மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!

என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!

என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!

20 வருடம் கழித்து கணவருடன் இணைந்திருக்கும் இந்த வேளையிலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

என் மகளுக்கு ஐந்து வயதானபோது, என்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போனார் என் கணவர். நானும் என் பெண் குழந்தையோடு என் அம்மா வீட்டில் அடைக்கலமானேன். ஒவ்வொரு வருடமும் அவருக்கும் எனக்கும் இடையில் குடும்பத்தினரால் இணைவதற்கான பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு தோல்வியிலேயே முடியும். இருந்தாலும் குழந்தையின் பராமரிப்பு முதல் படிப்பு வரை என் கணவர் அனுப்பிய பணத்தினாலேயே கழிந்தது.

என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!

அம்மா வீட்டில் இருந்தபோதுதான் அந்த துர்சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த ஒருவன் என்னை தினமும் நோட்டமிட்டிருக்கிறான். ஒரு மதிய நேரத்தில், வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றான். சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு என்னை நானே காப்பாற்றிக்கொண்டாலும், அவனின் அடுத்தடுத்த மிரட்டல்களையும், பிளாக்மெயில்களையும் சமாளிக்க முடியவில்லை.

‘நீ வீட்டுல தனியா இருந்தப்ப உன்னை செல்போன்ல படமெடுத்து வெச்சிருக்கேன். உன் கணவருக்கு அனுப்பவா..?’ என்ற அவனுடைய பிளாக்மெயிலுக்கு பயந்தே என் 40 பவுன் நகைகளையும் அடகு வைத்து அவன் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அம்மா வீட்டில் இருந்து செய்த சிறுசிறு வேலைகள் மூலம் தற்போதுவரை கடனை அடைத்து வந்தேன். இன்னமும் நகைகள் அடகில்தான் இருக்கின்றன. மீட்பதற்கும் வழி தெரியவில்லை. காரணம், முன்பு போல வேலைக்குச் செல்வதில்லை. கணவருடன் வெளியில் செல்லும்போதெல்லாம் நகைகள் இல்லாமலேயேதான் செல்கிறேன். அவர் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. என் மகளுக்கும் இந்த உண்மை தெரியாது.

20 வருடங்கள் கழித்து தற்போதுதான் என் கணவருடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறேன். `என்றாவது ஒருநாள் என் கணவரோ, மகளோ என் நகைகளைப் பற்றி தற்செயலாகக் கேட்டால் என்ன சொல்வது? எப்படி சமாளிப்பது? நடந்ததை சொன்னால் என் கணவரும், மகளும் நம்புவார்களா?' என்கிற பயம் என்னை நிம்மதியாக இருக்கவிட மறுக்கிறது. என் குழப்பத்தை தீர்க்க வழிசொல்லுங்கள் வாசகிகளே...

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 394-ன் சுருக்கம்

என் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை!

``அம்மா, அப்பா, அண்ணனுக்கு நான்தான் உலகம். ஆனால், என் உலகில் இன்னொருவருக்கும் இடம் தந்தேன். 8 வயதில் எனக்கும் அவனுக்கும் துளிர்த்தது நட்பு. நாளடைவில் என் மீது அவன் காட்டும் அக்கறையால் அளவற்ற அன்புடன் இருந்தேன். படிப்பை முடித்ததும், ஐ.டி கம்பெனியில் எனக்கு வேலை கிடைக்க, பணிச்சுமையால் அவனுடன் பேச இயலவில்லை. மாதம், வருடம் என காலம் உருண்டோடியது. ஒருநாள் அவனிடம் இருந்து போன் வர, சொல்ல முடியாத சந்தோஷத்துடன் நான் பேச, அவனுக்கும் அதே சந்தோஷம். ஆனால், `நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அவ உன்னை மாதிரியே...’ என்ற அவன் வார்த்தைகளால் சுக்குநூறானேன். இதனால், அவனை விட்டு விலகினேன். ஒருநாள் தற்செயலாக அவன் அப்பாவைச் சந்தித்தபோது, பெண்ணொருத்தி ஏமாற்றியதால் அவன் மனம் உடைந்து போயிருப்பதாக சொன்னார். அடுத்த விநாடி அவன் முன் நின்றேன். அவன், என் கைகளில் முகம் புதைத்து கதற, ஆறுதல் சொன்னேன்; மீண்டும் நட்பு துளிர்த்தது. இனியும் அவனை இழக்கக்கூடாது என முடிவெடுத்து என் காதலை அவனிடம் சொல்ல, அவனோ, `உன்னை என் மனைவியா பார்க்க முடியலை’னு சொன்னான். இதனால், மீண்டும் பிரிந்தோம்.  இந்நிலையில் என் அப்பா உடல்நிலை சரியில்லாததால், எனக்கு மணம்முடிக்க ஆசைப்படவே, வேறொருவருடனான திருமணத்துக்கு சம்மதித்தேன். இந்த வேளையில்... என் வீடு தேடி வந்த ஜீவா, `உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். நீ இல்லாத வாழ்க்கை முழுமையடையாது...’ என்று அவன் கூறியதைக் கேட்டு சந்தோஷப்பட முடியவில்லை. ஆம்... என் அப்பா பேசி முடித்த சம்பந்தத்தை நிறுத்தினால் அவருக்கு அவமானம். ஆனால், எனக்கான வாழ்க்கை என் வாசலில் மண்டியிடும்போது, என்ன செய்வது? வழி சொல்லுங்கள்  தோழிகளே!

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

குழம்பிய குட்டையாக்காதே!

உன்னை மனைவி ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியாதவனை மனதிலிருந்து அகற்றிவிடு. அவனை மணந்துகொண்டால் உன் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்காது; அதற்கு மாறாக துக்கமும், துயரமுமே மிஞ்சும். எச்சரிக்கை உணர்வோடு சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. அவனுடன் நட்புடனே இரு, அதில் தவறில்லை. உன்னையே உலகமாக நினைக்கும் உன் குடும்பத்தினருக்கு அவமானத்தையும், அசிங்கத்தையும் தேடித் தராதே! மனதை குழம்பிய குட்டையாக்காமல் தெளிந்த மனதுடன் அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணாளனாக ஏற்றுக்கொள்; மகிழ்ச்சியுடன் வாழ்வாய்!

- ஆர்.சாந்தி, திருச்சி

எல்லாம் கடந்துவிடும்!

உன் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இரண்டுமுறை நீ உன் நண்பனிடம் உன் காதலைப் பற்றி கூறியும், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. உனக்கு உன் தந்தை பார்த்த வரனையே மணந்துகொண்டு புதிய வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள். உன் தந்தையின் மானத்தைக் காப்பாற்றுவதுதான் உன் தலையாய கடமையாகும். ரணமான உன் மனதுக்கு உன் வருங்காலக் கணவன் நல்ல மருந்தாவான். காலப்போக்கில் எல்லாம் கடந்து விடும். உன் பெற்றோர் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்!

- எஸ்.விஜயலெக்ஷ்மி, ஆதம்பாக்கம்