மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்?

என் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்?
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்?

ஓவியம்: ராஜேந்திரன்

ந்து வருடங்களுக்கு முன் திருமணம்... பல விளம்பரங்களிலும், திரைப்படங்களின் ஆரம்ப காட்சிகளிலும் வருவதுபோல் அன்பான கணவர்; அழகான  குழந்தை.  இப்படி ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்த மணவாழ்க்கையைப் புரட்டிப்போட்டது, கணவருக்கு ஏற்பட்ட சாலை விபத்து.  கணவர் உயிரிழக்க... திக்கு தெரியாமல் பரிதவித்த நான், என் அண்ணன் வீட்டில் `செட்டில்’ ஆனேன். அண்ணன் அன்பாக இருந்தாலும், அண்ணியார் என்னையும், என் குழந்தையையும் பாரமாக நினைப்பதை உணர முடிந்தது.  

என் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்?

இந்நிலையில், என் கணவரின் நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். என் கணவர் வேலை பார்த்த தொழிற்சாலையில்தான் அவரும் பணியில் இருக்கிறார். சாதி, மதம், சடங்குகள் உள்ளிட்டவற்றில் நம்பிக்கையில்லாதவர். அவரைப் பற்றி அக்கம்பக்கத்தில் நல்ல அபிப்பிராயம் இருந்ததால், என் அண்ணனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக, சீர்திருத்த முறையில் முறையில் திருமணம் நடந்தது. அவர் விருப்பப்படி நெற்றி குங்குமம், தாலி, மெட்டி போன்றவற்றை நான் அணிவதில்லை. எனக்கு அவையெல்லாம் அணியப் பிடிக்கும். ஆனால், கணவருக்காக விட்டுக்கொடுத்தேன். இப்போது குடும்பம் சந்தோஷத்துக்குக் குறைவில்லாமல் செல்கிறது.

ஒரு வாரத்துக்கு முன், எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டில் ஒரு திருமணம் நடந்தது. அதற்கு எங்களை அழைக்கவில்லை. விசாரித்தபோது, `மணவாழ்க்கை நடத்தும் பெண் தாலி, மெட்டி இல்லாமல் வந்து விசேஷத்தில் நின்றால், பார்க்க நல்லாவா இருக்கும்' என்று சொன்னார்களாம். இதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல், குழம்பிப்போனேன். கணவரிடம் கேட்டபோது, `அழைக்காதவர்களைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்காதே’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். எனக்கும் அது சரியெனப்பட்டது. இப்போது அண்ணன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ‘பொட்டும் தாலியுமா நிறைஞ்ச முகமா வந்து நில்லு... இப்படி  நிக்காதே’ என்று வார்த்தையால் வறுத்தெடுக்கிறார் அண்ணி. சம்பிரதாயங் களைக் கடைப்பிடிக்கும் சாதாரணப் பெண்ணாக வாழ்வதா, அவர் மனம் கோணாத மனைவியாக வாழ்வதா எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.

ஆலோசனை கூறி உதவுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்?

என் டைரி - 408 -ன் சுருக்கம்

ளம் வயதிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளான அக்காவும் நானும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில்  வளர்ந்தோம். `எச்சூழலிலும் நாம் பிரிந்துவிடக் கூடாது;  ஒரே நபரையே திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றுகூட இளமைப்பருவ அறியாமையில் நாங்கள் பேசியிருக்கிறோம். கல்லூரிப் பருவம் முடிந்த சமயத்தில் அக்காவுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாட்டி. மாமாவின் வேலை விஷயமாக வெளிமாநிலத்துக்கு அவர்கள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இரட்டை ஆண் குழந்தைகளின் தாயான அக்கா, ஒரு வருடத்திலேயே மஞ்சள் காமாலை ஏற்பட்டு இறந்துவிட்டார்.

தற்போது என் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அக்காவின் குழந்தைகளை நானே  வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், குழந்தைகளின் மீதுள்ள பாசத்தால் அவர்களை என்னிடம் கொடுக்க மாமாவுக்கு விருப்பமில்லை. திருமணத்துக்குப் பின்னர் நான் குழந்தைகளை வளர்க்க என் காதலரும் சம்மதிக்கவில்லை.

அக்காவின் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும் என்ற உறுதியில் மாமாவையே திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். `காதலரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், மாமாவின் மனைவியாக வருபவர் அக்காவின் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினாலோ, சரியாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலோ அக்காவின் ஆன்மாவுக்குப் பதில் சொல்ல முடியாத பாவியாகிவிடுவேன்’ என்று என் நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆலோசனை தந்து உதவுங்கள்... தோழிகளே!

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்


ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

குழப்பம் வேண்டாம்!

தோழி... நீ, தியாக வாழ்க்கையை விரும்புகிறாயா? விரும்பிய வாழ்வை வாழ நினைக்கிறாயா?  விருப்பப்பட்ட வாழ்வை ஏற்றுக்கொள்வதுதான் சரி. உன் அக்கா பிள்ளைகளுக்குப் பாசமுள்ள சித்தியாக இரு. உன்னால் முடிந்த உதவிகளைச் செய். விண்ணில் இருக்கும் உன் அக்காவின் ஆசி உனக்கு நிச்சயம் கிடைக்கும். குழப்பம் விடு... காதலரைக் கரம் பிடி!

 - உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

காதலித்தவனை ஏமாற்றாதே!

காதலனை மனதில் வைத்துக்கொண்டு அக்காவின் கணவருடன் உன்னால் தாம்பத்ய வாழ்க்கை நடத்த முடியாது; காதலித்தவனை ஏமாற்றுவதும் சரியல்ல. உன் காதலனையே நீ திருமணம் செய்துகொள். அதற்குமுன் பெரியோர்கள் உதவியுடன் மாமாவை ‘கன்வின்ஸ்’ செய்து அவர் திருமணத்தை முடி.

- ராதா ரமேஷ், மயிலாப்பூர்

அவசரப்படாதே!

`கு
ழந்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உன் காதலனிடம் நீ அமைதியாகப் பேசி புரியவைக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் வேறு வழி இருக்கிறதா என்றும் யோசி. எடுத்த எடுப்பில், `மாமாவையே திருமணம் செய்துகொள்ள போகிறேன்’ என்று அவசரப்படாதே. மிகவும் நிதானமாக ஆழமாக யோசித்து `எது சரி’, `எது தவறு’ என முடிவு செய்.

- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை - 82

ஒரு முடிவுதான் ஓகே!

கா
தல் கனிந்து திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நீ உன்னையே குழப்பிக்கொள்கிறாய். உன் மாமாவுக்கு விரும்பும் பெண் அமையலாம். ஆனால், உன் காதலனைப் போல் உனக்கு அமைய வாய்ப்பில்லை. உன் காதலுனுடன் திருமணம் என்பதே ஒரே சரியான முடிவு.

- வி.மோகனப்பிரியா, ஈரோடு