மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 391

என் டைரி - 391
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 391

நிலை மாறிய மருமகள்... பரிதவிக்கும் மாமியார்!ஓவியம்: பிரேம் டாவின்ஸி

என் டைரி - 391

ங்கள் அன்பு மகன் காதலித்த பெண்ணை, அவன் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தோம். அழகு, மரியாதை கொடுக்கும் பாங்கு என எல்லாவிதத்திலும் எங்களைப் பெருமைப்பட வைத்தாள். எங்கள் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்தாள்.

எல்லாமே நினைத்ததைவிட அற்புதமாக, அழகாக சென்று கொண்டிருந்தது. அதெல்லாம் எங்கள் பேரக்குழந்தையைப் பராமரிப்பதற் காக, அவள் தாய் வீட்டுக்கு செல்லும் வரைதான். யார் கண்பட்டதோ தெரிய வில்லை... முழுதாக மாறிப்போனாள் எங்கள் மருமகள். முதலில் என் மகனிடம் பேசுவதைக் குறைத்தவள், பிறகு அவன் போன் வந்தாலே சொற் களில் கங்குகளைக் கொட்டினாள். அவளுடைய புரியாத இந்த நடவடிக் கையால் குழப்பமான நாங்கள், நேரடியாகவே அவளைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் வந்தது தெரிந்தும் அவள் வீட்டுக் கதவை திறக்க நீண்ட நேரமானது. ‘அவளா அப்படியெல்லாம் நடந்துகொண்டாள்’ என்றே ஜீரணிக்க முடியாத அளவுக்கு எங்களிடம் மோசமாக நடந்துகொண்டாள்.

ஒரு கட்டத்தில் என் மகனிடம் `இனிமே அந்த வீட்டுக்கு வர்ற மாதிரி இல்ல’ என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தவள், அதன்பிறகு போனை அவள் எடுப்பதேயில்லை. அன்பால் கட்டிய எங்கள் கூடு இப்படி சிதறியடிக் கப்பட்டிருக்கிறது என் மருமகளால்.

யார் யாரிடமெல்லாமோ சொல்லி அனுப்பியும் அவள் தன் நிலையில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ள வில்லை. விசாரித்தபோது, அவள் கல்லூரி படிக்கும்போது காதலித்த வன் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் இருப்பதும், ஊர் திரும்பிய அவனோடு வாழ முடிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுபற்றி அவளிடம் கேட்டால், ‘அது என்னோட பெர்சனல், அதைப்பத்தியெல்லாம் பேசாதீங்க’ என்றவள், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாள்.

அன்றிலிருந்து தனக்குள் தன்னை சுருக்கிக்கொண்டவனாக என் மகன் நிலைதடுமாறி நடந்துகொள்கிறான். மனநல மருத்துவரிடம்கூட அழைத்துச் சென்றுவிட்டோம். இதற்கெல்லாம் முடிவுகட்ட, விவாகரத்து வாங்கிவிட்டு, அவனுக்கு வேறொரு திருமணம் செய்யலாம் என யோசித்திருக்கிறோம். எங்கள் முடிவு சரியா? எங்களுக்கு ஆறுதலான வழிகளை சொல்லுங்கள்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 391

என் டைரி 390-ன் சுருக்கம்

``கல்லூரி படிப்பை முடித்ததும் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 26 வயது பெண் நான். குடும்பச் சூழலால் பணி மட்டுமே என்னுடைய பலம். என் அலுவலகத் தோழி ஒருத்தி மிகவும் பொறுமையானவள்... பயந்த சுபாவம் கொண்டவள். அவள் திடீரென்று வேலையில் இருந்து நின்றுவிட்டாள். மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய அவள், ஏன் ராஜினாமா செய்தாள் என்று தெரியாததால் அவளை நேரில் சந்தித்தபோது கதறிவிட்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக எங்கள் அலுவலக மேலதிகாரியால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். அதுபற்றி சகதோழியான என்னிடம்கூட பகிரவில்லை. ஹெச்.ஆர் மேனேஜரிடம் இதுபற்றி பேசியிருக்கிறாள். விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்குள் விஷயம் கசியவே, நண்பர்கள் சிலர் ‘நெருப்பில்லாமல் புகையுமா’ என்று கேலி பேசியுள்ளனர்.  இதனால் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவள் தன் வேலையை உதறித் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறாள்.

இந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள்வதற்குள் எனக்கும் அதே மனிதரால் அதுபோன்ற தொந்தரவுகள் வந்தன. இதை எதிர்த்து சண்டையிடலாம் என்றால் என்னை நம்பியிருக்கும் குடும்பத்தின் நிலை கண்முன் வந்து போகிறது. வேலையை விட்டுவிட்டால், இன்றைக்கு வேலை கிடைப்பதே கடினம். ஏன்... என் தோழிகூட இன்னமும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். எனது வருமானமே என் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுகிறது. இதனால் முடிவெடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன். நான் என்ன செய்வது தோழிகளே?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100


நிம்மதியைக் குலைத்துவிடும்!

பணிபுரியும் பெண்களுக்கு இதுபோன்ற தொல்லைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. நாம் எத்தகைய குடும்பச்சூழலில் இருந்தாலும் இந்த அவலத்தை மட்டும் சகித்துக்கொள்ளவே கூடாது. உடல், மனம் மற்றும் உனது எதிர்கால நிம்மதியை இது குலைத்துவிடும். எனவே, இதுகுறித்து தகுந்த சிலரிடம் ஆலோசனை கேட்டு இத்தகைய அட்டூழியங்களைப் பகிரங்கப் படுத்து. முடிந்தால் உன் தோழியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு புகார் கொடு. தகுந்த முடிவு கிடைக்கும்.

- கு.ஜெயலட்சுமி, அரசரடி

குடும்ப ஆலோசனை தேவை!

ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் களில் பலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. உன் தோழி பற்றிய விவரங்களையும், உன் மேலாளர் பற்றியும் உன் குடும்பத்தினரிடம் எடுத்துக்கூறி அவர்கள்கூறியபடி நடந்துகொள். அதுதான் உனக்கு நல்லது.

- எஸ்.ரேவதி, ஈரோடு

பலவீனத்தை வெளிக்காட்டாதே!

முதலில் நம்மிடம் இருக்கும் குறை, நிறைகளை தெளிவுபடுத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் நம்முடைய பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற மேலதிகாரிகளிடம் முகத்தில் இறுக்கத்தையும் கடுஞ்சொற்களையும் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கனிவும், அன்பும் இவர்களை தவறு செய்யத் தூண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

- கீதா பால்பாண்டியன், ஈஞ்சம்பாக்கம்