கோபத்தில், கெட்டவள் ஆகிவிடுவேனோ என்று எனக்கே அச்சமாக இருக்கிறது.
எப்படி மீள நான்..?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 260-ன் சுருக்கம்

''பிரபல கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரியும் எனக்கு, வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வகுப்பில் பாடம் நடத்தும்போது என் உடல் வாகை பலவிதங்களில் மொபைலில் ஒரு மாணவன் படம் பிடித்த விஷயம்... என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பிரின்ஸிபாலிடம் முறையிட்ட பிறகு, படங்களை டெலிட் செய்ய வைத்ததோடு... அவனை ஒரு வாரம் சஸ்பெண்டும் செய்தார். விஷயம் கல்லூரியில் பரவ, எதிரில் வரும் மாணவர்கள் பலரும் மொபைலை வைத்து படமெடுப்பதுபோல பயமுறுத்துகிறார்கள். அப்பாவின் சொற்ப ஓய்வூதியமும்... எனக்கான வரன் தேடலும்... கல்லூரி வேலையை கைவிட முடியாமல் தடுக்கின்றன. கூனிக் குறுகிப் போயிருக்கும் எனக்கு ஏதேனும் வழி சொல்லுங்களேன் தோழிகளே!''
வாசகிகளின் ரியாக்ஷன்...
உன் நடை கண்டு அவர்கள் அடங்க வேண்டும்!
கல்விக் கூடங்களில் மொபைல் போன் உபயோகிப்பது தவறு. இதில், உன்னை விதம்விதமாக போட்டோ எடுத்தது அதைவிட தவறு. இவை, நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களே! அத்தகைய தண்டனையையும் அந்த மாணவனுக்கு வாங்கிக் கொடுத்து விட்டாய். இத்தோடு முடிந்தது... பிரச்னை. அடுத்தகட்டமாக மற்ற மாணவர்கள் 'டீஸ்' செய்கிறார்கள் என்றால்... 'இதற்கும் தண்டனை உண்டு... நீங்களும் சஸ்பெண்ட் ஆகணுமா?’ என்று அதிரடியாகவே கேள்.
பேராசிரியை எனும் பதவியில் இருக்கும் நீ, அந்தப் பதவிக்கே உரிய அதிகாரத்தோடு நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, 'பெண்' என்பதாக நினைத்துக் கொண்டு கூனிக்குறுகுவதுதான் பிரச்னைக்கு காரணமே! சொல்லப் போனால்... இதெல்லாம் பிசாத்து பிரச்னைகள். படித்த பெண்ணான உனக்கே இதைஎல்லாம் சமாளிக்கத் தெரியவில்லை என்றால்... நாளைக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எல்லாம் எப்படி சமாளிப்பாய்? இந்த நிமிடத்திலிருந்து மிடுக்கான ஒரு பேராசிரியையாக கல்லூரிக்குள் தைரியமாக அடியெடுத்து வை! உன்னுடைய நடை கண்டு... அனைவருமே அடங்கி ஒடுங்குவார்கள்!
- யோ.ஜெயந்தி, கோவை
சினிமா தலைமுறையை சீண்டிவிடாதே!
பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காதது மாணவப் பருவம். உன்னை போட்டோ பிடித்தவன்கூட அப்படித்தான் நடந்து கொண் டிருப்பான் என நினைக்கிறேன். இந்த விஷயத்தை நீயே கையில் எடுத்துக் கொண்டு கடுமையாக கண்டித்து, இதன் அடுத்தகட்டமாக என்னவெல் லாம் தண்டனைகள் கிடைக்கும் என்பதை அவனுக்கு உணர்த்தியிருந்தால்... நிச்சயமாக உன் மீது மொத்த வகுப்புக்குமே... ஏன், கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்குமேகூட பயம் வந்திருக்கும். விஷயத்தை மட்டும், ஒரு வார்த்தைக்காக பிரின்ஸிபாலிடம் சொல்லி வைத்திருக்கலாம். அதைவிடுத்து, சஸ்பெண்ட் வரை சென்றது... 'பழி வாங்க வேண்டும்' என்கிற உணர்ச்சியைத்தான் மாணவர்கள் மனதில் ஏற்படுத்திவிடும். காரணம்... அத்தகைய சினிமாக்களையும் சீரியல்களையும் பார்த்துத்தானே வளர்ந்து கொண்டிருக்கிறது இன்றைய மாணவ தலைமுறை! அதன் எதிரொலிதான்... மொபைலைக் காட்டி உன்னை பயமுறுத்துவது. இதற்குப் பிறகும், பிரின்ஸிபாலைக் காட்டி பயமுறுத்தாமல்... நீயே மாணவர்களிடம் தைரியமாக பேசு. நீயே பிரச்னைக்கு தீர்வுகளை காண்.
- சதிரா, மன்னார்குடி
இஷ்டமில்லையென்றால்... இடம் மாறு!
மடியில் கனமிருந்தால்தானே... வழியில் பயம் வர வேண்டும்? உன் மீது தவறு இல்லாதபோது எதற்காக பயந்து நடுங்குகிறாய்? சமுதாயத்தில் பலவிதங்களில் பெண்களுக்கு கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அதில் இருந்து விடுபடும் மந்திரத்தை கற்றுக்கொள். பிரச்னைகளின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள். பயந்து ஓடினால், பிரச்னைகளும் துரத்திக் கொண்டேதான் வரும். என்னதான் தைரியத்தை வரவழைத்தாலும், அந்தக் கல்லூரியில் வேலை பார்க்க பிடிக்கவில்லை என்றால், வேறு கல்லூரி... அல்லது வேறு வேலைகளுக்கு முயற்சி செய்து உடனடியாக அங்கே போய் விடு. அதைவிடுத்து, மனதை அலைபாயவிட்டுக் கொண்டே இருந்தால், காலம்தான் கரையும்... கவலைகள் தீரவே தீராது!
- ரஜினி பாலசுப்ரமணியம், சென்னை-91