
உழைப்பை உறிஞ்சும் உறவுகள்!

இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நாத்தனார் பிரச்னை உள்ள பெண்கள் இருக்கத்தான் செய்கிறோம்!
என் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மாமியார், மாமனாருடன் வசித்து வருகிறோம். எங்கள் தெருவுக்கு ஒரு தெரு தள்ளி இருக்கிறது என் நாத்தனார் குடும்பம். அதுதான் எனக்குப் பிரச்னையே..!
நாத்தனார் வீட்டில் வசதிக்குக் குறைவில்லை. இரண்டு குழந்தைகள் அவருக்கு. தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து, தன் அம்மாவைப் பார்த்துவிட்டு கதைபேசிச் செல்வது வாடிக்கை. அப்படி வரும் பொழுதுகளில், அம்மாவும் பெண்ணுமாக சேர்ந்துகொண்டு எனக்குத் தரும் தொந்தரவுகள் நிறைய! என்னைக் கொடுமை செய்கிறார்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால், நுட்பமாக என் உழைப்பை, எங்கள் பொருளாதாரத்தைச் சுரண்டுகிறார்கள்.
கஷ்டப்பட்டு நான் மாவு அரைத்துவைக்க, அதில் பாதியை என் நாத்தனாருக்குக் கொடுத்து அனுப்பிவிடுவது என் மாமியாரின் வாடிக்கை. தினமும் மாலை தன் பிள்ளைகளோடு எங்கள் வீட்டுக்கு வரும் என் நாத்தனாரை, இரவு அவர் கணவர் அழைக்கவரும்போது, ‘அண்ணிக்கும், அண்ணனுக்கும் தோசை ஊத்தும்மா’ என்று மொத்தக் குடும்பத்தின் இரவுச் சாப்பாட்டையும் என்னை வைத்தே முடித்துவிடுவார் என் மாமியார். இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வார இறுதியில், எங்கள் குடும்பத்தை தன் வீட்டுக்கு அழைப்பார் நாத்தனார். ஆனால், அங்கும் நான்தான் சமையல் செய்ய வேண்டும். நாத்தனாரும் மாமியாரும் கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம், என் அம்மா வீட்டுக்கு நான் செல்ல ஆறுமாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி கிடைக்கும் எனக்கு.
எங்கள் வீட்டில் ஸ்வீட் பாக்ஸில் இருந்து புடவை வரை, என்ன வாங்கினாலும் இரண்டாகத்தான் வாங்க வேண்டும். ஒன்று எங்களுக்கு, மற்றொன்று என் நாத்தனாருக்கு. அதேபோல, கோயிலுக்குச் செல்வதில் இருந்து சுற்றுலா செல்வதுவரை, என் நாத்தனார் குடும்பத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும். செலவுகள் அனைத்தையும் என் கணவர்தான் செய்ய வேண்டும்.
என் கணவரிடம் இதுபற்றி முறையிட்டால், ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்கிறார். ஆனால், என்னளவில் இந்தப் பிரச்னை என்னைப் பெரிதாக பாதிக்கிறது. என் கணவர், பிள்ளைகள் மட்டும் என நாங்கள் வெளியே செல்லும் சுதந்திர சந்தோஷம் அந்நியமானது, நாத்தனாருக்கு சமையல் பொடிகள் அரைத்துக்கொடுப்பதில் இருந்து, பல நாட்கள் சமையல் செய்துகொடுப்பதுவரை பறிக்கப்படும் என் உழைப்பும் ஓய்வும், எல்லாவற்றுக்கும் மேலாக, அம்மாவும் பெண்ணும் என்னை அவர்களுக்குப் பணிவிடை செய்யப் பயன்படுத்திக்கொள்வதில் மரித்துக்கொண்டிருக்கும் என் சுயமரியாதை என்று... இவையெல்லாம் இந்த 35 வயதில் மிகுந்த மன அழுத்தத்துக்கு என்னை உள்ளாக்கியிருக்கிறது.
அதற்காக, அம்மாவைப் பார்க்க மகள் வரக்கூடாது என்று சொல்லும் கொடுமைக்கார மருமகள் அல்ல நான். வேண்டுவதெல்லாம், அவர்களின் சுயநலத்துக்கும் சொகுசுக்கும் என்னைப் பயன்படுத்திக்கொள்வதில் இருந்து நான் விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தோழிகளே?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 382-ன் சுருக்கம்

``எனக்கு அன்பான கணவர் கிடைத்தார். ஆறு மாத மணவாழ்க்கையை காதல் பொங்க கடக்கவிருக்கிறேன். கணவரின் பெற்றோர் வரும்போது அவர்களை நான் தாங்குவது, என் வீட்டார் வரும்போது அவர்களை அவர் தாங்குவது என்று நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருகிறோம். நான் ஒரே பெண். என் அப்பா-அம்மாவுக்கு இடையே சம்பிரதாய வாழ்க்கை இருந்ததே தவிர, அன்பு, நெருக்கம் எதுவும் இல்லை. நானும் என் கணவரும் அந்நியோன்யமாக இருக்கும்போது என் அம்மாவுக்கு ஏக்கமும், பொறாமையும் ஏற்படுகிறது. அதனால் அவர் முன் என் கணவரிடம் இருந்து நான் விலகி இருக்கிறேன். ஆனால், என் கணவரின் ரொமான்டிக் போக்கை நிறுத்திவைக்க முடியவில்லை. இதற்காக அம்மாவின் அர்ச்சனையை தாங்கமுடியாது. ‘நீயும் உன் வீட்டுக்காரரும் நாகரிகமாவா நடந்துக்கிறீங்க?’, ‘ஆம்பளையா லட்சணமா வெளியே போகமாட்டாரா அவர்?’ என்று அம்மா கடுமையான வார்த்தைகளை உதிர்ப்பார். சில நேரம் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிட்டேன். ஆனாலும், எப்போது வெடித்துவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது. அதனால், அம்மா என் வீட்டுக்கு வருகிறார் என்றாலே பதறுகிறது எனக்கு. இந்த விநோதமான பிரச்னையை சமாளிக்க யோசனை சொல்லுங்கள்...”
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
நாசூக்கான போக்கு நலம் தரும்!
சராசரி வாழ்வு வாழ்ந்த உன் தாய்க்கு உன் ரொமான்ஸ் வாழ்க்கை பொறாமை தருகிறது. இதைத் தவிர்க்க உன் தாயின் முன் உங்கள் ரொமான்ஸ் காட்சிகள் வேண்டாம். கணவரிடம் இதை நாசூக்காக கூறு. அதன்பிறகு உன் தாய்க்கு உன்னைக் குறை கூறும் எண்ணம் ஏற்படாது. உங்களிடம் சகஜமாக பேசுவார். பிரச்னை தீர்ந்து, மன மகிழ்ச்சி ஏற்பட வாழ்த்துகள்.
- ஒய்.ஜேனட், கோவை
கனிவால் சரிசெய்யுங்கள்!
அந்தக்கால வாழ்க்கையில் தனக்கு கிடைக்காததை மகள்/மருமகள் சர்வ சுதந்திரமாக அனுபவிப்பதைப் பார்த்து சில அம்மாக்களால் தாங்கமுடியாது. தனிமையின் விரக்தியாலும் உங்கள்மேல் எரிச்சல் படலாம். ஆகவே, அவரை வெளியே அழைத்துச் செல்வது, உங்களுடன் அமரவைத்து கலந்து பேசி சிரிப்பது, பாராட்டுவது என்ற வழக்கத்தை நீங்களும் கணவரும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் அம்மாவிடம் மனமாற்றம் ஏற்படும்.
- வரலக்ஷ்மி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்
சற்றே தள்ளிவையுங்கள்!
எதிர்பார்க்கவே முடியாத, மிகவும் வித்தியாசமான பிரச்னைதான் உன்னுடையது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியே சிலர் கட்டுப்பெட்டி ஆகிவிடுவார்கள். அவர்களை அந்தச் சிறையிலிருந்து மீட்பது கடினம். வாழ்க்கையைக் கொண்டாடுவதை, முடிந்தால் அவருக்குக் கற்றுக்கொடுங்கள். இல்லையேல், உங்கள் அம்மாவே ஆனாலும் சற்றே தள்ளிவைத்து உறவாடுங்கள். காலப்போக்கில் அவர் கட்டாயம் மாறுவார். ஆனால், எக்காரணம் கொண்டும் உங்கள் கணவரின் கலகலப்பான போக்கை மாற்றிவிடாதீர்கள்.
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்