மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி -263

இப்படியும் ஒரு பிரச்னை! கணினி வரைகலை: கே.செந்தில்குமார்

வாசகிகள் பக்கம்  

##~##

பெருநகரமொன்றின் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி நாங்கள். பாசமாக எங்களைப் பார்த்துக் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண்தான், இப்போது எங்களின் கவலைக்குக் காரணம்.

ஒரு மகன், ஒரு மகள் என எங்கள் இரு பிள்ளைகளும் மணம் முடித்து, குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, இந்தக் கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு, மாதம் இரு முறை எங்கள் பேரப்பிள்ளைகள் போனில் பேசுவதுதான் ஆறுதல். இந்தச் சமயத்தில்தான் பக்கத்து வீட்டில் இருக்கும் குட்டிப் பெண், எங்கள் வீட்டுக்கு வந்து போவது வாடிக்கையாக, அவளின் சிரிப்பிலும் குறும்பிலும் எங்களின் தனிமை தணிந்தோம்.

அந்தக் குட்டிப் பெண்ணின் அம்மாவும் எங்களிடம் மிகவும் ஆத்மார்த்தமாகப் பழகியது, எங்களுக்கு அனுசரணையாக இருந்தது. ஊருக்கு வெளியில், சுற்றிலும் சுற்றமோ, மற்ற வீடுகளோகூட இல்லாத அந்தச் சூழலில், அன்புக்கும், அவசர உதவிக்கும் அவள் இருக்கிறாள் என்பது, எங்களைத் தைரியப்படுத்தியது. அவளும் எங்களிடம் மிகவும் பாசமாகப் பழகினாள். சமையலில் உதவுவதில் இருந்து, சில மாதங்களுக்கு முன் என் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆனபோது ஒரு மகள் போல கவனித்துக் கொண்டது வரை, எங்களுடன் இருந்தாள் அவள்.

என் டைரி -263

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக இறுகிப் போயிருந்த எங்களின் உறவு, இப்போது தளர்ந்து கிடக்கிறது. காரணம், அவளுக்கும் வேறு ஒரு ஆணுக்கும் இடையே தவறான உறவு இருக்கிறது என்பது, சமீபத்தில் வீதிக்கு வந்த கணவன், மனைவி சண்டையின்போது எங்களுக்குத் தெரியவந்தது. அதிர்ந்துவிட்டோம். அதிலிருந்து அவளிடம் எங்களால் அதே அன்பைத் தொடர முடியவில்லை. ஆனால், எப்போதும்போல எங்களிடம் அன்பு செலுத்தியவள், நாங்கள் விரும்பவில்லை என்பது புரிந்து, விலகிவிட்டாள்.

என்றாலும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இத்தனை நாள் அவள் எங்களுக்குச் செய்த உதவியும், கொட்டிய பாசமும், நினைவில் சுட்டுக்கொண்டே இருக்கிறது. நன்றி இல்லாமல் அவளை ஒதுக்கிவிட்டோமோ என்று குழம்பும் மனம், 'கெட்டவளின் சகவாசம் வேண்டாம்' என்று மறுநிமிடம் சமாதானமடைகிறது. வெளிநாட்டில் இருக்கும் என் மகளோ, ''அது அவளுக்கும் அவ புருஷனுக்கும் இடைப்பட்ட விஷயம். உங்களைப் பொறுத்தவரை அவ பெறாத மகளாத்தானே நடந்துக்கிட்டா..? மனுஷங்களை சம்பாதிக்கிறதுதான் பெரிய சொத்து. அதுவும் தனியா இருக்கற உங்களுக்கு, அவளும் அவ அன்பும் கண்டிப்பா வேணும்'' என்கிறாள்.

சுயநலத்துக்காக, அவளை ஏற்றுக்கொள்வதா..? வேண்டாமா..?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 என் டைரி 262ன்  சுருக்கம்

''என்னவர் ஜாலி டைப் என்பதால், அவருடைய முதல் காதல் துவங்கி, இன்று லுக் விடும் பெண்களின் கதை வரை எல்லாமே எனக்கு அத்துபடி. சமீபத்தில் அவருடைய கல்லூரி கால டைரியைப் படித்தபோது... காதலித்த பெண், நெருக்கமான தருணம், பெட் நேம்... என என்னிடம் பகிர்ந்து கொள்ளாத தகவல்கள் அதில் இருக்க... அதிர்ந்தேன். பழைய காதலியின் 'பெட் நேம்'லேயே இத்தனை காலமும் என்னையும் அழைத்திருக்கிறார் என்பது பேரிடி. 'ஸாரிப்பா... அது நடந்து முடிஞ்சது. இப்ப நீதான் எனக்கு எல்லாம்’ என்று அவர் சொன்னாலும்... முன்புபோல் அந்யோன்யம் காட்ட மனது மறுக்கிறது. பழையபடி ஒட்ட வைக்க வழி சொல்லுங்களேன்...''

வாசகிகளின் ரியாக்ஷன்...

முன்னாள் காதல் ஒரு பொருட்டல்ல!

என் டைரி -263

தானே பொருட்படுத்தாத கல்லூரி காதல் கதையைச் சொல்லி, உன்னை வருந்த வைக்க வேண்டாம் என்று உன் கணவர் நினைத்திருக்கலாம். அதனால்தான் நீ கேட்டபோது, 'அது முடிந்து போன கதை' என மனம் திறந்து 'ஸாரி’ கேட்டிருக்கிறார். சில பெட் நேம்கள் நமக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதற்கு காரணம்... அந்த பெயரில் இருக்கும் கிரேஸ் என்பதாகவே இருக்கும். அந்த அடிப்படையில்கூட அதே பெயரில் உன்னை அழைத்துக் கொண்டிருக்கலாம். எதையும் அவசரப்பட்டு நீயாக ஒரு முடிவுஎடுத்து விடாதே. மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'முன்னாள் காதல்' என்கிற ஒன்று இருக்கும். இதில் கவலைப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் எதுவுமே இல்லை. இத்தனை புரிதல்களோடு ஒரு கணவர் கிடைப்பது அபூர்வம். இதைஎல்லாம் புரிந்துகொண்டு வழக்கம்போல் உன் அந்யோன்யத்தை, மீண்டும் காதலோடு துவங்கு.

- அமிர்தகல்யாணி, திருநெல்வேலி

படா... பட்!

'ஆமா... இப்ப என்னாங்கிறே? எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணுமா?' என எதிர்க்கவோ, நடந்த விஷயத்தை மறுக்கவோ இல்லை உன் கணவர். அப்படிபட்டவரை ஏன் மேலும் மேலும் சந்தேகப்பட்டு உன்னையும் வருத்திக் கொள்கிறாய்? அழகான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அதை அனுபவிக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதே. 'பெட் நேம்'தான் உன்னை உறுத்துகிறது என்றால்... நாசூக்காக வேறு பெயர் சொல்லி அழைக்க பழக்கப்படுத்திவிடு... படா... பட்!

- கவிதா வெங்கடேசன், தோட்டப்பாளையம்