மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 387

என் டைரி - 387
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 387

மீண்ட சொர்க்கம்... மீண்டும் விளையாடும் விதி!

நான் வீட்டுக்கு ஒரே பெண். 17 வயதில் ஒரு சாலை விபத்தில் என் தாய், தந்தையை இழந்தேன். சொந்தபந்தங்கள் கூடி 20 வயதில் என் திருமணத்தை நடத்திவைத்தனர். இழந்த இழப்புகளை எல்லாம் தன் அன்பால் ஈடுகட்டினார் என் கணவர். ஆறு வருட மண வாழ்க்கையில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். சொர்க்கமாக இருந்தது வாழ்க்கை.

விதி என்னை விடவில்லை. ஒரு சாலை விபத்தில் என் கணவரும் இறந்துவிட, 26 வயதில் விதவை ஆனேன். ஒரு வருடம் மனநல சிகிச்சை பெறும் அளவுக்கு, அவரின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். காலம் எல்லா காயங்களையும் ஆற்றியது. என் கணவரின் அரசுப் பணி எனக்குக் கிடைக்க, என் பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன்.

என் டைரி - 387

வீடு, வேலை, பிள்ளைகள் தொடர்பான பொறுப்புகள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தபோது, எனக்கென்று சிறப்பாக அன்பு காட்ட யாரும் இல்லை என்ற ஏக்கம் என்னை வாட்டியது. அந்தச் சூழலில்தான், என்னுடன் பணிபுரிபவரின் நட்பும், அக்கறையும் எனக்கு ஆறுதலாக இருந்தது. ஒருகட்டத்தில், அதை உறவாக வலுப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தபோது, என் நிலை உணர்ந்து அதை மறுத்துவிட்டேன். ஆனாலும், என் அன்பை என்னால் அதிக நாள் அவரிடமிருந்து மறைக்க முடியவில்லை. நாங்கள் இருவர் மட்டும் சென்று ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டு, கணவன் - மனைவியாக வாழ ஆரம்பித்தோம். என் பிள்ளைகளும் அவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள, நான்கு வருடங்கள் வாழ்க்கை அழகாக நகர்ந்தது.

இங்கே முக்கியமான ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். அவருக்கு  ஏற்கெனவே திருமணமாகி,  குழந்தைகள் உள்ளனர். மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் வெறுமையில் இருந்த சூழலில்தான், எங்கள் உறவு தளிர்த்தது. எங்கள் திருமணம் பற்றி அவர் மனைவியும் அறிவார். ஆனால், அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் இருந்த பிரச்னைகள் சில உறவினர்களால் இங்கே தீர்த்துவைக்கப்பட, சமீபத்தில் அவர் எங்களை விட்டு அவர் மனைவி, குழந்தைகளிடம் சென்றுவிட்டார். என்னையும், குழந்தைகளையும் அலட்சியப்படுத்துகிறார்.
 
என்னால் அவர் பிரிவைத் தாங்க முடியவில்லை. என் குழந்தைகளைப் பார்க்கும்போது, இன்னும் தவித்துப்போகிறேன். இனி என்ன வழி எங்களுக்கு?!

- பெயர் வெளிட விரும்பாத வாசகி

என் டைரி 386-ன் சுருக்கம்

மகிழ்ச்சியான குடும்பம் என்னுடையது. என்னை இளவரசி போல வளர்த்தார்கள். நான் விருப்பப்பட்டது போல இன்ஜினீயரிங் படிக்கவைத்தார்கள். கடந்த ஆண்டு எங்கள் உறவினர் ஒருவரின் மகள், பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்துகொண்டாள். அதில் இருந்தே, என்னை நினைத்து அச்சப்பட ஆரம்பித்துவிட்டனர் என் பெற்றோர். இறுதியாண்டு படிக்கும்போதே, ‘காதல் நம்மளோட நிம்மதியை பறிச்சிடும்’ என்று போதித்தார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் எனக்கு நல்ல சம்பளத்தில் பெங்களூரில் வேலை கிடைத்தது. ஆனால் என் வீட்டில், நான் வேலைக்குச் செல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருப்பதோடு, அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

‘வேலைக்குப் போவதுதான் என் ஆசை. நான் யாரையும் காதலிக்க மாட்டேன்...’ என்று பக்குவமாக சொல்லியும், அழுது தீர்த்தும் பலன் இல்லை. சமீபத்தில் காதல் போர்வையில் சில பெண்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்ட சம்பவங்களைக் காட்டி பதறுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள், என்னைப்போலவே இன்னும் பல பெண்களின் எதிர்காலத்தை முடக்கிப் போட்டுள்ளது.

பெற்றோரின் அக்கறையை மதித்தாலும், வேலைக்குச் செல்வது சுயமரியாதையை அளிக்கும் என்று நினைக்கிறேன். நான் விரும்பிய எதிர்காலம் அமைய வழி சொல்லுங்கள்!''

என் டைரி - 387

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100


திருமணம் செய்துகொள்!

பெற்றோரின் வேதனை நியாயமானதே! அவர்களின் எண்ணப்படி நல்ல கணவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள். அதற்கு முன்பு வருங்கால கணவரிடம் உன் படிப்புக்குத் தகுந்த வேலையை செய்ய அனுமதி வாங்கிக்கொள். அதனால் பெற்றோருக்கும் நிம்மதி கிடைக்கும்; பட்டப்படிப்பு படித்த நீ சுயமரியாதைக்காக வேலைக்கும் போகலாம். உனது கனவும் நிறைவேறும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை


பொறுமையாக விவாதியுங்கள்!

உங்கள் பெற்றோரின் தடைகளும், பயமும் சமுதாயத்தின் எதிரொலிப்புதான் என்பதை மனதில் வையுங்கள். பெற்றோரிடம் பிடிவாதமின்றி நியாய விவாதம் செய்யுங்கள். காலம் கனியும்.

ஜ.சுகந்தி பிப்ளியா, பெரியகுளம்


நம்பிக்கை கொடு!


உன் மீதுள்ள பிரியத்தினாலேயே உன் குடும்பத்தினருக்கு பயம் வந்துவிட்டது. அதேசமயம், படிப்புக்கேற்ற வேலையில் அமர வேண்டும் என்ற உன் விருப்பமும் நியாயமானதுதான். எனவே, பெற்றோரிடம் விரிவாகப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை கொடு. உன் பெற்றோர் வரன் பார்த்து திருமணம் செய்யும் வரை காத்திரு. உன் விருப்பமும், உன் பெற்றோரின் விருப்பமும் நிறைவேறி, நீ வளமான வாழ்வு காண வாழ்த்துகள்!

- லக்ஷ்மி வாசன், மேற்கு மாம்பலம்