மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி ?

என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க  என்ன வழி ?
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி ?

என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி ?

நான் நாற்பது வயதை நிறைவு செய்திருக்கிறேன். கணவர் பிசினஸ்மேன். எங்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு குழந்தைகள். பொறுப்பான அம்மாவாக என் அத்தனை கடமைகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறேன். கணவருக்கான கடமைகளில் ஒரு குறையும் வைத்ததில்லை. இத்தனை நிறைவு இருக்கும்போது என்ன பிரச்னை என்பவர்களுக்கு...

என் மகள், படிப்பில் ஆரம்பித்து விளையாட்டு வரை கில்லி. மற்றவர்களை அணுகுவதிலும் கெட்டிக்காரி. அவளை 17 வயதில் புற்றுநோய் தாக்கியபோது துடிதுடித்துப் போனோம். வாழவேண்டிய வயதில் வலியால் அலறியவளைக் கண்டு வேதனையின் எல்லைக்கே சென்றோம். அதுவரை ஒட்டும் உறவுமாக இருந்த சொந்தங்கள், `அவள்தான் எங்கள் வீட்டு மருமகள்’ என்றவர்கள் எல்லாம் தள்ளிப்போனார்கள்.

என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க  என்ன வழி ?

தன்னைச் சுற்றி நடப்பவற்றைக்கண்ட மகள் மனதளவில் ஒடுங்கினாள்; நான் நடைபிணமானேன். ஆனாலும், செல்ல மகளை மீட்டு விட வேண்டும் என்கிற வெறியில், அவளின் சிகிச்சைச் செலவுக்காக,  நகை, வீடு என அனைத்தையும் அடமானம் வைத்தோம். முதற்கட்ட சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டியை நீக்கி அவளைக் குணப்படுத்தினோம். ஆனால், சிகிச்சைக்குப் பிறகு வேகமாகப் பரவிய புற்றுநோய் அவளை அரிக்க ஆரம்பித்தது. முழுதாய் ஆட்கொண்ட புற்றுநோயிலிருந்து மகளை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்த எங்கள் கண்முன்னேயே வலியால் கொஞ்சம்கொஞ்சமாகத் துடித்து அடங்கினாள் எங்கள் செல்ல மகள்.

அவளில்லாமல் புத்தி பேதலிக்கிறது. வீடெங்கும் அவள் அலறல்களாக ஒலிக்கிறது. ஊரை மாற்றிப் போய்விடலாம் என்றால், மகனின் பத்தாம் வகுப்பு படிப்பு தடைசெய்கிறது.

மகளின் இழப்பைத் தாங்கமுடியாததால், அடிக்கடி தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. சோகத்தின் கோரப்பிடியில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி

என் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க  என்ன வழி ?

என் டைரி - 403 - ன் சுருக்கம்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எனக்கு வயது 25. வாசிப்புப் பழக்கம்தான் சுவாசம் என வளர்ந்தவள். திருமணத்துக்குப் பின்பு குடும்பப் பொறுப்புகளாலும், அலுவல் காரணங்களாலும் வாசிப்பில் இருந்து விலகி இருக்கிறேன். என் கணவருக்கும் என் வாசிப்பின் மீது ஆர்வம் இல்லை. அலுவலகத்திலும் நிலைமை இதுவே. தோழிகளிடம் இது போன்ற விஷயங்களைப் பேசுவது என்பது சேலஞ்சிங்காக உள்ளது. வீட்டுப் பிரச்னைகள், சக ஊழியர்கள் மீதான காழ்ப்பு உணர்வு என்று அவர்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கின்றனர். மேலும், இதுபோன்ற விஷயங்களையே அவர்கள் தொடர்ந்து பேசுவதைக் கேட்கும்போது, என் மனதில் உள்ள பாசிட்டிவ் எண்ணங்களும் காலியாகிவிடும் என்று தோன்றுகிறது. ஆர்வமாகப் பணிபுரிபவர்களை `டீமோட்டிவேட்’ செய்து, ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவிடாத அவர்களின் பேச்சு, எனக்கு மன உளைச்சலைத் தருகிறது. அதேசமயம், இவர்களோடு பேசுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

நிறையப் படிக்கவும், நிறைய விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக உணர முடிகிறது. இந்தக் குணம் இயல்பானதுதானா... அல்லது, நான் மனநல மருத்துவரை அணுக வேண்டுமா? முற்றிக்கொண்டே போகும் மன இறுக்கத்தில் இருந்து மீள வழி சொல்லுங்கள் தோழிகளே!

சிநேகிதிக்கு..சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

எண்ணத்தைப் புரிய வையுங்கள்!

உங்கள் கணவர் உங்கள் ரசனையைப் புரிந்து கொள்ளாவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படாமல் அவருடைய ரசனைகளைத் தெரிந்துகொண்டு அவரை ஊக்கப்படுத்துங்கள். நாளடைவில் அவரும் உங்களைப் புரிந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த வாழ்க்கைக்கு வழித்துணையாக வரலாம்.

கவிதா, வேலூர் - 2

குறை சொல்வதைத் தவிருங்கள்!

பெண் தோழிகள் குறுகிய வட்டத்தில் சிந்திக்கிறார்கள் என்பதற்காக எல்லோரையும் அப்படியே நினைப்பது தவறு. உங்களுக்கு உண்மையில் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமிருந்தால் அதைச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். அதைவிடுத்து சூழலைக் காரணம் காட்டினால் நம் எண்ணங்கள் ஈடேறாது.

பவித்ரா, சென்னை - 17


எழுதிக் கொண்டே இருங்கள்!


வாசிக்கவோ, வாசித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளவோ உங்கள் சூழல் இடம் தரவில்லை என்றால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் நிறைய எழுதுங்கள். இணையதளத்தில் எழுதுவதற்கான வழிகள் எராளமாய் இருக்கின்றன. வாசிக்கும் பழக்கம் உள்ள திறமையானவர்களை நீங்கள் இணையத்தில் கண்டுப்ிடிக்க முடியும். உங்கள்  வாழ்க்கையை உங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஹேமா, திருச்சி - 8