மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”

என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”

என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”

கிராமச் சூழலில் வாழும் நானும் என் கணவரும் நகரம் பக்கம் அவ்வளவாக போனது கிடையாது. ஆனால்... எங்கள் அன்பான, அறிவான, அழகான மூத்த மகள் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு பெங்களூரில் ஐ.டி துறையில் வேலை செய்துவருகிறாள். 

என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”

`அழகா இருக்கே.... அதனால மாடலிங்ல, சினிமாவுல முயற்சி செய்து பார்'  என மகளின் தோழிகள் பலர் அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை மகளும் ரெண்டு வருஷத்துக்கு முன்பே எங்களிடம் சொன்னாள். `நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நமக்கு இது சரிப்பட்டு வராது' என மகளுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னோம். `நீங்க சொல்றதை ஏத்துக்குறேன். ஆனா, எனக்கு மாடலிங்ல கொஞ்சம் ஆர்வம் இருக்கு. அழகும் வயசும் இருக்குற காலத்துலயே அதை பயன்படுத்திக்கிறேன்' என்றவளுக்கு பலமுறை அட்வைஸ் செய்தும், அவள் மாடலிங்கில் ஈடுபடுவதைத் தடுக்க முடியவில்லை.

அவளுடைய திறமைக்கு ஏற்ற வகையில் வாய்ப்புகளும் வர, அவளும் சந்தோஷமாக வருமானத்தைச் சேமிக்க ஆரம்பித்தாள். பிறகு, நாங்கள் எதை நினைத்துப் பயந்தோமோ, அது நடக்க ஆரம்பித்தது. அவளுடைய ஆண் நட்புகள் அவளிடம் பழகும் விதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவளோ, ‘என்னை மீறி யாரும் என்னைத் தொட முடியாது. இப்போதைக்கு என்னுடைய கல்யாணப் பேச்சை எடுக்காதீர்கள். நான் சினிமாவிலும் நடிக்கப் போகிறேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாள்.

எங்கள் கவலையையும் அக்கறையும் மதித்து... மாடலிங், சினிமாத் துறையில் இருந்து மகள் வெளியேறி திருமணத்துக்குச் சம்மதிக்க வழிசொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்!”

என் டைரி 399-ன் சுருக்கம்

``ஆண் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்த என் பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்தவள் நான். நாங்கள் மூன்று பெண்களும் வளர்ந்த காலத்தில், தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அப்பாவுக்கு, திடீரென நீரிழிவுக் குறைபாடு ஏற்பட்டது. அடுத்து வந்த நாட்களில் அவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க, அது மூடப்பட்டது. இதனால் அம்மாவின் நகைகள் மற்றும் வீடு, நிலம் என அனைத்தையும் விற்றே சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் செலவு செய்தோம். இ்ந்நிலையில் அப்பாவுக்கு லேசான மாரடைப்பு வந்து ஒருவழியாகப் பிழைத்துக்கொண்டார். காலப் போக்கில் எங்கள் கையிருப்பும் கரைந்து போக... நாங்கள் மூவரும் படிப்பை நிறுத்தினோம். அம்மா பூ வியாபாரம் செய்ய, நானும் அக்காக்களும் அம்மாவுக்கு உதவினோம். வருமானம் போதாத அந்த சூழலில் அப்பாவுக்கு மீண்டும் மாரடைப்பு வந்து, இறந்துவிட்டார். அப்போது எங்களோடு அம்மா அலைந்த அந்த நாட்கள் நரகம்.

இதற்கிடையே என் குடும்பச் சூழலை உணர்ந்து ஒருவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன் வந்தார். குடும்ப வறுமை கருதி அம்மாவின் விருப்பம் இல்லாமலே அக்காக்களுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில் என் கணவர் என் குடும்பத்தாரை நன்றாகப் பார்த்துக் கொண்டார். காலப் போக்கில் என் அக் காக்களுக்கும் காதல் திருமணமே நடந்தது. துரதிர்ஷ்ட வசமாக, அம்மா ஒரு விபத்தில் சிக்கி நகர முடியாமல் இருக்கிறார். அம்மாவை வைத்துப் பராமரிக்க எங்கள் மூவரின் வீட்டிலும் அனுமதியில்லை. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவுக்காக குடும்ப வாழ்வை விட்டு விலக முடியாமலும், அம்மாவைக் கவனிக்க முடியாமல் புழுவாகத் துடிக்கிறோம். எங்களுக்கு வழி சொல்லுங்கள்.''

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

முதியோர் இல்லத்தில் சேருங்கள்!


கண்ணின் மணிபோல காத்த அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு என்று சொல்ல மனமில்லை. ஆனாலும், உங்கள் மூன்று பேரின் குடும்பச் சூழல் காரணமாக அம்மாவை உங்களால் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாது. மூன்று சகோதரிகளும் கலந்துபேசி நல்ல முதியோர் காப்பகத்தில் விட்டு வாரம் ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள். அவர் உடல்நிலையும் சீக்கிரத்தில் சரியாகும். இது சற்று கஷ்டம்தான் என்றாலும் உங்கள் குடும்பங்களில் பிரச்னையைத் தீர்க்க இதைத் தவிர வேறுவழியில்லை.

- தேவி பெருமாள், சென்னை - 60


கணவன்மாரிடம் பேசுங்கள்!

உங்களுக்காக தாய் பட்ட கஷ்டங்களைக் கணவன் மாரிடம் தெளிவுபடக் கூறுங்கள். அவர்களின் தாய்மாரைக் கவனித்துக் கொள்வதில் உங்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்பதை எடுத்துச்சொல்லுங்கள். அத்துடன், உங்கள் தாயை நீங்கள் கவனித்துக்கொள்ள கருணை காட்டுங்கள் என்று கூறினால், அவரவர் கணவன்மார் கனிவுடன் அனுமதி தருவர். இந்த அணுகுமுறை வெற்றி தரும்.

- இல.வள்ளிமயில், திருநகர்

நல்லதே நடக்கும்!


அன்புத் தோழி, நீ பிறந்ததுமுதல் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறாய். ஆண்பிள்ளைகளே பெற்றோரைக் கவனிக்காத போது பெண் பிள்ளைகளான நீங்கள் தாயைப் பற்றி கவலைப் படுவதற்காக ஹேட்ஸ் ஆஃப்! அந்த எண்ணமே போதும்... உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் நல்லதே நடக்கும். அம்மாவைப் பராமரிக்க வேலைக்கு ஆள் அமர்த்துங்கள்... அல்லது முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள்; அவர்கள் நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.

- எல்.உஷா குமாரி, சென்னை - 94