
ஆடம்பரத்தால் அழவைக்கும் மருமகள்!
எங்களுக்கு ஒரே மகன். கண்ணுக்கு அழகாக வளர்த்து அவனுக்குத் திருமணம் முடித்து வைத்தோம். ஆடம்பரத்தில் ஆசை கொண்டிருந்தாள் மருமகள். ‘கூலி வேலை பார்த்த உன் மாமனாரின் கடும் உழைப்பாலும் என் சிக்கனத்தாலும்தான் நாம் இன்று ஒரு ஜவுளிக்கடைக்கு முதலாளியாக இருக்கிறோம். நீயும் கொஞ்சம் ஆடம்பரங்களை குறைத்துக்கொள்’ என்று மருமகளிடம் அறிவுறுத்தியதால், ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு நான் பகையாளி ஆகிப்போனேன். வரவுக்குள் செலவழித்தால்கூட பரவாயில்லை... வரவை மீறியதாக அவள் செலவுகள் சென்றதுதான் பிரச்னை.

என் கணவர் கட்டிய வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் நாங்கள் குடியிருக்க, மாடியில் குடியிருந்தார்கள் மகனும் மருமகளும். பல லட்சங்கள் செலவழித்து அதைப் புதுப்பித்து அலங்காரமாகக் கட்டவேண்டும் என்று மருமகள் சொன்னபோது, ‘இப்போது தொழிலில் கிடைக்கும் லாபத்தில் இது சாத்தியமில்லை. பொறுத்திருந்து செய்யலாம்’ என்றோம் மகனிடம். ஆனால், அவனை கடன் வாங்கி வீட்டைக்கட்ட வைத்தாள் மருமகள். அந்தச் சமயம் பார்த்து எங்கள் தொழிலும் நஷ்டமடைய, அந்த வீட்டையும், எங்கள் ஜவுளிக் கடையையும் விற்கவேண்டிய அளவுக்கு பொருளாதாரம் நெருக்கிவிட்டது.
இப்போது மகனும், மருமகளும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். நானும் என் கணவரும் மற்றொரு வாடகை வீட்டில் வசிக்கிறோம். 73 வயதாகும் என் கணவர், எங்களின் அன்றாடச் செலவுக்கு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். முதலாளியாக பலருக்கும் சம்பளம் கொடுத்த எங்கள் மகன், இன்று மாதச் சம்பளத்துக்கு ஒரு வேலைக்குச் செல்வதைக் காண பெற்ற மனம் பொறுக்கவில்லை. ஆனால், இன்றும் என் மருமகள் வரவுக்குள் செலவழிக்கும் பாடம் கற்கவில்லை. பேரக் குழந்தை களையும் ஆடம்பரமாகவே வளர்க்கிறாள். புதிய பழக்கமாக, தன் செலவுகளுக்காக அங்கும் இங்குமாக கடன் வாங்க ஆரம்பித்திருக்கிறாள்.
இனியும் கடன் தொடர்ந்தால், விற்க என் மகனிடம் எந்தச் சொத்தும் இல்லை. வாழ்ந்துகெட்ட அவமானம், விரக்தி மற்றும் எதிர்காலம் குறித்த பயம் என்று அவன் புலம்பும்போது, அச்சமாக இருக்கிறது எங்களுக்கு. எங்கள் மகனின் வருமானத்துக்குள் குடும்பம் நடத்தி, அவனுக்கு ஆதரவாக இருந்து குடும்பத்தை கரைசேர்க்கும் பொறுப்பு என் மருமகளுக்கு வர, வழி சொல்லுங்கள் மகள்களே!
- பெயர் கூறவிரும்பாத வாசகி
என் டைரி 387-ன் சுருக்கம்
``என் 17 வயதில் ஒரு சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்தேன். ஒரே பெண்ணான எனக்கு 20 வயதில் சொந்தபந்தங்கள் கூடி திருமணம் செய்து வைத்தனர். அன்பான மண வாழ்க்கையில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால், திருமணமான 6-வது வருடத்தில் ஒரு சாலை விபத்தில் கணவர் இறந்துவிட, 26 வயதில் விதவை ஆனேன். மனநல சிகிச்சை பெறும் அளவு, மீள

முடியாமல் தவித்தேன். பிறகு, கணவரின் அரசுப் பணி எனக்குக் கிடைக்க, பிள்ளைகளுக்காக வாழ்ந்தேன். வீடு, வேலை, பிள்ளைகள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க, எனக்கென்று சிறப்பாக அன்பு காட்ட யாரும் இல்லை என்ற ஏக்கம் வாட்டியது. அந்தச் சூழலில் என்னுடன் பணிபுரிபவர் என்மீது நட்பும், அக்கறையும் காட்டினார். அதை உறவாக வலுப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தபோது, நான் மறுத்தேன். ஆனாலும், என் அன்பை அவரிடமிருந்து மறைக்க முடியவில்லை. நாங்கள் இருவர் மட்டும் சென்று ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டு கணவன் - மனைவியாக வாழ்ந்தோம். என் பிள்ளைகளும் அவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள, நான்கு வருடங்கள் ஓடின. அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெறுமையில் இருந்த சூழலில்தான், எங்கள் உறவு துளிர்த்தது. எங்கள் திருமணம் பற்றி அவர் மனைவியும் அறிவார். அடுத்து வந்த நாட்களில், அவர் மனைவிக்கும், அவருக்கும் இருந்த பிரச்னைகள் உறவினர்களால் தீர்த்துவைக்கப்பட, சமீபத்தில் அவர் எங்களை விட்டு அவர் மனைவி, குழந்தைகளிடம் சென்றுவிட்டார். என்னையும், குழந்தைகளையும் அலட்சியப்படுத்துகிறார். என்னால் அவர் பிரிவைத் தாங்க முடியவில்லை. என் குழந்தைகளைப் பார்க்கும்போது, இன்னும் தவித்துப் போகிறேன். இனி நான் என்ன செய்வது?!’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100
இதுவும் கடந்து போகும்!
திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள ஒருவரை கோயிலில் திருமணம் செய்துகொண்டேன் என்கிறபோதே உன்னுடைய அறியாமை தெரிகிறது. எப்படி பார்த்தாலும் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. அவர் பிரிவை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். நடந்தவற்றை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு இனி உன் பிள்ளைகளின் எதிர்காலமே நம் வாழ்க்கை என எண்ணி முழுமையாக மாறும். `இதுவும் கடந்துபோகும்’ என்பதுதான் விதி.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை
அறிவுபூர்வமாக அணுகுங்கள்!
உங்கள் 2-வது கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் அவருக்கு சட்டபூர்வ விவாகரத்து பெறாமல் மணம் புரிந்தது உங்கள் தப்பு. ஆகவே, சட்டப்படி அவர்மேல் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அரசுப்பணியில் இருக்கும் உங்களுக்கும் அதனால் பிரச்னை ஏற்படலாம். இந்த விஷயத்தை அறிவுபூர்வமாக அணுகி, பிள்ளைகளுக்கும் புரியவையுங்கள். காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.
- விஜயலஷ்மி, மதுரை
மகிழ்ச்சி கரை புரளும்!
தாய் தந்தை இழப்பு கணவர் இழப்பு என்று துரத்திய துயரங்களை அனுபவித்துவிட்டாய். இடையில் ஆதரவாக வந்த மனிதர் சட்டப்படி உன்னை மனைவியாக்கவில்லை. மறுபுறம் அம்மனிதர் ஏற்கெனவே மணமானவர். இடையில் வந்த உறவு இடையிலேயே போய்விட்டதென்று எடுத்துக்கொள். இனி பிள்ளைகளுக்காகவே உன் வாழ்க்கை; அவர்களுக்காகவே வாழு. படித்து பெரியவர்களானது குடும்பம் பெருகி மகிழ்ச்சி கரை புரளும்.
- யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்