
என் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன?

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயர்ந்ததனால் நான் படும் அவஸ்தைகள்தான் என் பிரச்னையே! பெருநகரங்களின் வாசனைபடாமல் உள்ளூர் பள்ளியில் படித்து வளர்ந்த பக்கா கிராமத்துப் பெண் நான். பட்டப்படிப்புக்காக நகரத்தை எட்டிப் பார்த்தேன். அதுவும் ஒரு பெரிய கிராமம் போலதான் இருக்கும் என்று என்னை சமாதானப்படுத்தி நகரத்துக்குப் படிக்க அனுப்பினார்கள். ஹாஸ்டல் வாழ்க்கை, டி.வி-யில் கேள்விப்படுகிற விஷயங்கள் என அனைத்தும் பயமுறுத்தவே... நகரத்தின் பிடியில் இருந்து தப்பி ஓடவே எத்தனித்தேன். போதாக்குறைக்கு பேய், இருட்டு பயமும் சேர்ந்துகொண்டன. வெளியில் காட்டிக்கொள்ளாமல் தவித்து, எப்படியோ கல்லூரி வாழ்க்கையை முடித்தேன். `போதும்டா சாமி' என்று ஊருக்கு வந்த என்னைத் திருமணம் என்ற பேரில் நகரத்துக்கே கொண்டுபோனது வாழ்க்கை.
திருமணம் முடிந்து கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்தேன். புகுந்த வீட்டில் எனது பயந்த சுபாவம் பற்றி தெரிந்தும் பேய்க் கதைகளை சொல்லி பீதிக்குள்ளாக்குவார்கள். கணவர் இருக்கும் நேரம் மட்டும் சந்தோஷமாக கழிந்தது. தற்போது கர்ப்பமாகியிருக்கிறேன். வயிற்றில் குழந்தை வளர வளர எனக்குள் இருந்த பயமும் வளரத் துவங்கியது. சுற்றிலும் இருப்பவர்கள் பிரசவத்தில் பெண்களுக்கு நடந்த மரணம், குழந்தை இறப்பு என நெகட்டிவான விஷயங்களை என் காதுபடவே பேசுகிறார்கள். இதெல்லாம் என் பயத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.
வீட்டில் உள்ளவர்களிடம் இதைப் பற்றி சொன்னால் `மன பாதிப்பு கொண்டவள்' என்று ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால், ஐந்து நிமிடங்கள்கூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடல் சோர்வும் அதிகமாக இருக்கிறது.
`என் பயம் அர்த்தமற்றதா? வீணாக வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கிறேனா? இதெல்லாம் தெரிந்தால் என் கணவர் என்னைத் தவறாக நினைத்து வெறுத்து விடுவாரா?' என்று குழப்பத்தில் தவிக்கிறேன். தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 400-ன் சுருக்கம்
``நானும் என் கணவரும் கிராமத்துச் சூழலில் வாழ்பவர்கள். எங்கள் மூத்த மகள் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு பெங்களூரில், ஐ.டி துறையில் வேலை செய்கிறாள்.
`அழகாக இருக்கிறாய், மாடலிங் இல்லைன்னா சினிமாவுல முயற்சி செய்து பார்’ என மகளின் தோழிகள் அவளிடம் சொன்னதாக ரெண்டு வருஷத்துக்கு முன் எங்களிடம் சொன்னாள். `நமக்கு இது சரிப்பட்டு வராது’ என அவளிடம் சொன்னபோது, `நான் ஏத்துக்குறேன். ஆனா, எனக்கு மாடலிங்ல ஆர்வம் இருக்கு. அழகும் வயசும் இருக்குற காலத்துல அதைப் பயன்படுத்திக்கிறேன்’ என்றாள். பலமுறை அட்வைஸ் செய்தும், அவளைத் தடுக்க முடியவில்லை. வாய்ப்புகள் தேடிவர, அவளும் கைநிறைய சம்பாதித்தாள். ஆனால், நாங்கள் பயந்ததுபோலவே ஆண்களிடம் அவள் பழகினாள்; அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவளோ, ‘என்னை மீறி எதுவும் நடக்காது. இப்போதைக்குக் கல்யாணப் பேச்சை எடுக்காதீர்கள். நான் சினிமாவிலும் நடிக்கப் போகிறேன்’ என்றாள் திட்டவட்டமாக!
எங்கள் கவலை, அக்கறையை மதித்து... மாடலிங், சினிமாத்துறையில் இருந்து மகள் வெளியேறி, திருமணத்துக்குச் சம்மதிக்க வழிசொல்லுங் களேன்.''
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100
சாதித்துக்காட்டுவாள்!
கிராமத்துச்சூழலில் நீங்கள் உள்ளதால் உங்கள் மனதில் பயம் உருவாகியிருக்கிறது. மகளை இன்ஜினீயரிங் படிக்கவைத்த நீங்கள் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் அளிக்கலாமா? தற்போதைய தலைமுறை பெண் குழந்தைகள் எல்லா வகையிலும் கெட்டிக்காரர்கள். உங்கள் மகள் கூடுதலாக, தனது விருப்பப்படி மாடலிங், சினிமா துறைகளையும் தேர்வு செய்துள்ளார். இத்துறைகளில் ஆண்களுடன் பழகுவது தவிர்க்க இயலாதது. உங்கள் மகள்மீதும் அவளது வார்த்தைகள், ஒழுக்கத்தின்மீதும் முதலில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். அவள் சாதனைப்பெண்ணாக உங்கள் முன் வந்து நிற்பாள். உங்கள் விருப்பப்படி திருமணமும் செய்துகொள்வாள்.
- கே.விஜயகுமாரி, விருத்தாசலம்
பக்குவமாக எடுத்துச்சொல்லுங்கள்..!
உங்கள் மகளின் இந்த மனோநிலைக்குக் காரணம் அவளின் தோழிகளே! உங்கள் மகளிடம் `அழகு நிலையானதல்ல' என்று பக்குவமாக எடுத்துச்சொல்லுங்கள். `நடுத்தர குடும்பத்தினருக்கு சினிமா என்பது ஒரு கனவே..! அந்தத் துறையில் உள்ளவர் களிடம் கேட்டுப்பார்த்தால் அதன் சிக்கல் தெரியும். எல்லோரும் பெரிய நடிகையாகிவிட முடியாது' என்று புரிகிறவிதத்தில் சொல்லுங்கள். அடம்பிடிக்கும் மகளிடம் `நீ சினிமாவில் நடித்துவரும் பணம் புகழைவிட உன் படிப்பில் நீ சம்பாதித்து வரும் பணமே நிரந்தரமானது' என எடுத்துச்சொல்லுங்கள். நிச்சயம் கேட்பார்.
- உஷா முத்துராமன், திருநகர்