மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 390

என் டைரி - 390
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 390

நெருப்பு நிமிடங்கள்... நெருக்குதல் வாழ்க்கை!

ளிய குடும்பப் பின்னணியில் இருந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 26 வயது பெண் நான். குடும்பச் சூழ்நிலையால் பணி மட்டுமே இப்போதைக்கு என்னுடைய பலம். என்னுடைய அலுவலகத் தோழி, மிகவும் பொறுமையானவள்... பயந்த சுபாவம் கொண்டவள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

என் டைரி - 390

இந்த நிலையில் அவள் திடீரென்று  வேலையில் இருந்து நின்றுவிட்டாள். சுறுசுறுப்பாக, ஈடுபாட்டுடன் பணியாற்றியவள், ஏன் வேலையை ராஜினாமா செய்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. மனம் கேட்காமல் அவளை நேரில் சென்று சந்தித்தபோது கதறிவிட்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக எங்களுடைய மேலதிகாரியிடமிருந்து பல்வேறு விதங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள் அவள். அதுபற்றி சகதோழியான என்னிடம்கூட பயம் காரணமாகப் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஹெச்.ஆர் மேனேஜரிடம் இதுபற்றி பேசியிருக்கிறாள். விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்குள் எப்படியோ விஷயம் கசிந்துவிட்டது. இந்த விஷயம் தெரிந்த நண்பர்கள் ‘நெருப்பில்லாமல் புகையுமா’ என்றெல் லாம் அவளுடைய காதுபடவே பேசியுள்ளனர்.  இதற்கு மேல் அலுவலகத் தில் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற நிலைமையிலேயே அவள் வேலையை உதறித் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறாள்.

இந்த அதிர்ச்சியில் இருந்து நான் தெளிவடைவதற் குள்ளாகவே, எனக்கும் அதுபோன்ற தொந்தரவுகள் மேலதிகாரப் பொறுப்பில் இருக்கும் அதே மனிதரால். ஒருபக்கம், துணிந்து சண்டையிட்டுவிடலாம் என்றாலும், என்னையே நம்பியிருக்கும் குடும்பத்தின் நிலை கண்களில் வந்து போகிறது. இந்த வேலையை விட்டுவிட்டால், இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே கடினம். என்னுடைய தோழிகூட இன்னமும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். என்னுடைய வருமானமே நான்கு பேரின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் என்ன செய்வது தோழிகளே?

- பெயர் கூற விரும்பாத வாசகி

என் டைரி 389-ன் சுருக்கம்

``திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நான் நம்புவதில்லை. அதற்கு என் வாழ்க்கையே உதாரணம். என் 34 வயதில் என்னைவிட ஒரு வயது மூத்தவரை திருமணம் செய்தேன். எனக்கு பெற்றோர் இல்லை என்பதாலேயே, என்னைத் தேடிவந்து பெண் எடுத்தார்கள். ஆனால், என் சித்தி என்னை இயல்பாக வளர்த்ததால், எனக்கு எந்த சோக ஃபீலிங்கும் இல்லை. அதனால், புகுந்த வீட்டினர் அதிக பாசமாக நடந்துகொண்டது என்னை எரிச்சலடைய வைத்தது. தனிக்குடித்தனம் போக நான் ஆசைப்பட, கணவரின் தங்கை வீட்டின் அருகில் குடித்தனம் போனோம். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும்கூட, அது எனக்கு தனிக்குடித்தனமாகவே தோன்றவில்லை. அவர்களோடு ஒன்றாமல் இருப்பது அவருக்குப் பிடிக்காமல், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. `அம்மாவை கண்டுகொள்வதில்லை; குடும்பத்தை மதிப்பதில்லை' என்று எங்களுக்குள் பிரச்னை ஏற்படும். அதனால், அடிக்கடி சித்தி வீட்டுக்கு வந்துவிடுவேன். அப்படி ஒருமுறை வந்த எனக்கு, குழந்தை பிறந்து, மகனுக்கு இரண்டு வயதாகியும், சித்தி வீட்டிலேயே இருக்கிறேன். கணவர் அழைத்தும் நான் அவரோடு போகவில்லை. எனக்கு அவரது சொந்தங்கள் இல்லாமல் அவரோடு தனியாக இருக்கவே விரும்புகிறேன். இதை எப்போது புரிந்துகொண்டு என்னோடு வருவாரோ, அதுவரை அவரோடு நான் பேசப்போவதில்லை. இது எனக்கு தவறாகவும்படவில்லை.

கணவர், என் குழந்தையோடு இருக்க நினைப்பதில் என்ன தவறு? நான் நினைப்பது சரியா?''

என் டைரி - 390

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100


நெருங்கிப் பழகு!

உன்னுடைய வாதங்களில் ஒரு சதவிகிதம்கூட நியாயமிருப்பதாக தெரியவில்லை. ஒற்றைப்பிள்ளையாக பிறந்து வளர்ந்ததால், பிறருடன் சகஜமாக ஒட்டி உறவாட முடியாத ஒரு பிரச்னை உன்னிடம் இருக்கிறது. புகுந்த வீட்டில் எல்லோரும் உன்மீது பாசமாக இருப்பது கிடைத்தற்கரிய பேறுதானே? அதைத் தவிர்ப்பது தவறுதானே? எல்லோரிடமும் நெருங்கிப்பழகு. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் பயனும் அழகோ... அழகு!

- அ.யாழினி பர்வதம், சென்னை - 78

உறவுகள் தேவை!

உங்களுக்கு அமைந்ததுபோன்ற அன்பான சொந்தங்கள் இல்லையே என்று ஏங்கித்தவிப்போர் ஏராளமாக இருக்கிறார்கள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரியாது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ பிரச்னை ஏற்பட்டுத் தவிக்கும்போதுதான் சொந்தங்களின் அருமை புரியும். எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு ஆதரவாக உதவிடும் உறவுகள் தேவை. அதற்காகவாவது, உறவுகளோடு பிரியமாக இருப்பதுபோல நடிக்காவது செய்யுங்கள். காலப்போக்கில் அதுவே உங்கள் உண்மையான குணமாக மாறிவிடும்.

- என்.சாந்தினி, மதுரை

வாழ்வைத் தொலைக்காதே!


உனக்கு கிடைத்திருக்கும் நல்ல வாழ்க்கையை அனுபவிக்காமல் வீணாக காலத்தைக் கழிக்கிறாய். உன் கணவரை உருவாக்கி - மனிதனாக்கியவர்களை, நீ வேண்டாம் என்பது மாபெரும் தவறு. உன்னிடம் குடும்ப நலன் இல்லை. சுயநலம்தான் இருக்கிறது. உன் சித்தி வீட்டில் எத்தனை வருடம் இருப்பாய்? உன் மகனின் எதிர்காலம்..? தனித்து கடைசிவரை வாழ முடியுமா? நிறைய பெண்கள் தங்கள் வாழ்வை இப்படித்தான் தொலைத்து நிற்கிறார்கள். இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போதும். கணவன் வீடு சென்று புது வாழ்வு தொடங்கு... எல்லாம் இனிதாகும்!

- இந்திராணி சண்முகம், திருவண்ணாமலை