மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 374

என் டைரி - 374
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 374

மன்னிக்க வேண்டுகிறேன்... அன்புக்கு ஏங்குகிறேன்!

சாதாரண விவசாயியான என் அப்பா என்னையும், என் தம்பி, தங்கையையும் பாசத்தில் குறைவில்லாமல் வளர்த்தார். அதிலும் மூத்த மகளான என்னை வீட்டின் இளவரசியாக கொண்டாடுவார்.

எங்கள் வீட்டுக்கு சில வீடுகள் தள்ளியிருந்த ஒரு குடும்பத்துக்கும், எங்களுக்கும் ஏற்பட்ட இடப்பிரச்னை ஒரு கட்டத்தில் உச்சத்துக்கு செல்ல, ஊர் மக்கள் முன்னிலையில் என் அப்பாவை அவர்கள் கைநீட்டி அடித்துவிட்டார்கள். அந்தச் சம்பவத்தால் கூனிக் குறுகி போன அப்பாவை அதிலிருந்து மீட்டு கொண்டுவர பாடுபட்டோம். இந்நிலையில், அந்த வீட்டுப் பையனுக்கும் எனக்கும் காதல் மலர்ந்ததுதான் விதியின் விளையாட்டு. ‘இது சரிப்பட்டு வருமா?’ என்று ஆரம்பத்தில் யோசித்த நாங்கள், பின்னர், ‘நம் திருமணத்தாலேயே இரண்டு குடும்பங்களும் சேர வாய்ப்புள்ளது’ என்று சுயநலத்துடன் எங்களை நாங்களே சமாதானப்படுத்தி, வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டோம்.

என் புகுந்த வீட்டில் என்னை மனமார ஏற்றுக்கொண்டனர். விஷயம் கேள்விப்பட்ட என் அப்பாவோ, ‘என் பொண்ணு செத்துப்போயிட்டா’ என்று என்னைத் தலைமுழுகினார். என் மேல் கோபத்தில் இருந்த என் குடும்பத்தினர் பிறகு சமாதானமாகி அப்பாவுக்குத் தெரியாமல் என்னைச் சந்தித்துப் பேசுவார்கள்.

என் டைரி - 374

வருடங்கள் ஓட... எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும், அப்பா வீட்டுக்குத் தூக்கிச் செல்வேன். `‘என்னை அவமானப்படுத்தின குடும்பத்துல சேர்ந்துட்டு மேலும் மேலும் அவமானப்படுத்துற அவ என் மகளே இல்ல... எதுக்கு இங்க வந்தா? வெளிய போகச் சொல்லு’’ என்று அப்பா கர்ஜிக்க, நானும் என் கணவரும் அவமானத்துடன் திரும்புவோம். ஒரே தெருவில் வசித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும், என் அப்பாவின் கோபம் மட்டும் தணியவே இல்லை. அவர் தெருவில் போகும்போதெல்லாம் ‘தாத்தா தாத்தா’ என்று அழைக்கும் பேரன், பேத்திகளைக்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். அப்போதெல்லாம் ‘இந்தளவுக்கு அவர் மனசை காயப்படுத்திட்டேனே’ என்று உள்ளுக்குள் அழுவேன் நான்.

என் பிறந்த வீடு, புகுந்த வீடு இருக்கும் அதே தெருவில் நானும் என் கணவரும் புதிதாக ஒரு வீடு கட்டினோம். கிரகப்பிரவேசத்துக்கு அப்பாவை அழைக்கப் போனோம். இம்முறையும் அவமானம். என் கணவர், `‘உனக்கு என்ன குறை... உங்கப்பாவை இன்னும் ஏன் கெஞ்சிக்கிட்டு இருக்க? இன்னொரு முறை இப்படி என்னால அவமானப்பட முடியாது!’’ என்று வெடித்துவிட, உடைந்துவிட்டேன் நான்.
எனக்கு என் அப்பா வேண்டும்; என் பிள்ளைகளுக்குத் தாய்வழிச் சொந்தங்கள் வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால், எல்லாம் இருந்தும் இந்த வாழ்க்கை எனக்கு தண்டனைதான். என் துயரம் நீங்க வழி சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 373-ன் சுருக்கம்

``கல்லூரிப் பேராசிரியையான நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த அவர், திருமணத்துக்குப் பிறகு தேர்வுக்குத் தயாராவதை நிறுத்திவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கணவரின் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். அத்தனை பேரும் என்னைக் கொண்டாடினர். ஒரு வருடத்தில் எனக்கு பெண் குழந்தை பிறக்க, வாழ்க்கை இன்பமயமாக இருந்தது. அதன்பிறகு என் கணவருக்கு என் மீதான அன்பு குறைந்தது. சின்ன விஷயங்களுக்குக்கூட சண்டை, வெறுப்பு என்று என்னை அழவைத்தார்.  `என்னைவிட நீ அதிகம் சம்பாதிக்கிறதால என் வீட்டாரே உன்னை கொண்டாடுறாங்க; என்னை மதிக்கிறதில்லை'; ‘புரொஃபசர் பொண்டாட்டி; நீ பேருக்கு வேலைக்குப் போற! அதிர்ஷ்டம்டா உனக்கு’னு ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுறாங்க. எனக்கு அசிங்கமா இருக்கு' என்று அவர் வெடித்தபோது, அவரின் தாழ்வுமனப்பான்மை புரிந்தது.

என் டைரி - 374

`வேலையை விட்டுட்டு பரீட்சை எழுதுங்க’ என்றால், ‘என் சம்பளத்துல நீ படி, நான் உன்னையும் குடும்பத் தையும் பார்த்துக்கிறேன்னு சொல்றியா?’னு கோபப்பட்டவர், திடீரென என்னை வேலையை விடச் சொன்னார். அவரது சம்பாத்தியம் குடும்பத்துக்குப் போதாது என்ப தால் நான் மறுக்க, மூர்க்கமானார். மேலும், அவர் என் சான்றிதழ்களைக் கிழிக்கப்போகும் அளவுக்குச் சென்றதோடு, ‘நீ வேலைக்குப் போனா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்று மிரட்டுகிறார். நான் படும் கஷ்டங்களை  அறிந்த என் பெற் றோர், ‘விவாகரத்து பண்ணிட்டு குழந் தையைத் தூக்கிட்டு வா, நாங்க பார்த்துக்கிறோம்’ என்கிறார்கள். என் பிரச்னைக்கு தீர்வு கூறுங்கள் தோழிகளே..!''

வாசகிகள் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு: `100

எய்த அம்பை திருப்பி விடு!

உன் கணவர் எய்த அம்பை அவர் மீதே திருப்பி விடு. அதாவது, `நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸ் செய்து, நல்ல வேலைக்குச் சென்ற பிறகுதான் நாம் சேர்ந்து வாழமுடியும். அதுவரை நான் என் பெற்றோரிடம் இருக்கிறேன்’’ என்று கூறி தற்காலிக பிரிவு நடவடிக்கையில் இறங்கு. உன் பெற்றோர் சொல்வதைப்போல் விவாகரத்து முடிவு எடுக்காதே. உன் காதல் கணவர் நிச்சயம் உன்னைத் தேடி வருவார்.

- என். தனலட்சுமி, தஞ்சாவூர்

சொந்தக்காலில் நில்!

தாழ்வு மனப்பான்மையின் விளைவாக சண்டை, சான்றிதழ் கிழிப்பு, தற்கொலை மிரட்டல் என தரம் தாழ்ந்த கணவரோடு வாழ்வதைவிட உன் பெற்றோர் சொல்படி சொந்தக் காலில் நின்று உழைத்து, உன் குழந்தையை வளர்ப்பதே சிறந்த முடிவு.

- எஸ்.திலகவதி, குரோம்பேட்டை

கொஞ்ச நாள் பொறு தோழி!

பேராசிரியை வேலையை விட்டுவிடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போன உங்கள் கணவர் இன்று வேலையை விடச் சொல்கிறார். நாளை `என்னைவிட நீ அழகாக இருக்கிறாய், அதனால் ஆசிட் தெளித்துக்கொள்' என்றால்...

செய்யமுடியுமா?! புகுந்த வீடு ஒரு கூட்டுக்குடும்பம் என்பதால் அவர்கள் முயற்சியில் உங்களது கணவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, மாற்றம் காணச் செய்யுங்கள். சிறிது காலம் பொறுமைகொள்ளுங்கள்.

- ஆர்.திவ்யா, பசுமலை