
என் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்!
எனக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகின்றன. கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான்காம் வகுப்பு படிக்கும் மகன், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், அன்பான, பொறுப்பான கணவர் என நிம்மதியான குடும்பமாகத்தான் இருந்தது... என் கணவர் மதுவுக்கு அடிமையாகும்வரை!

நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போனவர் மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளார். மாதத்தில் ஒருநாள் என்றிருந்தவரின் மதுப்பழக்கம்... வாரம் ஒருநாள் என்று மாறி, நாளடைவில் தினந்தோறும் என்றாகிவிட்டது.
மது அருந்திவிட்டால் வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமே பயங்கரமாக இருக்கிறது. அவர் வரும் சத்தம் கேட்டாலே நானும் குழந்தைகளும் பயந்துபோய் ரூமுக்குச் சென்று கதவைச் சாத்திக்கொள்வோம். அவரிடம் பேசிப்பார்த்தாயிற்று; உறவினர்களிடம் சொல்லி, பஞ்சாயத்து செய்தாயிற்று. எதற்கும் அவர் மசிவதாகத் தெரியவில்லை. கடந்த நான்கரை வருடங்களாக நானும் குழந்தைகளும் எப்படிச் சாப்பிடுகிறோம், ஸ்கூல் பீஸுக்கு என்ன செய்கிறோம் என்பதைக்கூட கேட்பதில்லை. வீட்டுச் செலவுக்குப் பணம் தருவதை அறவே நிறுத்திவிட்டார். வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்தார். எதிர்த்துக் கேள்வி கேட்டால்... வசை, அடி உதை என்று வீடு ரணகளமானது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நான், ஒரு கட்டத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தாலும், கணவரைப் பிரிந்து வாழ்ந்தால் அக்கம்பக்கத்தினர் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் எனப் பயப்படுகிறார்கள். தன் முன் அம்மா அடி வாங்குவதையும், அப்பா குடிப்பதையும் பார்த்து, பிள்ளைகளின் மனம் சீரழிந்து போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனக்காக ஒரு வேலை கிடைக்கும்வரை பெற்றோர் வீட்டில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். பிறகு, நன்கு உழைத்துப் பொருளீட்டி, பிள்ளைகளைச் சிறப்பாக வளர்க்கலாம் என முடிவு செய்துள்ளேன். என் தீர்மானம் சரியானதுதானா..?
- உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தோழி
என் டைரி - 404-ன் சுருக்கம்

என் வயது நாற்பது. கணவர் பிசினஸ்மேன். எங்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு பிள்ளைகள். மகளின் 17-வது வயதில், அவளைப் புற்றுநோய் தாக்கியபோது நாங்கள் துடிதுடித்துப் போனோம். வாழவேண்டிய வயதில் வலியால் அலறியவளைக் கண்டு வேதனையின் எல்லைக்கே சென்றோம். செல்ல மகளை மீட்டு விட வேண்டும் என்கிற வெறியில், அவளின் சிகிச்சைச் செலவுக்காக நகை, வீடு என அனைத்தையும் அடமானம் வைத்தோம். முதற்கட்ட சிகிச்சையில் புற்றுநோய்க் கட்டியை நீக்கி, அவளைக் குணப்படுத்தினோம். ஆனால், சிகிச்சைக்குப் பிறகு வேகமாகப் பரவிய புற்றுநோயிலிருந்து மகளை மீட்க முடியாமல் போய்விட்டது. அவளில்லாமல் புத்தி பேதலிக்கிறது. வீடெங்கும் அவள் அலறல்களாக ஒலிக்கிறது. ஊரை மாற்றிப் போய்விடலாம் என்றால், மகனின் பத்தாம் வகுப்பு படிப்பு தடைசெய்கிறது.
மகளின் இழப்பைத் தாங்கமுடியாததால், அடிக்கடி தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. சோகத்தின் கோரப்பிடியில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் தோழிகளே!
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
தியானம் சிறந்தது!
உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்களை வருத்திக்கொள்ளாமல் கவுன்சலிங் செய்துகொள்வது நல்லது. மகனை நன்கு படிக்க வைத்து அவன் மூலமாக உங்கள் மனதைத் தேற்றுங்கள். நீங்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை மாற்றிக் கொள்வதுடன் தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் உங்கள் மனதைப் பக்குவப்படுத்தலாம்.
- எஸ்.சித்ரா, சென்னை - 64
தற்கொலை தீர்வல்ல!
ஈடு செய்ய முடியாத இழப்புதான். உங்கள் மகள் வேறு எங்கும் போகவில்லை, வெளியூரில் இருக்கிறாள் என நினைத்து உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொள்ளுங்கள். தற்கொலை தீர்வாகிவிடாது. முடிந்தால் உங்கள் மகளைப் போலவே ஒரு மகளைத் தத்தெடுத்து வளர்க்கலாமே!
- உமாமோகன்தாஸ், திண்டுகல் - 1
நம்பிக்கையோடு இருங்கள்!
என் வயது 70. உங்கள் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மகனின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். கணவரின் தொழிலுக்கு உதவியாய் இருங்கள். வேறு வேலைகள் செய்து கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். நம்பிக்கையோடு இருங்கள்.
- எஸ்.ரேவதி, ஈரோடு - 12