Published:Updated:

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106
News
"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

Published:Updated:

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106
News
"பெரும் மண் குவியல்களுக்கு அடியில் வியந்துகொண்டிருக்கிறான்!" - மண்ட்டோ பிறந்ததினச் சிறப்பு பகிர்வு #Manto106

பிகாடிலி நகரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு மாஸ்டர் குதா பக்ஷ் கார் ஓட்டி சாகசம் செய்தார். அவரைப் போல அம்ரிஸ்டர் நகரில் சாகசம் செய்வதற்கு ஒரு மாஸ்டர் வந்தார். அவர் பெயர் அல்லாஹ் ராகாஹ். அவர் தன்னை மாஸ்டர் குதா பக்ஷ் அவர்களின் குருவாக மக்கள் மத்தியில் அறிவித்தார். மேலும், அவர் பள்ளம் ஒன்றின் மீது கரித்துண்டுகளை எரித்து, அதன் மீது வெறுங்கால்களுடன் நடந்து சாகசம் செய்தார். 

ஒரு நாள் மாஸ்டர் அல்லாஹ் ராகாஹ் ‘இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு என்னுடன் நெருப்பின் மீது நடக்க வாருங்கள்’ என்று மக்களை தன் சாகசத்தில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கிறார். மக்கள் திரள் அமைதியாக இருக்கிறது. ஆனால், ஒரு இளைஞன் அவரின் அழைப்பை ஏற்று முன் வருகிறான். மாஸ்டர் அல்லாஹ் ராகாஹ் அந்த இளைஞனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த நெருப்பின் மீது நடக்க, மக்கள் திரள் ஆர்ப்பரிக்கிறது. சாகசத்தைச் செய்து முடித்தவுடன் அந்த இளைஞன் தனது கால்களைச் சோதிக்கிறான். எந்தக் காயமும் ஏற்படவில்லை. மக்கள் அவனுக்காக கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அந்த இளைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ. மக்களிடம் முதன்முதலில் அவன் கைதட்டல் வாங்கிய நாள் அது; ஆனால் அன்று மட்டுமல்லாமல், அவன் தன் வாழ்நாளெல்லாம் நெருப்பு மீதே நடக்க வேண்டியிருந்தது. அவனது எழுத்துகள் சமூகத்தின் பற்றியெரியும் பிரச்னைகளைப் பேசின.”

பாகிஸ்தானிய எழுத்தாளரும் மண்ட்டோவின் மைத்துனருமான ஹமீத் ஜலால் மண்ட்டோவின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றிக் கூறியவை இவை. இன்று மண்ட்டோவுக்கு 106-வது பிறந்தநாள். மண்ட்டோ பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர். இந்தியப் பிரிவினையை தன் கதைகளினால் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்தவர். அன்றையச் சமூகம் ‘ஆபாசம்’ எனக் கருதியவற்றை எந்த வரையறையும் இல்லாமல், தன் எழுத்துகளால் சமூகத்தின் இரட்டை வேடத்தை தோலுரித்தவர். 

மண்ட்டோவின் மூதாதையர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் அவர். பஞ்சாபி மொழி பேசி வளர்ந்தவர். எனினும், உருது மொழியின் மீது அவருக்கு நாட்டம் அதிகமாக இருந்தது. தன் பால்ய காலத்தை அம்ரிஸ்டரில் செலவிட்ட மண்ட்டோ, பிற மொழி இலக்கியங்களை உருதுவுக்கு மொழிபெயர்ப்பு செய்து வந்தார். பள்ளிக்கல்வியின் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்த மண்டோவுக்கு இந்த மொழிபெயர்ப்பு பணிகள் புதிய பாதைகளைக் காட்டின. சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார் மண்ட்டோ. 

அவரின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களாக இருந்தார்கள். அன்றைய காலத்தில் மக்களால் மனிதர்களாகவே மதிக்கப்படாதவர்களான பாலியல் தொழிலாளர்கள், குடிகாரர்கள், பாலியல் தரகர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் முதலானோர் மண்ட்டோவின் கதாநாயகர்களாக இருந்தனர். மண்ட்டோவின் கதைகளில் அவர்கள் மனிதத்தன்மை மிக்கவர்களாக இருந்தனர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ‘பெரிய’ மனிதர்களைவிட, தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கும் பாலியல் தொழிலாளி மேன்மையானவள் என்பார் மண்ட்டோ. இதனால் அவரது எழுத்துகள் ஆபாசமாகக் கருதப்பட்டன. இதற்காக பிரிட்டிஷ் இந்தியாவில் மூன்று முறையும், சுதந்திர பாகிஸ்தானில் மூன்று முறையும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

தன் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களுக்கு, ‘என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது’ என்று பதிலளிப்பார் மண்ட்டோ. 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்து வந்தார் மண்ட்டோ. ஒரு மாலை நேரம், தனது இந்து நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, ஒரு நண்பர் அவரிடம் “நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால், உன்னையும் கொன்று இருப்பேன்” என்று கூற, மறுநாளே பாகிஸ்தானுக்கு குடும்பத்துடன் கிளம்பினார் மண்ட்டோ. அந்த காலகட்டத்தில் அவரது படைப்புகள் பிரிவினையைப் பற்றியும், மதக் கலவரங்கள் பற்றியும் பெரிதும் பேசின. 'ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லாதீர்கள்; இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுங்கள்' என்றார் மண்ட்டோ. எனினும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட கலவரங்களும் உயிர்ப்பலிகளும் மண்ட்டோவைக் கடுமையாகப் பாதித்தன. ”இந்துஸ்தான் சுதந்திர நாடாகி விட்டது. அதனால் பாகிஸ்தானும் விடுதலை பெற்றுவிட்டது. ஆனால், இரு நாடுகளிலும் மனிதர்கள் அடிமைகளாக இருப்பது நீடித்து வருகிறது. இரு நாட்டு மனிதர்களும் மதவெறிக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கும், மனிதத்தன்மையற்ற செயல்களுக்கும் அடிமைகளாகவே இருக்கின்றனர்” என்றார் அவர்.
 
தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் கட்டுப்படுத்த மண்ட்டோ, குடியில் வீழ்ந்தார். தன் கல்லீரல் கெடும் அளவுக்கு குடிபோதையில் இருந்த மண்ட்டோ, தன் மரணப் படுக்கையிலும் ஒரு கோப்பை விஸ்கி வேண்டும் எனக் கேட்டார். 1955-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி மண்ட்டோ மறைந்தார். 43 வயதில் மண்ட்டோ இறந்தபோது, அவர் எழுதியவையாக 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், ஐந்து வானொலி நாடகத் தொடர்கள், தான் சந்தித்த மனிதர்களைப் பற்றிய நினைவோடைகளாக இரண்டு தொகுப்புகள் மற்றும் பல திரைக்கதைகள் இருந்தன. 

தன் எழுத்துப்பணியை மொழிபெயர்ப்பாளராகத் தொடங்கிய மண்ட்டோவின் படைப்புகள் தற்போது உலகம் முழுவதும் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

``மண்ட்டோ தான் பார்த்தவற்றை, படைப்புகளாக மாற்றிய எழுத்தாளர். அவர் 1940-களில் எழுதியவற்றை நாம் இன்றுகூட பார்க்கவோ, சிந்திக்கவோ மறுக்கிறோம். அவரது எழுத்துகள் உண்மையை மட்டுமே கொண்டவையாக உள்ளன. உண்மை காலத்தால் அழியாது” என்கிறார் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகி. நந்திதா தாஸ் மண்ட்டோவின் வாழ்க்கையைப் பற்றி இயக்கியிருக்கும் திரைப்படத்தில் நவாசுதீன் மண்ட்டோவாக நடித்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. 

மண்ட்டோ தான் வாழ்ந்த காலத்தில் மதவாதிகளால் ‘மத நம்பிக்கை இல்லாதவன்’ என்றும், இடதுசாரிகளால் ‘பிற்போக்குவாதி’ என்றும் முத்திரைக் குத்தப்பட்டு விரட்டப்பட்டார். ஆனால், மனிதத்தை மட்டும் கடைசி வரை நேசித்த மண்ட்டோவின் படைப்புகளும் வாழ்க்கையும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையையும் அன்றைய சமூகத்தையும் மிகத் தெளிவாகப் பிரதிபலித்தன. 

தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மண்ட்டோ தன் கல்லறையில் சில வாக்கியங்களை எழுதச் சொன்னார். ஆனால், அவை எழுதப்படவேயில்லை.

“இங்கு தான் கிடக்கிறான்
சாதத் ஹசன் மண்ட்டோ
அவனோடு புதைந்துவிட்டது
சிறுகதை எழுத்தின்
ரகசியங்களும் நுட்பங்களும்.
பெரு மண் குவியல்களுக்கு அடியில்
வியந்துகொண்டிருக்கிறான்
யார் பெரிய எழுத்தாளன் என்று
கடவுளா? அவனா?”