
என் நினைப்பில் தவறென்ன..?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது எல்லாம் ஹம்பக் என்று நினைக்கிற ரகம் நான். அதனாலேயே வாழ்க்கை சுழற்றிச் சுழற்றியடிக்கிறது. எனக்குத் திருமணம் நடந்ததே 34 வயதில்தான். என்னைவிட கணவர் ஒரு வயதுதான் மூத்தவர். நான் தாய், தந்தை இல்லா பிள்ளை என்று என்னைத் தேடிவந்து பெண் எடுத்தார்கள். நானோ அப்படியெல்லாம் ஃபீல் செய்து வளரவில்லை. சித்தி என்னை இயல்பாக வளர்த்ததால், நான் வித்தியாசமாகவே உணரவில்லை. அதனால், புகுந்த வீட்டினர் என்னிடம் அளவுக்கு மீறி பாசமாக நடந்துகொண்டது என்னை எரிச்சலடைய வைத்தது.

திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே தனிக்குடித்தனம் போக நினைத்தேன். கணவரோ, அவரது தங்கை வீட்டின் அருகில் என்னைக் குடிவைத்தார். அவர்கள் என்னைத் தொந்தரவு எதுவும் செய்யவில்லை. ஆனாலும் எனக்கு அது தனிக்குடித்தனமாகத் தோன்றவில்லை. நான் அவர்கள் குடும்பத்தோடு ஒன்றாமல் இருப்பது அவருக்குப் பிடிக்காமல், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
அவர் தாயை நான் கண்டுகொள்வதில்லை, அவர்கள் குடும்பத்தை மதிப்பதில்லை என்று அவ்வப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்படும். அதனால், அடிக்கடி சித்தி வீட்டில் வந்து தங்கிவிடுவேன். இதற்கிடையே, நான் கர்ப்பமாக... ஆண் குழந்தை பிறந்தது. இப்போது, என் மகனுக்கு இரண்டு வயதாகிறது; இன்னும் சித்தி வீட்டிலேயே இருக்கிறேன்.
என்னை தன்னோடு வரும்படி கணவர் அழைத்தும் நான் போகவில்லை. எனக்கு அவரது சொந்தங்கள் வேண்டாம். நான் அவரோடு தனியாக இருக்கவே விரும்புகிறேன். இதை அவர் எப்போது புரிந்துகொண்டு என்னோடு வருவாரோ, அதுவரை அவரிடம் நான் பேசப்போவதில்லை. இந்த முடிவு எனக்கு தவறாகவும்படவில்லை.
நான், என் கணவர், என் குடும்பம், என் குழந்தை என்று இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன பிரச்னை? எனக்குப் புரியவில்லை. நீங்களாவது நான் நினைப்பது சரியா, அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் கூறவிரும்பாத வாசகி
என் டைரி 388-ன் சுருக்கம்
ஒரே மகன் என்பதால் பாசமாக வளர்த்து அவனுக்குத் திருமணம் முடித்து வைத்தோம். ஆனால், மருமகளுக்கோ ஆடம்பரத்தில் ஆசை. ‘கூலி வேலை பார்த்த உன் மாமனாரின் உழைப்பால் ஒரு ஜவுளிக்கடைக்கு முதலாளியாக இருக்கிறோம். ஆகவே, நீ ஆடம்பரத்தை குறைத்துக்கொள்’ என்று அறிவுறுத்தியதால், மருமகளுக்கு நான் பகையாளி ஆனேன். இதற்கிடையே, என் கணவர் கட்டிய வீட்டை வடிவம் மாற்றி பல லட்சங்கள் செலவழித்து புதுப்பித்து அலங்காரமாகக் கட்டவேண்டும் என்று மருமகள் சொன்னபோது, ‘இப்போது சாத்தியமில்லை. பொறுத் திருந்து செய்யலாம்’ என்றோம் மகனிடம். ஆனால், அவனை கடன் வாங்கி வீட்டைக்கட்ட வைத்தாள் மருமகள். அந்த நேரத்தில், எங்கள் தொழிலும் நஷ்டமடைந்ததால் வீட்டையும், ஜவுளிக் கடையையும் விற்க வேண்டிய அளவுக்கு நெருக்கடி. இப்போது மகனும், மருமகளும் ஒரு வாடகை வீட்டிலும், நானும் என் கணவரும் மற்றொரு வாடகை வீட்டிலும் வசிக்கிறோம். 73 வயதாகும் என் கணவர், அன்றாடச் செலவுக்கு வேலை தேடுகிறார். முதலாளியாக பலருக்கும் சம்பளம் கொடுத்த எங்கள் மகன், இன்று மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்வதைக் காண பெற்ற மனம் பொறுக்கவில்லை. இன்னமும்கூட என் மருமகள் வரவுக்குள் செலவழிப்பதில்லை. புதிய பழக்கமாக, அங்கும் இங்குமாக கடன் வாங்க ஆரம்பித்திருக்கிறாள். இனியும் கடன் தொடர்ந்தால், விற்க எந்தச் சொத்தும் இல்லை. வாழ்ந்துகெட்ட அவமானம், விரக்தி மற்றும் எதிர்காலம் குறித்த பயம் என்று அவன் புலம்பும்போது, அச்சமாக இருக்கிறது. மகன் வருமானத்துக்குள் குடும்பம் நடத்தி, குடும்பத்தை கரைசேர்க்கும் பொறுப்பு என் மருமகளுக்கு வர, வழி சொல்லுங்கள்.

வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100
பொறுமையுடன் இருங்கள்!
அன்புச்சகோதரியே... தங்கள் நிலை புரிகிறது. இது ஆடம்பரத்துக்கு அடிமையாகும் காலமாகிவிட்டது. குடும்பச்சூழல் உணர்ந்து வரவுக்குள் செலவை அடக்கி வாழ்க்கையை சுமுகமாக நடத்திச் செல்லக்கூடியவள் பெண்தான். ஆகவே, ஒரு பெண் மனது வைத்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் நன்றாக ஓடும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் முடியும். அது உங்களால் முடிந்தது; ஏனோ மருமகளால் முடியவில்லை. அதை உங்கள் மருமகள் உணரும் காலம் வெகுவிரைவில் வரும். அவளிடம் கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் அன்பு செலுத்துங்கள்; பலன் கிட்டும்.
- ஆர்.அம்மணி, வடுகப்பட்டி
அறிவுறுத்துங்கள்!
மருமகளுக்குச் சொல்லும் அறிவுரைகூட ஈகோ பிரச்னையால் வீம்பாக விவாதமாகி வீண் சண்டையாகும். ஆனால், மகன் மூலம் மருமகளைக் கட்டுப்படுத்துவது எளிது. சொந்த பங்களா, வியாபாரம் விட்டுவிட்டு மாதச்சம்பளத்துக்கு இறங்கிய பிறகும்... திருந்தவில்லை என்றால் என்ன சொல்வது? மருமகளுக்கு கடன் கொடுப்பவர்களிடம் அவள் வாங்கும் கடனுக்கு அவளே பொறுப்பு என்று சொல்லிவிடுங்கள். மேலும், மகன் மூலம் மருமகளுக்கு அறிவுறுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
- மல்லிகா அன்பழகன், சென்னை
காலம் திருத்திவிடும்!
உங்கள் கதையைப் படித்தபோது முதல் தவறு உங்களுடையது என்றே தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் தொழில் நன்றாக நடந்தபோது சேமிக்கத் தவறிவிட்டீர்கள். அடுத்து நீங்கள் உங்கள் மகனுக்கு திருமணம் பேசியபோது நீங்கள் வசதி படைத்தவர்களாக காண்பித்திருப்பீர்கள். இதுபோன்ற காரணங்களால் உங்கள் மருமகள் அலட்சியமாக வாழ்ந்து இருக்கலாம். உங்கள் மகனாவது மனைவியிடம் எடுத்துச்சொல்லி இருக்க வேண்டும். உங்கள் மருமகள் தானாக திருந்திவிடுவாள். ஆம், தனிக்குடித்தனம் நடத்துவதால் வாழ்க்கை என்ன வென்று அவர்களுக்குப் புரிந்துவிடும். `அடிபட்டவனுக்குத்தான் வலி தெரியும்’, ஆகவே, கவலை வேண்டாம். காலம் அவளைத் திருத்திவிடும்.
- லலிதா காசிராவ், கிருஷ்ணகிரி