மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 397 - அன்னையின் துயரம்!

என் டைரி - 397 - அன்னையின் துயரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 397 - அன்னையின் துயரம்!

என் டைரி - 397 - அன்னையின் துயரம்!

பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி... நான் நினைத்தது எல்லாம் நடந்தது. நானும் கணவரும் வேலைக்குச் செல்ல, குடும்பத்தை என் மாமியார் அன்போடு தாங்கிக்கொண்டார். ஐந்து வருட வாழ்க்கை நொடியில் கழிந்தது போன்ற மகிழ்வோடு, ஆறாவது ஆண்டு திருமண நாளை சிறப்பாகக் கொண்டாட நினைத்தோம்.

என் டைரி - 397 - அன்னையின் துயரம்!

திருமண நாள் பரிசாக புடவையும் நகையும் வாங்கச் சென்ற போது சாலை விபத்தில் அந்த இடத்திலேயே என் கணவரைப் பறிகொடுத்தேன். கண்ணெதிரே நடந்த அந்த மரணம் என்னை நிலைகுலையச் செய்தது.

குழந்தையும் இல்லாமல், என் கணவரின் அந்தக் கோர விபத்தை நிதம் நிதம் சிந்தனையில் தனியாகத் தாங்க வேண்டிய சக்தி இல்லாமல் போனது எனக்கு. முடிந்த அளவு வேலையில் என் முழுக்கவனத்தையும் திருப்பினேன்.
மீதம் உள்ள வாழ்க்கையில், என் கணவருடன் பிறந்த இரண்டு தம்பிகளுக்கும் தாயாக இருந்து, அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். அதுவே என் கணவரின் கனவாகவும் இருந்தது.

தன் மகனின் இழப்பில் நொடிந்துபோன என் மாமனாரும் சில நாட்களிலேயே இறந்தது என் துக்கத்தை அதிகரித்தது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் கொழுந்தனார்களை நான் நல்லபடியாக கவனிக்க, ‘கணவரை இழந்த பிறகு உனக்கு அந்த வீட்டில் என்ன வேலை? எங்களுடன் வந்து தங்கிவிடு. இனி அங்கே இருக்காதே' என்கிறார்கள் என் பெற்றோர்.

உறவினர்களும் அதையே மொழிய, `இரண்டு ஆண்பிள்ளைகளால் அவர்களுடைய அம்மாவை எப்படியாவது பார்த்துக்கொள்ள முடியும். சின்ன வயது உனக்கு. இன்னும் சில காலம் கழித்து திருமணம் செய்துவைக்க நினைக்கிறோம்' என்றெல்லாம் என்னை வார்த்தைகளால் தினமும் வதைத்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றத்தாரும் என் பிறந்த வீட்டாரும்.

எனக்கு மறுமணம் பற்றிய எண்ணம் இப்போது இல்லை. காலச்சூழல் எப்படி என்னை மாற்றும் என்பது எனக்குத் தெரியாது. நான் உயிர் வாழும் வரை அண்ணியாக அல்லாமல், அன்னையாகவே வாழ்ந்துவிட்டுப் போக நினைக்கிறேன். இதுதான் அவர் மீது நான் வைத்திருந்த அளவு கடந்த அன்புக்கு நன்றிக்கடனாக இருக்கும் என நினைக்கிறேன். தினம் தினம் இதைப்பற்றி யோசிக்கும்போதும், வசவுகளை வாங்கும்போதும் நொறுங்கிப் போகிறேன். நான் என்ன செய்வது? தோழிகளே, வழிகாட்டுங்கள்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 396-ன் சுருக்கம்

என் டைரி - 397 - அன்னையின் துயரம்!

``கணவருக்கு நல்ல வேலை இல்லை என்றாலும், கைநிறைய எனக்குச் சம்பளம் கிடைப்பதால் பெற்றோர் விருப்பத்தின்பேரில், திருமணத்துக்குச் சம்மதித்தேன். என் வேலை கருதி, என் பெற்றோர் வீட்டிலேயே நாங்கள் வசித்தோம். நான் நகர்ப்புறம் என்பதால், எல்லோரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவள். அதனால், கணவர் என்னை அவரது கண்காணிப்பிலேயே வைத்திருப்பார். இது என்மீதான அக்கறை என்று நினைத்தேன்; ஆனால், அது என் மீதான ஈகோதான் என்பது தெரிந்து அதிர்ந்தேன். என் கணவரைவிட நான் நல்ல நிறம், அழகு என்பதையும் அவரால் ஏற்க முடியவில்லை. நான் நல்ல உடை அணிந்தால், `இதெல்லாம் எதுக்கு? நம்ம நிலைமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்...’ என்பார். இதற்கிடையே குழந்தை பிறக்க... அது கறுப்பு நிறம் என்பதால், அது தனக்குப் பிறக்கவில்லை என்று சண்டை போட்டார். தினமும் குடித்துவிட்டு வந்து வாசலில் நின்றபடி கூச்சலிடுவார். இந்நிலையில் அவரைப் பற்றி விசாரித்தபோது, ஏற்கெனவே போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்றவர் என்பது தெரிய வந்தது. குழந்தைக்கு ஒரு வயது ஆனபோது, என்னை வேலைக்குப் போகக்கூடாது என்று தகராறு செய்தவரை திட்டிவிட்டேன். அப்போது கோபத்துடன் ஊருக்குச் சென்றவர், இன்றுவரை என்னை வந்து பார்க்கவில்லை. அவருடைய பெற்றோர் என்னிடம் சமாதானம் பேச வந்தபோது, ‘என் மீது எந்தத் தவறும் இல்லை’ என்றேன். என் நடத்தை குறித்துக் கேவலமாகப் பேசியதோடு, குழந்தை விஷயத்தில் கேவலமாக நடந்துகொண்டதால், இனி அவரோடு வாழ்வது சரியல்ல என்று முடிவெடுத்தேன். என் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், பருவ வயதில் இருக்கும் என் மகளோடு தனிமரமாக வாழ்கிறேன். கை நிறைய சம்பாதித் தாலும், ஆண் துணை இல்லாமல் ஊராரின் அவதூறுகளை பொறுக்க முடியவில்லை. இந்நிலை யில் என் கணவர் திருந்தி என்னோடு வாழ்வதாகக் கூறுகிறார். என்ன செய்யலாம்?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

தெளிவுபடுத்திக்கொள்!

தோழி... குடிகாரக் கணவனைப் பிரிந்து துணிச் சலோடு மகளை வளர்த்துவிட்ட நீ, ஊரார் பேச்சுகளுக்கு அஞ்சி இப்போது கணவரை சேர்த்துக் கொள்வதில் அவசரம் காட்ட வேண்டாம். உண்மையில் உன் கணவர் குடியை மறந்து திருந்தி இருக்கிறாரா என்பதை நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் கண்காணித்து தெரிந்துகொள். அதில் உறுதி ஏற்பட்டால் அவரிடம் வெளிப்படையாகப் பேசியபிறகு முடிவெடு. உன் கணவர் முழு மனதோடு அதற்குச் சம்மதித்தால் ஏற்றுக்கொள்.

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்

இனியும் ஏமாறாதே!

இதுநாள்வரை உன் கணவர் உனக்கு ஆதரவாக இருந்ததில்லை; அடிமையாகவே எண்ணியிருக்கிறார். மேலும் தாழ்வு மனப்பான்மை காரணமாக உன் நடத்தையை சந்தேகிக்கும் எல்லைவரை சென்றிருக் கிறார். போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு ஆளானவரின் வார்த்தை தண்ணீரில் எழுதியது போலத்தான். இனியும் அவரை நம்பி ஏமாற வேண்டாம். துணிந்து நின்று இந்த சமுதாயத்தை எதிர்கொண்டு வாழ்ந்து காட்டு. இதற்கு உன் கல்வியும் வேலையும் துணை நிற்கும்!

- ராஜி ஸ்ரீதர், சென்னை-28

புதிய வாழ்க்கை தொடங்குங்கள்!

நீங்கள் அழகு, படிப்பு, சம்பளம், திறமை எல்லாம் உடையவர் என்றாலும்கூட, சற்று அமைதிகாத்து கணவரை திருத்தி உங்கள் வழிக்கு கொண்டுவந்திருக்கலாம். குடிப்பவர்கள் திருந்தி வாழ்வதில்லையா? உங்கள் மகளின் நலனுக்காகவும் உங்கள் நலனுக்காகவும் இருவரும் சேர்ந்து வாழுங்கள். வாழ வேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறது; அது உங்கள் எழுத்தில் தெரிகிறது. ஈகோவை விட்டுத்தள்ளி விட்டு, இனிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

- கே.சி.சௌந்திரம், ஈரோடு