மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!

என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!

என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!

னக்குத் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. திருமணமான இரண்டு வருடங்களிலேயே, `என்னடி, இன்னுமா விசேஷமில்லை?' என்று உறவினர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் ஒவ்வொரு மாதமும் `தள்ளிப்போகாதா’ என எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்தேன்.   

என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!

மருத்துவமனைகளுக்குச் சென்றபோது `உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்தமுறை வரும்போது உங்கள் கணவரை அழைத்து வாருங்கள். அவருக்கும் டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம்' என்று டாக்டர்கள் சொன்னார்கள். நான் அவரிடம் இதைச் சொல்லும்போதெல்லாம், ஏதாவதொரு சாக்குப்போக்குச் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். மருத்துவமனை, சிகிச்சை... இதிலெல்லாம் விருப்பமே இல்லாததுபோல காட்டிக்கொள்வார்.

ஆனால், ஊர் வாய் அவரையா பேசுகிறது... என்னைத்தானே பழித்துக் கொண்டிருக்கிறது? ஒவ்வொரு நாளும் யார் என்ன பேசுவார்கள் என்று பயந்து பயந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஊர் பேசுவது ஒருபக்கம் என்றால், அவர் வீட்டு ஆட்கள், `அதான் இத்தனை வருஷம் ஆகிப்போயிடுச்சே, இனிமேலும் உனக்குப் புள்ள பொறக்கும்னு நம்புறியா... உனக்கு அடுத்து வந்தவ ரெண்டு வாரிசு கொடுத்துட்டாளே' என்று சொல்லிச் சொல்லியே, மிச்சம் இருக்கும் உயிரையும் எடுக்கிறார்கள்.

`பெத்துக்கிட்டாதான் பிள்ளையா... ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாமே' என்று கணவரிடம் சொன்னேன். அதற்கு, `உன் வயித்துல இருந்து வந்தாதான் அது நம்ம பிள்ளை. உன் குடும்பத்துலயும் சரி, என் குடும்பத்துலயும் சரி... யாருக்கும் இந்தக் குறை இருந்ததே இல்ல. அதனால, இன்னும் கொஞ்ச நாள் அமைதியா இரு. வீணா மனசைப்போட்டு கொழப்பிக்கிட்டு இருக்காதே' என்கிறார்.

ஊர் வாயை அடைப்பதைவிட, என் மனத்திருப்திக்காக ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான் அடக்க முடியாத ஆசையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மழலைச் செல்வத்தை மடியில் வைத்துக் கொஞ்சத் துடிக்கும் என் தவிப்பை என் கணவருக்கு எப்படிப் புரியவைப்பது? என்னுடைய விருப்பம் நிறைவேற ஒரு வழி சொல்லுங்கள் தோழிகளே...

- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி

என் டைரி - 406 - ன் சுருக்கம்   

என் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்!

ணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் குழந்தைகளுடன் அம்மா வீட்டில் தஞ்சமானேன். படித்த படிப்பு கைகொடுக்க, மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. வேலைக்குச் சென்றுகொண்டு அம்மாவின் துணையோடு குழந்தைகளை நன்றாகவே படிக்க வைத்தேன். என் அண்ணன் மகனுக்கு, என் மகளைத் திருமணம் செய்துவைக்க நினைத்தேன். அண்ணன் வீட்டில் திருமணத்துக்குச் சம்மதம் சொல்ல... பெரியவர்களான நாங்களே பேசி முடிவெடுத்தோம். ஆனால், ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. நான் ஒருத்தரை லவ் பண்றேன்’ என்று என்னுள் இடியை  இறக்கினாள் மகள். நான்பட்ட வலிகளையும் வேதனைகளையும் சொல்லி அவளைச் சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை. எனக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு என் தலையில் மண்ணை அள்ளிப்போட்டாள். என்னை ஏமாற்றிய வேதனை, தாங்கிக்கொள்ள முடியாததாக, மீண்டும் மீண்டும் நினைத்துத் துடிக்க வைப்பதாக இருக்கிறது. இந்த மனப்போராட்டத்தில் இருந்து வெளியே வருவது எப்படி? ஆலோசனை அளித்து உதவுங்கள் தோழிகளே...

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

ஈகோவை விடுங்கள்!

காதல் திருமணம் ஒன்றும் தப்பான விஷயம் இல்லையே. நீயே முன்னின்று நடத்தி வைத்திருக்கலாம். மனமாற்றம்தான் இப்போதைக்குத் தேவை. ஈகோவை விட்டுவிட்டு வெளியே வா தோழி. நல்லதே நடக்கும்.

- எஸ்.வெண்மதி, சென்னை - 4

குழப்பம் வேண்டாம்!

நீங்கள் உங்கள் பிள்ளைகளை முற்றிலும் வெறுக்காமல் அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணைகள் சரியானவர்களா என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். தேவையற்ற குழப்பம் வேண்டாம்.

- விஸ்வதா, திண்டுக்கல் - 1

பாசம் காட்டுங்கள்!

குடும்பம் எனும் பூந்தோட்டத்தில் பூக்களை மலரச்செய்யும் மந்திரச்சக்தி உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் பிள்ளைகளிடம் பாசம் காட்டினால்தான் உங்கள் மனம் நிம்மதியை அடைய முடியும்.

- நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர் - 42