
என் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை

`ஆண் குழந்தை பிறக்காதா' என ஏங்கிக்கொண்டிருந்த என் பெற்றோருக்கு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை நான். அப்பா தனியார் கம்பெனி ஒன்றில் உற்பத்திப் பிரிவில் பணிபுரிந்தார். நாங்கள் மூவரும் வளர்ந்த காலத்திலேயே எங்கள் குடும்பம் இரண்டு பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது. அதுவரை ஆரோக்கியமாக இருந்த அப்பா, திடீரென நீரிழிவு குறைபாட்டுக்கு ஆளானார். அவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க, அது மூடப்பட்டது. அம்மாவின் நகைகள், வீடு, நிலம் என எல்லா வற்றையும் விற்று, அதில் வந்த தொகையை சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் செலவு செய்தோம். விதி விடவில்லை. அப்பாவுக்கு லேசான மாரடைப்பு வந்து ஒருவழியாகப் பிழைத்துக்கொண்டார். காலம் கரைய, எங்கள் கையிருப்பும் கரைந்து போனது. படிப்பை நாங்கள் மூவருமே நிறுத்திவிட்டோம். அம்மா வீட்டில் இருந்தபடியே உதிரிப்பூக்கள் கட்டி வியாபாரம் செய்துவந்தார். நானும் அக்காக்களும் அம்மாவுக்கு உதவுவோம். நாங்கள் ஈட்டிய வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே போதவில்லை. இந்த நிலையில் அப்பாவுக்கு இரண்டாம் முறை மாரடைப்பு வந்து, எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மூன்று மகள்களோடு வாடகை வீட்டுக்காகவும் சாப்பாட்டுக்காகவும் அம்மா அலைந்த அந்த நாட்கள் நரகம். அப்போதுதான் என் குடும்பச் சூழலை உணர்ந்து ஒருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். மூன்றாவது மகளான நான் குடும்ப வறுமையைக் கருத்தில்கொண்டு அம்மாவின் விருப்பம் இல்லாமலே அக்காக்களுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில் என் கணவரும் என் குடும்பத்தாரை நன்றாகப் பார்த்துக் கொண்டார். காலப்போக்கில் என் அக்காக்களுக்கும் காதல் திருமணமே நடந்துவிட, அம்மாவுக்கு திடீரென ஒரு விபத்து நிகழ்ந்து, அவர் இப்போது நகர முடியாமல் இருக்கிறார். அம்மாவை வைத்துப் பராமரிக்க எங்கள் மூவரின் வீட்டிலும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவுக்காக குடும்ப வாழ்வை விட்டு வெளியே வர முடியாமலும், அதே நேரத்தில் அம்மாவைக் கவனிக்க முடியாமல் புழுவாகத் துடிக்கிறோம்.
விடை சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 398-ன் சுருக்கம்
``மாமியாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடித்திருந்த காரணத்தால் திருமணத்துக்கு வழிவகுத்தது. ஆனால், பெண்கள் வேலைக்குச் செல்வதனால்தான் அவர்கள் அதிகமாக எதிர்த்துப் பேசுகிறார்கள் என்பது என் கணவரின் எண்ணம். திருமணமான சில நாட்களிலேயே, ‘நீ வேலைக்குப் போக வேண்டாம்பா. நான் நல்லா சம்பாதிக்கிறேனே’ என்று கணவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. `நம் மீதான பாசமோ’ என்று மெடிக்கல் லீவில் ஆறு மாதங்கள் வீட்டில் இருந்தேன். அப்போதெல்லாம் என் மீது பாசத்தைக் கொட்டியவர், நான் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், சின்ன சின்னச் செய்கைகளுக்குக்கூட, என் மீது எரிந்துவிழுந்தார்.
என்னால் வீட்டில் 24 மணி நேரத்தையும் கழிப்பது சிரமமாக இருக்கிறது. வேலை என்பது என்னுடைய சுதந்திரமாக... மூச்சுக்காற்றாக நினைக்கிறேன். திருமணமாகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது. அதற்குள் எனக்கு மூச்சுமுட்டுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
எனக்கு வழி சொல்லுங்களேன்!''
சிநேகிதிக்கு... சிநேகிதி...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100
மனம் விட்டு பேசு!
இன்றைய உலகில் பெண்கள் டிகிரி படித்து முடித்தும் அதற் கேற்ற பணியில் அமர்வதைத்தான் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் விரும்புகின்றனர். ஆனால், நீ மூச்சுக்காற்றாக நினைக்கும் வேலையை அவர் வேண்டாம் என்பதைப் பார்த்தால் பெண்கள் வேலை பார்க்கும் விஷயத்தில், அவருக்கு ஏதோ கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, நீ அவரிடம் மனம் விட்டு பேசு. வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தையும் கணவரையும் காப்பேன் என்று கூறு. அவர் நிச்சயம் அனுமதிப்பார். மகிழ் வுடன் வாழ்வு தொடர வாழ்த்துகள்.
- யோ.ஜெனட், குனியமுத்தூர்
சுயதொழில் செய்யலாமே!
கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். மாறாக, ஈகோ பார்த்தால் பிரச்னைதான் உண்டாகும். அதனால் குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்படும். ஆகவே, கணவனின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே ஏதாவது தொழில் செய்து உன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள். இதுதான் உனக்கும், குடும்பத்துக்கும் சிறந்த வழியாகும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை
உத்தியோகம் மூச்சுக்காற்றாகட்டும்!
நீங்கள் எக்காரணம் கொண்டும் வேலைக்குப்போவதை நிறுத்த வேண்டாம். உங்கள் கணவருக்குத் தேவையான பணி விடைகளை உரிய நேரத்தில் சிறப்பாக செய்யுங்கள். மேலும், அப்போது நீங்கள் வேலைக்குச் செல்வதற்கான காரணத்தையும், அவசியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவமாக எடுத்துக் கூறுங்கள். சம்பாதிப்பதற்காக மட்டும் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. தன்னுடைய திறமையை பலருக்கு உபயோகப்படுத்தவும் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்பது அவருக்குப் புரிய வேண்டும். உத்தியோகம் உங்கள் மூச்சுக்காற்றாக தொடர வாழ்த்துகள்.
- எஸ்.கிருஷ்ணவேணி, சின்ன திருப்பதி