மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 393

என் டைரி - 393
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 393

தத்தளிக்கும் வாழ்க்கை!

என் டைரி - 393

ன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கொள்கை கொண்டவள் நான். அதன்படியே வாழ்ந்து கொண்டிருந்தேன். கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்தபோது ஏற்பட்ட காதல், என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

நான் பணிபுரியும் இடத்தில் என்னுடைய சுயமரியாதை, வேலை நிமித்தம்கூட என்னுடைய மேலதிகாரியை அனுசரித்துப்போக விடவில்லை. அதுவே அவருக்கு என்மீது காதல் ஏற்பட காரணமாகி விட்டது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பாலும், அவரின் கண்ணியம் குலையாத நடத்தையாலும் நானும் கவரப்பட்டேன்.

இருவரின் குடும்ப அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வை சுட்டிக்காட்டி, திருமணத்தை நிறுத்த முயன்ற அவரின் உறவினருக்கு மத்தியில், மகனுக்கு பக்கபலமாக இருந்து, எங்கள் திருமணத்தை நிகழ்த்தினார் என்னுடைய மாமியார். இதற்கு என் கணவர் கொடுத்த விலை அவரின் சுதந்திரம்.

அதுவரை அவர் வைத்ததுதான் சட்டம் என இருந்த அந்த வீட்டில், மாமியாரின் சொல் மட்டுமே இறுதிச் சொல்லாகிப்போனது. அவரின் சொல் எங்கள் படுக்கை அறைவரை எதிரொலிக்க, என்னுடைய சுயமரியாதை தலைதூக்கியது. தாய்க்கும் தாரத்துக்கும் நடுவே அல்லாடிய என் காதல் கணவருக்காக, அனுசரித்துபோகலாம் என நினைத்தாலும், `வாழ்நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடுமோ?' என சுயபச்சாதாபம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

கணவரின் இயலாமை என்னை விரக்தியில் தள்ளி இருந்த சமயம் வயிற்றில் மூன்று மாதம். உடல்நலன் கருதி தந்தை வீட்டுக்கு வந்தேன். அந்த தாயுமானவனின் அன்பால், இழந்த வாழ்க்கையை மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தேன். விளைவு... கணவர் இல்லாமல் வாழ்வது என முடிவு செய்து கோர்ட்வரை போராடி விவாகரத்து வாங்கினேன்.

உறவினர்களை விட்டு விலகவும் முடியாமல் என்னுடன் வாழவும் முடியாமல் தவித்த என் கணவர், எனக்காக விவகாரத்தையும் அளித்தார். வாழ்க்கை ஓட்டத்தில் என் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பழைய வாழ்க்கையைப் பற்றிய பேச்சே எழக்கூடாது எனும் என்னுடைய உத்தரவின் பேரில், இன்றுவரை இருவரும் அவரவர் வீட்டில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தாலும், பரஸ்பரப் புரிதலின் அடிப்படையில் நட்பாகவும், எங்கள் குழந்தைக்கு பெற்றோர்களாகவும் அவரவர் பங்கைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

சுதந்திர வாழ்க்கை எனக்கு கிடைத்தாலும், இன்றுவரை என்மீதான அன்பும் அக்கறையும் குறையாத என் கணவரின் குணத்தினாலும், காலத்தினால் ஏற்பட்ட மனப்பக்குவத்தினாலும்,  `அவசரப்பட்டு விட்டோமோ' எனும் எண்ணம் தலைதூக்குவதுடன், மீண்டும் கணவன் மனைவியாக அவருடன் கைகோத்து வாழமாட்டோமா எனும் ஏக்கமும் அவ்வப்போது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது. 

மன உளைச்சலாலும், அன்பின் வலியாலும் தவித்துக்கொண்டிருக்கும் எனக்கு வழி சொல்வீர்கள் என காத்துக் கொண்டிருக் கிறேன்.

- பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி

என் டைரி 392-ன் சுருக்கம்

என் டைரி - 393

``திருமணமாகி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அமைதியான சுபாவம் கொண்ட எனக்கு கோபம் வந்துவிட்டால் எதையாவது பேசி அடுத்தவர்களை காயப்படுத்திவிடுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த உறவினர்களால் வீட்டில் ஒரே கொண்டாட்டம். வேலைக்குச் சென்றுவிட்டு அசதியோடு வீடு திரும்பியபோது, வீடே ரெண்டாகி இருந்தது. இதைப்பார்த்ததும், ‘என்ன கண்றாவி இது’ என்று அனைவரின் முன்பும் கணவரிடம் கோபப்பட்டேன். வந்திருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். பிறகு, நானே நிதானத்துக்கு வந்து, சிரித்துப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கினேன். ஆனாலும், வந்திருந்தவர்கள் மறுநாளே கிளம்பிவிட்டார்கள்.'' இதை நினைத்து இப்போது வருந்துகிறேன். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல... ஏராளமான நினைவுகள்... வருத்தங்கள்.

என் கோபத்தை அறிந்தவர் என் கணவர் மட்டுமே. ‘அக்கறையைக்கூட கோவமா காட்ட உனக்கு மட்டும்தான் தெரியும். எனக்குப் புரியுது. ஆனா, எல்லாருக்கும் புரியாது’ என்று அவர் சொல்லும் வார்த்தைகளே எனக்கு ஆறுதல்.

கணவர் மட்டும் போதுமா? சொந்தங்கள் வேண்டாமா? என் உறவுகள் சற்று தள்ளி நிற்பதே எனக்குச் சங்கடமாகப்படுகிறது. என் இயல்பையும் விட்டுக் கொடுக்க முடியாமல், கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறேன். இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள்.''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

யோகா, தியானம் செய்யுங்கள்!


தோழி, உங்கள் முன்கோபம் ஏற்படுத்திய விபரீதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். நானும் அப்படித்தான்; மனதை ஒருநிலைப்படுத்த பண்படுத்த யோகா, தியானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கவலையை விடுங்கள். கணவரின் அன்பே உங்களை மேலும் குணப்படுத்தும்.

- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்

சுயபரிசோதனை செய்!

நீ செய்வது தவறு என்று நீயே உணர்ந்து கொள்வதால், இந்தப் பிரச்னையில் இருந்து நீ விடுபடலாம். முதல் தவறு உன் பெற்றோர்கள்; ஏனென்றால், உன்னை வளர்க்கும்போது இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லி வளர்த்திருக்க வேண்டும். அடுத்ததாக, உன் கணவராவது உன் குணாதிசயத்தை ஆரம்பத்தில் கண்டித்து திருத்தியிருக்க வேண்டும். இப்போது இதற்கு தீர்வு, உன் கோபத்தைக்கட்டுப்படுத்த யோகா வகுப்புக்கு செல்லலாம். அடுத்ததாக, நல்ல புத்தகங்கள் படிக்கலாம். இசையை கேட்டாலும் கோபம் குறையும். இதுபோன்று உன்னை நீ சுயபரிசோதனை செய்தால் கண்டிப்பாக யாரும் உன்னை வெறுக்க மாட்டார்கள்.

- லலிதா காசிராவ், மாடரஅள்ளி

தொட்டுவிடும் தூரத்தில் மகிழ்ச்சி!

தவறை உணர்ந்தவர்களை கடவுளே மன்னிக்கும் போது, மனிதர்கள் எம்மாத்திரம்! கோபம் குறைய தியானம் பழகு. உன்னை உணர்ந்த உன்னவர் பக்கபலமாக இருக்கும்போது, ஏன் கவலை? கோபம் குறையக் குறைய உன் மாற்றத்தைக்கண்டு உறவினர் வியப்படைவர். தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது உன் மகிழ்ச்சியின் எல்லை. கவலைப்படாமல் கோபத்தை மட்டும் 90 சதவிகிதம் குறைக்கப்பார்; சொந்தங்கள் கூடிவரும்.

- கே.விஜயலட்சுமி, திருச்சி