
என் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்!
நான் சத்யா. என் நேர்வகிட்டின் ஓரத்தில் வெள்ளைக் கவிதை வரிகளை எழுதத் துவங்கிவிட்டது இயற்கை. என் அப்பா அஞ்சலக அதிகாரி, அம்மா ஆசிரியை. ஒரே தம்பி. சிறு வயதில் இருந்தே `இப்படித்தான் வளர வேண்டும்' என அம்மா போட்டு வைத்த கோட்டைத் தாண்டாதவள் நான். அப்பாவும் அம்மாவின் வார்த்தைக்கு மறுவார்த்தை சொன்னதில்லை. இன்ஜினீயர் மாப்பிள்ளையாகப் பார்த்து எனது திருமணத்தை முடித்து வைத்தார்கள். நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

என் கணவர் அதிகம் பேச மாட்டார்; ரொம்ப அன்பானவர். எங்களின் தேவதை இதயா. அவள் விருப்பப்படியே தந்தையால் வளர்க்கப்பட்ட பெண். என் அம்மா சொல்லித்தந்த எந்த விஷயத்தையும் நான் இதயாவின் மூளையில் ஏற்ற முடியாது. அவள் காட்டுச் செடி மாதிரி வளர்ந்தாள். இன்றைய யுகம் அள்ளித் தந்த அத்தனை அப்டேட்ஸும் ஊட்டி வளர்க்கப்பட்டாள். அப்பாவும் பொண்ணும் அவ்வளவு திக் ஃப்ரண்ட்ஸ்! இதயா 16 வயதை எட்டிய பின் ஒரு விபத்தில் என் கணவர் இறந்துவிட... நாங்கள் இருவரும் தனித்துவிடப்பட்டோம். என்னுடைய எண்ணங்களும், இதயாவின் எண்ணங்களும் பெரும்பாலும் நேரெதிராகவே இருந்தன. அவளுடைய விருப்பங்களை என்னால் முழுமனதுடன் நிறைவேற்ற முடியவில்லை.
18 வயதில் அவள் மேலும் சுதந்திரமாக வளர ஆசைப்பட்டாள். வெளியிடங்களுக்கு நண்பர்களுடன் செல்வது, குரூப் ஸ்டடி என்று வெளியில் தங்குவது, பெண் என்பதைத் தாண்டி புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது எனப் பறந்து பதற வைத்தாள். அவளது 18 வயது, என்னுடைய சிந்தனையில் கத்தி இறக்கியது. அந்த வயதுக்கே உள்ள அபாயங்கள் என்னை நிம்மதியின்றி தவிக்க வைக்கின்றன. அவளோ அபாயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுதந்திரத்தை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறாள்.
நான் அவளது நலன் கருதி விதிக்கும் கட்டுப்பாடுகளை எல்லாம் அவள் கொடுமையாகப் பார்க்கிறாள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நானும் அவளும் ஒரே வீட்டில் எதிரிகள் போல மாறிவிட்டோம். அவளும் நானும் சாதாரணமாகப் பேசிக்கொள்வதுகூட நின்றுபோனது. அவள் ஒழுக்க விஷயங்களில் எந்தப் பிரச்னையையும் இழுத்து வராவிட்டாலும் என் மனம் பரிதவிப்பதை நிறுத்த வில்லை. அவளது சிந்தனையை அவளது இடத்தில் நின்று என்னால் பார்க்க முடியவில்லை. பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளும், ஒருதலைக் காதல் கொலைகளும் அவளைப் பற்றிய பயத்தை அதிகரித்துள்ளன.
அவளை எப்படிப் புரிந்துகொள்வது... எப்படிப் பாதுகாப்பது?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 401-ன் சுருக்கம்

``உள்ளூர் பள்ளியில் படித்து வளர்ந்த கிராமத்துப் பெண்ணான நான், பட்டப்படிப்புக்காக நகரம் வந்தேன். ஹாஸ்டல் வாழ்க்கை, டி.வி-யில் கேள்விப்படும் விஷயங்கள் என அனைத்தும் பயமுறுத்த, நகரத்தின் பிடியில் இருந்து தப்பி ஓட எத்தனித்தேன். போதாக்குறைக்கு பேய், இருட்டு பயமும் சேர்ந்துகொண்டன. ஆனாலும், எப்படியோ கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு ஊருக்கு வந்த என்னைத் திருமணம் என்ற பேரில் நகரத்துக்கே கொண்டுபோனது வாழ்க்கை. அது ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கை. புகுந்த வீட்டினருக்கு எனது பயந்த சுபாவம் பற்றி தெரிந்தும் பேய்க் கதைகளைச் சொல்லி பீதிக்குள்ளாக்குவார்கள். கணவர் இருக்கும் நேரம் மட்டும் சந்தோஷமாக கழிந்தது. தற்போது கர்ப்பமாகியிருக்கிறேன். வயிற்றில் குழந்தை வளர வளர எனக்குள் பயமும் வளர்கிறது. பிரசவக்கால மரணம், குழந்தை இறப்பு என நெகட்டிவான விஷயங்களைச் சுற்றிலும் இருப்பவர்கள் என் காதுபட பேசுவது, என் பயத்தை அதிகப்படுத்துகிறது. வீட்டில் உள்ளவர்களிடம் இதைச் சொன்னால் `மன பாதிப்பு கொண்டவள்’ என்று ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நிம்மதியே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். `என் பயம் அர்த்தமற்றதா? இதெல்லாம் தெரிந்தால் என் கணவர் என்னை வெறுத்துவிடுவாரா?’ என்ற குழப்பத்தில் தவிக்கிறேன். எனக்குத் தகுந்த ஆலோசனை கூறுங்கள்!''
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
மனநல மருத்துவரை நாடுங்கள்!
கொஞ்சம் அதைரியம், தன்னம்பிக்கைக் குறைச்சல், சிநேகிதமற்ற சூழல்தான் உங்களது பிரச்னை. இது நிச்சயமாகத் தீரக்கூடியதே. ஆனாலும், உங்களுக்குத் தேவையான மனத்துணிவையும், தெளிவையும் ஒரு நல்ல மனநல மருத்துவரால் தர இயலும். எனவே, ஒரு மருத்துவரைச் சந்தித்து உங்கள் குழப்பத்தைச் சொன்னால் விடிவு கிடைக்கும்.
மல்லிகா குரு, மேற்கு மாம்பலம்
நல்லதே நடக்கும்!
அடி... அசட்டுப்பெண்ணே! தேவையில்லாமல் மனதைக் குழப்பிக்கொள்கிறாய். அன்பான குடும்பம், பாசமான கணவர்... உங்களிருவரின் நேசத்துக்கு இறைவன் கொடுத்தப் பரிசாக வயிற்றில் குழந்தை; ரசனையான இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். தேவையற்ற பயத்தைத் தூக்கிப்போட்டு விட்டு உனக்குப் பிடித்த கடவுளை நினை. இறைவனை நம்பியவர்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
- ஆதிரை வேணுகோபால், சூளைமேடு
ஆக்கபூர்வ சிந்தனை அவசியம்!
நீங்கள் எழுதியிருப்பதிலேயே நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. கணவர் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்; ஆகவே, மகிழ்ச்சியான மணவாழ்க்கையே. நீங்கள் படித்தவர்; கர்ப்பிணி. இத்தனை நல்ல விஷயங்கள் இருக்கும்போது தேவையற்ற பயம் எதற்கு? சிந்தனையை ஆக்கபூர்வமாக மாற்றிக்கொள்ளுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.
- வித்யா வாசன், சென்னை – 78