
என் டைரி - 394 - ரணமாகும் மனது!

அம்மா, அப்பா, அண்ணன் மூவருக்கும் நான் தான் உலகம். ஆனால், என் உலகில் இவர்களைத் தவிர இன்னொருவருக்கும் இடம் தந்தேன். 8 வயதில் எங்களுக்குள் துளிர்த்த நட்பைக் கண்டு பொறாமைப் படாதவர்களே இருக்க முடியாது. என் மீது அவன் காட்டும் அக்கறை, வழங்கும் ஆலோசனைகள் காரணமாக அவன்மீது அளவற்ற அன்புடன் இருந்தேன். அவனிடம் பிடித்தது, எல்லை தாண்டாத அவனின் கண்ணியம். படிப்பை முடித்ததும், ஐ.டி கம்பெனியில் எனக்கு வேலை கிடைக்க, பணிச்சுமையால் அவனுடன் பேச நேரம் கிடைக்கவில்லை. சில மாதங்களில், யார் முதலில் பேசுவது என்ற ஈகோ உருவானது. ஒரு வருடம் கழித்து அவனிடம் இருந்து போன் வர, சொல்ல முடியாத சந்தோஷத்துடன் நான் பேச, அவனது குரலிலும் அதே சந்தோஷம். ஆனால், `நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அவ அப்படியே உன்னை மாதிரி இருக்காடி' என்ற அவன் வார்த்தைகளால் சுக்குநூறானேன். இது, பொசஸிவ்னெஸ் அல்ல... காதல்தான் என காலம் கடந்த ஞானோதயம் வந்து என்னை நானே நொந்தேன். அவனை விட்டு விலக முடிவு செய்து போன் நம்பரைக்கூட மாற்றினேன்.
ஒருநாள் தற்செயலாக அவன் அப்பாவை சந்தித்தேன். என்னைப் பார்த்து `ஏம்மா ஜீவாகூட முன்னமாதிரி பேசறது இல்ல? அவன் லவ் பண்ணுன பொண்ணு ஏமாத்திட்டானு மனசு உடைஞ்சுட்டான். பார்க்கவே கஷ்டமா இருக்கு...' எனக் கூறிய அடுத்த விநாடி அவன் முன் நின்றேன். என்னைப் பார்த்ததும் என் கைகளில் முகம் புதைத்து கதறினான். அவனுக்கு ஆறுதல் சொல்லிய கணத்திலிருந்து எங்கள் நட்பு மீண்டும் துளிர்த்தது. இனியும் அவனை இழந்துவிடக் கூடாது என முடிவெடுத்து என் காதலை அவனிடம் சொன்னேன். ஆனால் அவனோ, `என்னை மன்னிச்சுடும்மா... உன்னை என் மனைவியா பார்க்க முடியலை'னு கண்ணீருடன் சொன்னான். இருவரும் சொல்லிக்கொள்ளாமல் பிரிந்தோம்.
இந்நிலையில் என் அப்பா உடல்நிலை சரியில்லாததால், எனக்கு சீக்கிரம் மணம்முடிக்க ஆசைப்பட்டார். வேறுவழியின்றி நானும் சம்மதித்தேன். இந்த வேளையில்... என் வீடு தேடி வந்த ஜீவா, `உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். நீ இல்லாத வாழ்க்கை முழுமையடையாது. என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..' என கூறியதைக் கேட்டு சந்தோஷப்பட முடியாமல் ஸ்தம்பித்துவிட்டேன். காரணம்... என் அப்பா. பேசி முடித்த சம்பந்தத்தை நிறுத்தினால் அவருக்கு அவமானம். ஆனால், எனக்கான வாழ்க்கை என் வாசலில் மண்டியிட்டு நிற்கும் போது, அவனை மறந்து எப்படி இருப்பேன்? ரணமாகிக் கிடக்கிறது மனசு... வழி சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 393-ன் சுருக்கம்

``தன்னம்பிக்கை, சுயமரியாதையுடன் வாழக்கூடியவள் நான். ஆனால், கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்தபோது வந்த காதல், என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. சுயமரியாதை, வேலை நிமித்தமாககூட அனுசரித்துப்போகாத போக்கு ஆகியவை காரணமாக என் மேலதிகாரிக்கு என்மீது காதல் ஏற்பட்டது. பெண்களிடம் அவரது கண்ணியம் குலையாத நடத்தையால் நானும் அவர் வசமானேன். இரு குடும்ப அந்தஸ்தின் ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி, திருமணத்தை நிறுத்த முயன்ற சிலருக்கு மத்தியில், எங்கள் திருமணத்தை முடித்து வைத்தார் என் மாமியார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு மாமியாரின் சொல் எங்கள் படுக்கை அறைவரை எதிரொலிக்க, எனது சுயமரியாதை தலைதூக்கியது. தாய்க்கும் தாரத்துக்கும் நடுவே அல்லாடிய என் காதல் கணவருக்காக, நான் அனுசரித்துப்போனாலும், `வாழ்நாள் இப்படியே கழிந்துவிடுமோ?’ எனத் தோன்றியது. இதற்கிடையே, கணவரின் இயலாமை என்னை விரக்தியில் தள்ளிய வேளையில் வயிற்றில் மூன்று மாதம். உடல்நலன் கருதி தந்தை வீட்டுக்கு வர, அந்த தாயுமானவனின் அன்பால், இழந்த வாழ்க்கையை மீண்டும் சுவாசித்தேன். விளைவு... கணவர் இல்லாமல் வாழ்வது என முடிவு செய்து கோர்ட் வரை போராடி விவாகரத்து வாங்கினேன்.
வாழ்க்கை ஓட்டத்தில் என் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பழைய வாழ்க்கையைப் பற்றிய பேச்சே எழக்கூடாது என்ற என்னுடைய உத்தரவின் பேரில், இன்றுவரை இருவரும் அவரவர் வீட்டில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்தாலும், பரஸ்பர புரிதலின் அடிப்படையில் எங்கள் குழந்தைக்காக அவரவர் பங்கைத் தொடர்ந்து செய்கிறோம். சுதந்திர வாழ்க்கை எனக்கு கிடைத்தாலும், இன்று வரை என்மீதான அன்பும் அக்கறையும் குறையாத என் கணவரின் குணம் கண்டு `அவசரப்பட்டு விட்டோமோ’ என்ற எண்ணம் தலைதூக்குவதோடு மீண்டும் அவருடன் கைகோத்து வாழமாட்டோமா என்ற ஏக்கம் அவ்வப்போது மனதை உறுத்துகிறது. அன்பின் வலியால் தவிக்கும் எனக்கு வழி சொல்வீர்கள் என காத்துக்கிடக்கிறேன்.''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
மனம் விட்டு பேசுங்கள்!
உங்கள் மனமாற்றம் குறித்து தயக்கமின்றி உங்கள் கணவரிடம் மனம் விட்டு பேசுங்கள். விவாகரத்து பெற்று 5 வருடங்கள் ஆகியும் மறுமணம் புரியாமல் உங்கள்மீது அன்போடும், அக்கறையோடும் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் உள்ள அவர் நிச்சயம் உங்களை ஏற்றுக்கொள்வார். இனியும் சுயமரியாதை என்ற பெயரில் வாழ்க்கையை தொலைக்க வேண்டாமே!
- ஆர்.ராஜேஸ்வரி, ஸ்ரீமுஷ்ணம்
மீண்டும் திருமணம் வேண்டாம்!
பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டும். மீண்டும் திருமணம் செய்து கொண்டாலும் பழைய வாழ்க்கை தலைதூக்கத்தான் செய்யும். உன்னவரை சங்கடத்தில் ஆழ்த்தாதே. எப்போது தீர்மானம் செய்து விலகி விட்டாயோ அதே துணிச்சலுடன் உன்னால் வாழ முடியும். உன் வேலையில் ஈடுபட்டு யோகா, தியானத்தில் ஈடுபடு; காலப்போக்கில் சரியாகிவிடும்.
- ராஜி குருசாமி, சென்னை - 88
புது வாழ்வைத் தொடங்கு!
`அவசரப்பட்டுவிட்டோமே’ என்று எண்ணுகிறாயே... உண்மையாகவே அவசரப்பட்டுவிட்டாய். எடுத்தோம், கவிழ்த்தோம்' என்பதல்ல வாழ்க்கை.
குடும்பம் என்ற வண்டி தறிகெட்டு ஓடாமல் இருக்க கணவன், மனைவி என்ற இரு சக்கரங்கள் கண்டிப்பாக ஒழுங்காக இருக்க வேண்டும். மீண்டும் சேர்ந்து வாழமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இருக்கும் நீ, ஈகோ பார்க்காமல் கணவரிடம் மன்னிப்பு கேட்டு புதுவாழ்வைத் தொடங்கு.
- நளினி ராமச்சந்திரன், கோவை