
சைக்கோ காதல்... தடுமாறும் வாழ்க்கை!
நான் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் எதிரில் குடியிருந்த தூரத்து அத்தையின் மகன் என்னை விரும்புவதாகக் கூறினார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. இருவரும் காதலித்தோம். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தபோது, அந்தக் காதலே எனக்குக் கைவிலங்கு ஆனது. ‘இந்த டிரெஸ் போடக் கூடாது’ என்பதில் ஆரம்பித்து, ‘நீ இப்படி தலைசீவுறது எனக்குப் பிடிக்கல’ என்பதுவரை எனக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்தார். நாட்கள் செல்லச் செல்ல, என் விருப்பங்களுக்கு, சுதந்திரத்துக்கு `காதல்' என்ற பெயரில் விலங்கிட்டார்.
ஒரு கட்டத்தில், அவர் சந்தேகங்கள் என்னை நிலைகுலையச் செய்தன. கல்லூரி முடிந்து நான் வீடு திரும்பும்வரை எனக்கே தெரியாமல் என்னைப் பின்தொடர்வது, தோழிகளுடன் காபி ஷாப், மால் என்று நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து கண்காணிப்பது என்று கீழ்த்தரமான வேலைகளில் இறங்கினார். ஒருவேளை ‘நீ அங்கே எல்லாம் போகாதே’ என்று சொல்லியிருந்தாலோ, ‘நானும் உங்கூட வர்றேன்’ என்று சொல்லியிருந்தாலோகூட பரவாயில்லை என்றிருப்பேன். இந்தக் காரணத்தால் எங்களுக்குள் சண்டைகள் பெருகின. காதல் கசக்க, ‘நீயும் வேண்டாம்... உன் லவ்வும் வேண்டாம்’ என்று அவரிடம் இருந்து விலகினேன்.

‘உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கிறதால அப்படி நடந்துக்கிட்டேன், இப்போ நான் மாறிட்டேன்’ என்று என்னை விடாமல் துரத்தினார் அவர். என் தோழிகள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள்வரை அனைவரிடமும் சென்று, நான் அவரை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பினார். கல்லூரி செல்லும் வழியில் என்னிடம் தகராறு செய்தார். ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல் விஷயத்தை நான் என் அப்பாவிடம் சொல்ல, அவர் அத்தை குடும்பத்திடமே நேரடியாக இதுகுறித்துப் பேசி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது நான் படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன். என் அலுவலகத்தில் நண்பராகப் பழகிய ஒருவர், என்னைக் காதலிப்பதாகச் சொல்கிறார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கிறது என்றாலும், பழைய காதல் தந்த அனுபவம் அச்சம்கொள்ளச் செய்கிறது. இவரும் ஒரு `சைக்கோ'வாக இருந்தால் என்ன செய்வது? ஒருவேளை நல்லவராகவே இருந்தாலும், என் முந்தைய காதலும் பிரச்னைகளும் தெரியவந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்? வீட்டில் பார்க்கும் வரனைத் திருமணம் செய்துகொண்டாலும், அவரும் `சைக்கோ'வாகவோ அல்லது அவருக்கு என் பழைய காதல் தெரியவந்தாலோ என்ன செய்வது? இப்படி என் வாழ்க்கையில் எந்த ஆணையும் நினைத்துப்பார்க்க அஞ்சும் அளவுக்கு அனுபவம் பெற்றுவிட்டேன்.
என்ன செய்யட்டும் தோழிகளே?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 374-ன் சுருக்கம்

``விவசாயியான என் அப்பா, மூத்த மகளான என்னை வீட்டின் இளவரசியாக கொண்டாடினார். எங்கள் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும், எங்களுக்கும் ஏற்பட்ட இடப்பிரச்னையின்போது என் அப்பாவை அவர்கள் அடித்துவிடவே, அவர் கூனிக் குறுகிப் போனார். அடுத்து வந்த நாட்களில், அந்த வீட்டுப் பையனுக்கும், எனக்கும் காதல் மலர்ந்தது. ‘திருமணத்துக்குப் பிறகு இரண்டு குடும்பமும் சேரும்’ என்ற நம்பிக்கையில், வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டோம்.
புகுந்த வீட்டார் ஏற்றுக்கொண்டாலும், என் அப்பா என்னைத் தலைமுழுகினார். அப்பாவுக்குத் தெரியாமல் என் குடும்பத்தினர் என்னை சந்தித்துப் பேசுவார்கள். வருடங்கள் ஓட... எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். அப்பா தெருவில் போகும்போது ‘தாத்தா’ என்று அழைக்கும் பேரன், பேத்திகளைக்கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். ‘இந்தளவுக்கு அவர் மனசைக் காயப்படுத்திட்டேனே’ என்று உள்ளுக்குள் அழுவேன். இதற்கிடையே சொந்த வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்காக அப்பாவை அழைக்கப் போனோம். இம்முறையும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். என் கணவர், `‘உங்கப்பாவை இன்னும் ஏன் கெஞ்சிக்கிட்டு இருக்க? இனிமே என்னால அவமானப்பட முடியாது!’’ என்று தீர்மானமாக சொல்ல... உடைந்துவிட்டேன் நான். எனக்கு என் அப்பா வேண்டும்; என் பிள்ளைகளுக்குத் தாய்வழிச் சொந்தங்கள் வேண்டும். அது இல்லை என்றால், எல்லாம் இருந்தும் இந்த வாழ்க்கை எனக்கு வீண். என் துயரம் நீங்க வழி சொல்லுங்கள்!’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100
தாய் வழி உறவுகள் தொடரட்டும்!
உன் அப்பா பேசவில்லை என்பதற்காக தாய் வழி சொந்தங்கள் இல்லை என்றாகிவிடுமா? உன் அப்பாவின் கோபத்தைக் கண்டுகொள்ளாமல் உன் அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளுடன் நல்லுறவு வைத்துக்கொள். நடந்ததை நினைத்து வருந்துவது வீண். உன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து ஆளாக்கு. அப்பா தானாக உன்னைத் தேடி வருவார்.
- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்
வறட்டு கெளரவம் விலகும்!
உன் தந்தைக்கு உன் மீது உள்ள கோபம் தணிந்தாலும், வறட்டு கெளரவம் உன்னிடம் பேச விடாமல் தடுக்கிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். உன் முயற்சியை கைவிடாதே. காலம் கனியும் வரை பொறுமையாக இரு. நல்லதே நடக்கும்.
- அ.மணிமேகலை, அரியலூர்
கொஞ்சம் இடைவெளி விடு!
`தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்... அது பனிக்கட்டியாக மாறும்வரை காத்திருக்கும் பொறுமை இருந்தால்...’ என்றார் கவிப்பேரரசு. இப்போது உன்னையே நம்பி நீ பெற்ற மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். உன் மொத்த கவனத்தையும் கணவர், குழந்தைகள் மேல் செலுத்து. விரும்பிப்போனால் விலகிப்போகும்; விலகிப்போனால் விரும்பிவரும். கொஞ்சம் இடைவெளி விடு. எல்லாம் நலமாய் முடியும்.
- தவமணி கோவிந்தராசன், ராயபுரம்