மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!

என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!

என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!

ளம் வயதிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளான அக்காவும் நானும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். குடும்பச் சண்டையில் உறவினர்களாலேயே தாத்தா கொலை செய்யப்பட... வேறு கிராமத்துக்குச் சென்று வசித்தோம். பாட்டிதான் தனி ஆளாக எங்களை வளர்த்து, கல்லூரி வரை படிக்க வைத்தார்.      

என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!

அக்காவும் நானும் ஈருடல் ஓருயிராக வளர்ந்தோம். `எச்சூழலிலும் நாம் பிரிந்துவிடக் கூடாது;  ஒரே நபரையே திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றுகூட இளமைப்பருவ அறியாமையில் நாங்கள் பேசியிருக்கிறோம். கல்லூரிப் பருவம் முடிந்த சமயத்தில் அக்காவுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாட்டி. மாமாவின் வேலை விஷயமாக வெளிமாநிலத்துக்கு அவர்கள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இரட்டை ஆண் குழந்தைகளின் தாயான அக்கா, ஒரு வருடத்திலேயே மஞ்சள் காமாலை ஏற்பட்டு இறந்துவிட்டார்.

தற்போது என்னுடைய காதலருடன் நிச்சய தார்த்தம் முடிந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அக்காவின் குழந்தைகளை  நானே  வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், குழந்தைகளின் மீதுள்ள பாசத்தால் அவர்களை என்னிடம் கொடுக்க மாமாவுக்கு விருப்பமில்லை. திருமணத்துக்குப் பின்னர் நான் குழந்தையை வளர்க்க என் காதலரும் அவர் குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை.

அக்காவின் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும் என்ற உறுதியில் மாமாவையே திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ‘என் மனைவியாக வருபவரே குழந்தைகளுக்கும் அம்மா. உன் முடிவு எதுவாக இருப்பினும் எனக்குச் சம்மதம்’ என மாமா சொல்லிவிட்டார். காதலித்து ஏமாற்றிவிட்டுப் போவது பெரிய துரோகம். நீ இல்லாமல் வேறு ஒரு பெண்ணை என்னால் நினைத்துப்பார்க்க இயலாது’ என்று என் காதலர் மன்றாடுகிறார். `காதலரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், மாமாவின் மனைவியாக வருபவர் அக்காவின் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினாலோ, சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலோ அக்காவின் ஆன்மாவுக்குப் பதில் சொல்ல முடியாத பாவியாகிவிடுவேன்’ என்று என் நெஞ்சம் பதைபதைக்கிறது.

இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் நான் மன அமைதி பெறவும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் ஆலோசனை தந்து உதவுங்கள்... தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி.

என் டைரி - 407-ன் சுருக்கம்   

என் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்!

னக்குத் திருமணம் முடிந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. திருமணமான இரண்டு வருடங்களிலேயே, `என்னடி, இன்னுமா விசேஷமில்லை?' என்று உறவினர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் ஒவ்வொரு மாதமும் `தள்ளிப்போகாதா’ என எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்தேன்.மருத்துவமனைகளுக்குச் சென்றபோது `உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அடுத்தமுறை வரும்போது உங்கள் கணவரை அழைத்து வாருங்கள். அவருக்கும் டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம்' என்று டாக்டர்கள் சொன்னார்கள். நான் அவரிடம் இதைச் சொல்லும்போதெல்லாம், ஏதாவதொரு சாக்குப்போக்குச் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். மருத்துவமனை, சிகிச்சை... இதிலெல்லாம் விருப்பமே இல்லாததுபோல காட்டிக்கொள்வார்.

ஊர் வாயை அடைப்பதைவிட, என் மனத்திருப்திக்காக ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான் அடக்க முடியாத ஆசையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மழலைச் செல்வத்தை மடியில் வைத்துக் கொஞ்சத் துடிக்கும் என் தவிப்பை என் கணவருக்கு எப்படிப் புரியவைப்பது? என்னுடைய விருப்பம் நிறைவேற ஒரு வழி சொல்லுங்கள் தோழிகளே...

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்


ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

காது கொடுக்காதே!

யது ஒரு தடையே இல்லை. என் உறவுக்காரப் பெண்ணுக்கு 49-வது வயதில்தான் குழந்தைப் பிறந்தது. இருவரின் மனமும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலே நல்ல வாழ்க்கைதான். அதனால், ஊர் வாய்க்குக் காது கொடுக்காமல் நம்பிக்கையோடு இரு!

- ராஜி குருசாமி, சென்னை - 88

இரண்டில் ஒன்று!

ங்கள் கணவரிடம் பேசி, இருவருமாக உரிய முறையில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தாமதிக்காமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள்! இரண்டில் ஒன்று அவசியம் தேவை.

- ராதா மணிமாறன், திருவண்ணாமலை - 1

மருந்து தேவை!

கொஞ்சமும் தாமதிக்காமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு வேண்டுமானால் உங்கள் கணவரின் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இப்போதைக்கு உங்கள் மன அழுத்தத்துக்கே மருந்து தேவை.

- ஆனந்தி பாலசுப்பிரமணியன் பெங்களூரு - 8.