மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 373

என் டைரி - 373
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 373

என் டைரி - 373

கசந்துபோன  கனவு வாழ்க்கை!

நான் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியை. மாலை நேரங்களில் நூலகத்துக்குச் செல்வது வழக்கம். அங்கு, சிவில் தேர்வுகளுக்குத் தயார்செய்துகொண்டிருந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. நட்பு, காதலானது. வீட்டை எதிர்த்து அவரைத் திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த சில நாட்களில், தேர்வுக்குத் தயாராவதை நிறுத்திவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என் கணவர். அவருடைய வீடு, ஒரு கூட்டுக் குடும்பம். அத்தனை பேரும் என்னைக் கொண்டாடினார்கள். ஒரு வருடத்தில் எனக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்க, வாழ்க்கை இன்பமயமாக இருந்தது. ஆனால், என் கணவருக்கு என் மீதான அன்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக உணர்ந்தேன். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சண்டை, வெறுப்பு என்று அழவைத்தார்.

காதல் கணவரின் குணம் மாறியதற்கான காரணத்தை அறிந்தபோது சுக்குநூறாகிப்போனேன். `‘காதலிச்ச பொண்ணை நல்லா பாத்துக்கணுமேனு, என் கனவைத் தொலைச்சுட்டு வேலையில் சேர்ந்தேன். என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறதால இப்போ என் வீட்டுலயே எல்லோரும் உன்னைதான் கொண்டாடுறாங்க, என்னை மதிக்கிறதில்லை. ‘பொண்டாட்டி புரொஃபசர் வேலைக்குப் போகுது; நீ பேருக்கு ஒரு வேலைக்குப் போற! அதிர்ஷ்டம்டா உனக்கு’னு என் ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுறாங்க. இப்போ எனக்கு வெளிய போகவே அசிங்கமா இருக்கு’’ என்று அவர் வெடித்தபோதுதான், அவரின் தாழ்வுமனப்பான்மை புரிந்தது.

என் டைரி - 373

‘`இப்போகூட நீங்க வேலையை விட்டுட்டு பரீட்சை எழுதுங்க’' என்றால், `‘என் சம்பளத்துல நீ படி, நான் உன்னையும் குடும்பத்தையும் பார்த்துக்கிறேன்னு சொல்றியா?’’ என்று அதற்கும் கோபப்பட்டவரின் குணம், நாளாக ஆக, தரம் குறைந்துகொண்டே வந்தது. என்னை வேலையை விடச் சொன்னார். அவரின் சொற்ப சம்பாத்தியம் குடும்பத்துக்குப் போதாது என்பதால் நான் மறுக்க, இன்னும் மூர்க்கமானார். ஒருநாள் என் சான்றிதழ்களை எடுத்துக் கிழிக்கப்போகும் அளவுக்குச் சென்றவர், `‘நீ வேலைக்குப் போனா நான் தற்கொலை பண்ணிப்பேன்’’ என்று இப்போது மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

நான் படும் கஷ்டங்களை என் தோழி மூலமாக அறிந்த என் பெற்றோர், `‘அவனை விவாகரத்து பண்ணிட்டு குழந்தையைத் தூக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு. நாங்க பார்த்துக்கிறோம். இல்லைன்னா ஆயுளுக்கும் இந்தக் கொடுமையை நீ அனுபவிக்கணும். இப்போவாவது நாங்க சொல்றதைக் கேளு’’ என்கிறார்கள்.

என் பிரச்னையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... தீர்வு கூறுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 372-ன் சுருக்கம்

என் டைரி - 373

``எங்கள் வீட்டில் நான்கு பெண் பிள்ளைகள். நான்தான் கடைக்குட்டி. அப்பா வசதியானவர். என்றாலும், பெண்களுக்கு மணமுடித்த பிறகு, அப்பாவின் பணம் கணிசமாகக் கரைந்திருந்தது. திருமணத்துக்குப் பின்னர் பண்டிகளுக்கு கைநிறைய சீர் செய்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், மிச்சமிருந்த பணத்தில் பெரும்பகுதி வைத்தியத்துக்காக கரைந்தும், அவரைக் கப்பாற்ற முடியவில்லை. என் பிறந்த வீட்டினர் அதற்குப் பிறகும் சீரை எதிர்பார்த்தனர். என் அம்மா சொந்த வீட்டை விற்று பணத்தை எனக்கும், என் அக்காக்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். இப்போதுகூட என் புகுந்த வீட்டினர் சீர் கேட்க சொல்கின்றனர். அம்மாவால் முடியாவிட்டாலும், என்னைவிட நல்ல வசதியுடன் இருக்கும் அக்காக்கள் செய்யட்டும் என்கின்றனர். `அது சகோதரிகளுக்கிடையே உள்ள அன்பைக் கெடுத்து, என் சுயமரியாதையை சாகடித்துவிடும்' என்று பதறுகிறது என் உள்ளம். என் புகுந்த வீட்டினரை திருத்துவது எப்படி?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

நயமாக எடுத்துச் சொல்!

உன் கணவரிடமும் வீட்டாரிடமும் மனம் விட்டுப் பேசு. `அப்பா இருந்தபோது வேறு... இப்போது நிலைமை வேறு' என்பதை எடுத்துக் கூறு. `பெண்ணைப் பெற்றவர்கள் பணங்காய்ச்சி மரம் இல்லை' என்று உறைக்கும்படி கூறு. `நம்மிடம் இருப்பதைக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை' என்று நயம்பட குரல் கொடு. நிச்சயம் ஏற்பார்கள்.

- ஒய்.ஜேனட், கோவை

புரட்சியில் இறங்கு!

பெற்றோர்களிடம் பிடுங்கியது போக, உடன்பிறப்புகளிடம் இருந்து எதிர்பார்க்கும் உனது புகுந்த வீட்டாரின் கொடுமை, உச்சபட்ச கொடுமை. இனியும் தாமதிக்காதே... தயங்காதே! நல்லதொரு பெண் வக்கீலிடம் ஆலோசனை கேள். பொறுமையில் கிடைக்காதது, புரட்சியில் கிடைக்கும்... வாழ்த்துகள்!

- ஆர்.சுகன்யா, மதுரை

அக்கிரமத்துக்கு துணை போகாதே!

கணவனை இழந்து தனி மரமாக நிற்கும் உன் தாயிடமும், புகுந்த வீட்டிலிருக்கும் உன் தமக்கைகளிடமும் சீர் எதிர்பார்ப்பது மனிதாபிமானமற்ற செயல். உன் கணவர் வீட்டினரின் அந்தச் சீரற்ற விஷயத்துக்கு ஒரு நாளும் துணை போகாதே! கேட்டு கேட்டு ஓயட்டும். நீ அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விட்டுவிடு. காலப்போக்கில் எல்லாம் சரியாகும்.

- தவமணி கோவிந்தராஜன், சென்னை-13