மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 392

என் டைரி - 392
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 392

சிதறிப் போன சொந்தங்கள்!

மைதியாக இருப்பதே என் சுபாவம். ஆனால், கோபம் என்று வந்துவிட்டால் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசி, அடுத்தவர்களை காயப்படுத்திவிடுகிறேன். திருமணமாகி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் டைரி - 392

நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். கும்மாளமும் கொண்டாட்டமுமாக பொழுது கழிந்தது. அன்று வேலைக்குச் சென்றுவிட்டு அதீத அசதியோடு வீட்டுக்குள் நுழைந்தால், வீடே ரெண்டாகி இருந்தது. அதைப்பார்த்த உடன் ஒருநிமிடம் கோபம் தலைக்கேற நிதானம் இழந்து, 'வீட்ட சுத்தமா வைக்கணும்னு தெரியாதா? குப்பைக்கூளமா என்ன கண்றாவி இது' என்று அனைவரின் முன்பும் என் கோபத்தை கணவரிடம் வெளிப்படுத்திவிட்டேன். வந்திருந்தவர்கள் ஒருநிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். அரை மணி நேரத்தில் நானே நிதானத்துக்கு வந்து, சிரித்துப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கினேன். வந்திருந்தவர்கள் நாசூக்காக மறுநாளே கிளம்பிவிட்டார்கள். `அவசரப்பட்டிருக்க வேண்டாமோ' என்று இப்போது வருந்துகிறேன். உறவினர்கள் வந்தால் வீடு அதகளப்படத்தான் செய்யும் என்பதும் எனக்குத் தெரியும்.

இப்படி ஒன்றல்ல... இன்றும் மனதைக் குடையும் ஏராளமான நினைவுகள். என்னைப் பொறுத்தவரை கோபம் என்பது அந்த நிமிடம்தான். அதன்பிறகு மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது கிடையாது. ஆனால், என் கோபத்தைப் பார்த்தவர்கள் மனதில் அது நீங்காத இடத்தைப் பிடித்து, ‘அவ வீட்டுக்கா... வேண்டாம்பா... பொறுமையே கெடையாது. என்னத்த வளர்த்தாங்களோ...' என்று என்னைப் பற்றிய கதைகளை ஊர்முழுவதும் காற்றாடியாகப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என் கோபத்தை அறிந்தவர் என் கணவர் மட்டுமே. ‘அக்கறையைக் கூட கோவமா காட்ட உனக்கு மட்டும்தான் தெரியும். எனக்குப் புரியுது. ஆனா, எல்லாருக்கும் புரியாது' என்று அவர் சொல்லும் வார்த்தைகளே எனக்கு ஆறுதல். ஆனால், கணவர் மட்டும் போதுமா? சொந்தங்கள் வேண்டாமா? முன்பு போல சொந்தங்கள் அத்தனை அக்கறையாக விசாரிப்பதும் அரவணைப்பதும் இல்லை. என்னிடம் இருந்து என் உறவுகள் சற்று தள்ளி நிற்பதே எனக்குச் சங்கடமாகப்படுகிறது. வலியப் போய் பேசுவது எனக்கு நடிப்பாகவே தோன்றுகிறது. இயல்பையும் விட்டுக் கொடுக்க முடியாமல், என் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறேன்.

நான் செய்தது தவறு என்று தெரிந்தும் வெளிவர முடியாமல் தவிக்கும் எனக்கு ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் சொல்ல விரும்பாத அவள் வாசகி

என் டைரி 391-ன் சுருக்கம்

என் டைரி - 392

``மகன் காதலித்த பெண்ணை, அவன் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தோம். எல்லாவிதத்திலும் எங்களைப் பெருமைப்பட வைத்தாள். ஆனால், அது அவளுக்கு குழந்தை பிறக்கும்வரைதான். ஆம், பேரக்குழந்தையைப் பராமரிக்க, தாய் வீடு சென்ற மருமகள், முதலில் என் மகனிடம் பேசுவதைக் குறைத்தாள். பிறகு, அவன் போன் பண்ணினால் இணைப்பை துண்டித்துவிடுவாள். அவளது இந்த நடவடிக்கையால் குழப்பமான நாங்கள், நேரடியாகவே அவளைப் பார்க்கச் சென்றபோது வீட்டுக் கதவைத் திறக்கவே நீண்ட நேரம் ஆனது. இதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என் மகனிடம் `இனிமே அந்த வீட்டுக்கு வர்ற மாதிரி இல்ல’ என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தவள், அதன்பிறகு போனை எடுப்பதேயில்லை. யார் யாரிடமெல்லாமோ சொல்லி அனுப்பியும் அவள் தன் நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. விசாரித்தபோது, அவள் கல்லூரி படிக்கும்போது காதலித்தவன் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் இருப்பதும், ஊர் திரும்பிய அவனோடு வாழ முடிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுபற்றி கேட்டால், ‘அது என்னோட பெர்சனல்...’ என்றவள், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். அன்றிலிருந்து என் மகன் நிலைதடுமாறிப்போய்விட்டான். இதற்கெல்லாம் முடிவுகட்ட, விவாகரத்து வாங்கிவிட்டு, அவனுக்கு வேறொரு திருமணம் செய்ய யோசித்திருக்கிறோம். எங்கள் முடிவு சரியா? வழி சொல்லுங்கள் தோழிகளே..!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

திருப்தியில் அக்கறை!

நெடுநாள் திட்டத்துடன் நாடகமாடிய நயவஞ்சகி உங்கள் மருமகள் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் மகனிடம் பாசம், வருமானம், தாம்பத்யம் போன்றவற்றில் ஏதேனும் குறையிருந்தால், அதையும் கவனிக்கத் தவற வேண்டாம். இனி வரும் மருமகளுக்கு திருப்தியளிப்பதில் அக்கறை கொள்ளுங்கள்; வாழ்த்துகள்.

- என்.தனலட்சுமி, தஞ்சை

நல்ல பெண் தேடுங்கள்!

நிலை மாறிய மருமகளின் மனதை மாற்றுவது எப்படி? பரிதவிக்க வேண்டிய அவசியமில்லை... மீண்டும் முயற்சித்துப் பேசிப் பாருங்கள். குழந்தையின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். புதிய தகப்பனை அந்த குழந்தை ஏற்றுக்கொள்ளுமா? என்பது பற்றியெல்லாம் பேசுங்கள். அவளது பதில் தீர்மானமாக இருந்தால் நீங்களும் உங்கள் மனதை மாற்றிக்கொண்டு, உங்கள் பையனுக்கு ஒரு நல்ல பெண்ணாகத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண் விவாகரத்தானவரோ, விதவையாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் மனதை மாற்றிக்கொண்டு பையனின் மனநிலையில் தெளிவு பெறச்செய்து மணமுடிக்க முயற்சி செய்யுங்கள்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை


விழிப்புடன் கவனியுங்கள்!

இனி யோசிப்பதற்கு எதுவுமே இல்லை. சட்டப்படி பேசி முடித்து உங்களது மருமகளிடமிருந்து விவாகரத்து பெறுங்கள். வாழ்க்கையின் இரண்டா வது இன்னிங்ஸுக்கு உங்களது மகனை முழு தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் தயார் படுத்துங்கள். வரும் மருமகளை பாசத்தோடும் விழிப்போடும் கவனித்துக்கொள்ளுங்கள். இதோடு போவதில்லை... வாழ்க்கை மிகப்பெரியது!

- ஏ.ரோஸம்மாள், மதுரை