மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?

என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?

என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?

பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்டதே எனது திருமணம். கணவருக்கு நல்ல வேலை இல்லை என்றாலும், அக்கவுன்டன்ட்டாக வேலை பார்க்கும் எனக்கு கைநிறைய சம்பளம் கிடைப்பதால் திருமணத்துக்கு சம்மதித்தேன். என் வேலை கருதி, என் பெற்றோர் வீட்டிலேயே நாங்கள் வசித்தோம்.

என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?

நான் பிறந்து வளர்ந்தது நகர்ப்புறம் என்பதால், எந்தவித பேதமுமின்றி எல்லோரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவள். அவர், கிராமப்புறம் என்றாலும் புத்தகங்கள் எழுதுவது, பொது அறிவு பற்றிப் பேசுவது என நல்ல ஒரு அறிவாளியே. ஆனாலும் எப்போதும் என்னை அவரது கண்காணிப்பிலேயே வைத்திருப்பார். முதலில் என் நலனில் அவர் கொண்டிருக்கும் அக்கறை என்று நினைத்தேன்; ஆனால், நாளடைவில்  அது என் மீதான ஈகோ என்பது தெரிந்து அதிர்ந்தேன். மேலும், என் கணவரைவிட நான் நிறம், அழகில் ஒருபடி மேல் என்பதை அவரால் ஏற்க முடியவில்லை. நான் மேட்ச்சிங்காக டிரெஸ் அணிந்தால், `இதெல்லாம் எதுக்கு? நம்ம நிலைமைக்கு ஏத்தமாதிரி நடந்துக்கணும்... நாம டிரெஸ் பண்றத வெச்சு நம்மகிட்ட நிறைய காசு, பணம் இருக்கும்னு நினைப்பாங்க’ என்று அட்வைஸ் செய்வார். இதற்கிடையே குழந்தை பிறக்க... அது கறுப்பு நிறம் என்பதால், அது எனக்குப் பிறக்கவில்லை என்று கத்திக் கூப்பாடு போட்டார். தினம் தினம் குடித்துவிட்டு வந்து வாசலில் நின்றபடி கூச்சலிடுவார். குடிக்கு ஏன் அடிமையானார் என்று அவரைப் பற்றி விசாரித்தபோது, ஏற்கெனவே போதைப்பழக்கம், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதற்காக சிகிச்சை பெற்றவர் என்பது தெரிந்து அதிர்ந்தேன்.

குழந்தைக்கு ஒரு வயது ஆனபோது, என்னை வேலைக்குப் போகக்கூடாது என்று தகராறு செய்தவரை என்னையும் மீறித் திட்டி விட்டேன். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றவர், இன்றுவரை என்னை வந்து பார்க்கவில்லை. அவருடைய பெற்றோர் என்னிடம் சமாதானம் பேச வந்தபோது, ‘என் மீது எந்தத் தவறும் இல்லை; அவரைச் சமாதானம் செய்து அனுப்புங்கள்’ என்று சொன்னேன். ஆனால், அவர் என் நடத்தை குறித்துக் கேவலமாகப் பேசியதோடு குழந்தை விஷயத்தில் மிகவும் கேவலமாகப் பேசியதால், இனி அவரோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று முடிவெடுத்தேன். இப்போது என் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், பருவ வயதில் இருக்கும் என் மகளோடு தனிமரமாக வாழ்கிறேன். கைநிறைய சம்பாதித்தாலும், ஆண் துணை இல்லாமல் ஊராரின் அவதூறுகளை என்னால் பொறுக்க முடியவில்லை. இந்நிலையில் என் கணவர் திருந்தி என்னோடு வாழ்வதாகக் கூறுகிறார். என்ன செய்வது தோழிகளே?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 395-ன் சுருக்கம்

``என் மகளுக்கு ஐந்து வயதானபோது, என்னுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார் என் கணவர். குழந்தையோடு என் அம்மா வீட்டில் அடைக்கலமானேன். அதன்பிறகு எங்களை சேர்த்துவைக்க நடந்த பஞ்சாயத்துகள் தோல்வியிலேயே முடிந்தன. இருந்தாலும் குழந்தையின் பராமரிப்பு முதல் படிப்பு வரை கணவர் அனுப்பிய பணத்தினாலேயே கழிந்தது. இதற்கிடையே அம்மா வீட்டில் இருந்தபோது அருகே குடியிருந்த ஒருவன் என்னை தினமும் நோட்டமிட்டிருக்கிறான். வீட்டில் ஆள் இல்லாதவேளையில் என்னிடம் தவறாக நடக்க முயன்றான். சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு என்னை நானே காப்பாற்றிக்கொண்டேன். அவனோ, ‘நீ வீட்டுல தனியா இருந்தப்ப உன்னை செல்போன்ல படமெடுத்து வெச்சிருக்கேன். உன் கணவருக்கு அனுப்பவா..?’ என்று பிளாக்மெயில் செய்கிறான். இதற்குப் பயந்தே என் 40 பவுன் நகைகளை அடகு வைத்து கேட்கும்போதெல்லாம் அவனுக்கு பணம் கொடுத்தேன். இதனால் இன்னமும் நகைகள் அடகில்தான் இருக்கின்றன. மீட்கவும் வழி தெரியவில்லை.

என் டைரி - 396 - ஏன் இந்தக் குடி?

20 வருடங்கள் கழித்து இப்போதுதான் என் கணவருடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறேன். `என்றாவது ஒருநாள் என் கணவரோ, மகளோ என் நகைகளைப் பற்றி தற்செயலாகக் கேட்டால் என்ன சொல்வது? எப்படி சமாளிப்பது? நடந்ததைச் சொன்னால் என் கணவரும் மகளும் நம்புவார்களா?' என்கிற பயத்தால் நிம்மதியின்றி தவிக்கிறேன். என் குழப்பம் தீர வழிசொல்லுங்கள்.''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

தைரியமாகச் சொல்!

நீங்கள் தனியாக இருந்தபோது, செல்போனில் படம் எடுத்துள்ளார் என்கிறீர்கள். இதற்காக ஏன் பயப்பட வேண்டும். நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்றால், தைரியமாக `யாருக்கு வேண்டுமானாலும் காண்பி' என்று கூறுங்கள். அதற்குமுன் நடந்ததை கணவர், மகள் இருவரிடமும் ஒரே நேரத்தில் கூறிவிடுங்கள். நகையை மீட்பது சுலபம். கணவர் சந்தேகிக்கும்படியான சூழல் ஏற்படாமல் காப்பாற்றிக்கொள்வதே பெண்மையின் அழகு!

- ப்ரீத்தா ரெங்கசுவாமி, சென்னை - 4


காவல்துறையை நாடுங்கள்!

பணம் கேட்டு மிரட்டுபவனைப்பற்றி ஆரம்பத்திலேயே உங்கள் உறவினர்களிடம் கூறி நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய சிக்கலில் மாட்டியிருக்க மாட்டீர்கள். உண்மையிலேயே நீங்கள் தவறு செய்யாதவராக இருந்தால் கணவரிடம் எடுத்துச்சொல்லிவிட்டு காவல்துறையை நாடுங்கள், நியாயம் கிடைக்கும்.

- எஸ்.விஷ்ணுப்பிரியா, திருவம்பநல்லூர்

உண்மையைச் சொல்லிவிடு!

உன் கணவரிடம் நேரம் பார்த்து நடந்த உண்மைகளைச் சொல்லிவிடு. ஏனெனில், உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே ஆகும். அதற்குமுன் நீ சொல்லிவிட்டால் பின்னால் ஏற்படும் பாதிப்பு, மனஉளைச்சல், தேவை யில்லாத சந்தேகம் போன்றவை ஏற்படாது. அதே போல் நீ இப்போது உண்மையைச் சொல்லிவிட்டால் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக உறங்கலாம். எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் நிம்மதியிழந்து உடல்நலமும், மன நலமும் கெட்டு நிம்மதி இல்லாமல் போய்விடும். ஆகவே, உண்மையைச் சொல்லிவிட்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்தலாம்.

- லலிதா காசிராவ், மாடரஅள்ளி