மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!

என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!

என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!

ன் மகள் மாடர்ன் கேர்ள். உலகம் தன்னையே கவனிக்க வேண்டும்... போற்ற வேண்டும் என்பது அவள் விருப்பமாக இருந்தது. தன் நெருங்கிய தோழி ஒரு பாடத்தில் இரண்டு மதிப்பெண் கூடுதலாக வாங்கிவிட்டால்கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. அடுத்த தேர்வில் அவளைவிட அதிகமாக மதிப்பெண்ணைக் குவித்த பின்பே அவள் மனம் சாந்தம் அடையும். படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் இதே போக்குதான். யாரைப் பிடித்தால் வேலை நடக்கும் என்பதைக் கண்டறிந்து, காய் நகர்த்தி உயரங்களை எட்டினாள். பொறியியல் துறையில் பணிபுரிந்த ஒருவருடன் அவளுக்குத் திருமணம் நடந்தது. அவரவர் துறையில் மேம்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இருவரும் தீவிரமாக இருந்தனர்.

அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. பேரனின் வளர்ப்புக்காக பெரியதாக மெனக்கெடல் இல்லாமல் அவனைப்  பள்ளியின் பொறுப்பில் விட்டுவிட்டு இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர். என் பேரன் அன்புக்காக ஏங்கியதை அவர்கள் இருவருமே பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!

வளரிளம் பருவத்தை எட்டிய என் பேரன், தாய் தந்தையை விரும்பாமல் தனிமையை மட்டுமே நாடினான். ஒருநாள் என் மகளும் மருமகனும் தங்கள் மகனின் நிலை குறித்து என்னிடம் தெரிவித்தனர். `எங்களுடன் ஒற்றை வார்த்தை பதில்களைத் தாண்டிப் பேசுவதில்லை;  நண்பர்களோடு அதிக நேரம் செலவழிக்கிறான்; அவர்களில் சிலருக்குப் போதைப் பழக்கம் இருப்பதாக அக்கம்பக்கத்தில் பேச்சு உண்டு’ என்று வருந்தியதுடன், `இதைப் பற்றிப் பேச்சு எடுத்தாலே தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்கிறான்’ என்று கூறினர். மகனை மாற்றுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொல்கின்றனர். நான் அறிவுரை சொல்ல முற்பட்டால், முணுமுணுப்பாக எதையோ சொல்லிவிட்டு நழுவிவிடுகிறான் பேரன்.

என் பேரனின் மனம் மாற... தவறு செய்திருந்தாலும் இப்போது திருந்திவிட்ட மகள் - மருமகன் மன நிம்மதி பெற... இதையெல்லாம் பார்த்து நான் அமைதியடைய என்ன செய்யலாம்? அறிவுரை கூறுங்கள் தோழிகளே...

- பெயர் வெளியிட விரும்பாத `அவள்' வாசகி

என் டைரி - 409-ன் சுருக்கம்

சாலை விபத்தொன்றில் கணவர் உயிரிழக்க... திக்குத்தெரியாமல் பரிதவித்த நான், என் அண்ணன் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அண்ணன் அன்பாக இருந்தாலும், அண்ணியார் என்னையும் என் குழந்தையையும் பாரமாக நினைப்பதை உணர முடிந்தது. இந்த நிலையில், என் கணவரின் நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூற, பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக, சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. கணவரின் விருப்பப்படி நெற்றி குங்குமம், தாலி, மெட்டி போன்றவற்றை நான் அணிவதில்லை. எனக்கு அவையெல்லாம் அணியப் பிடிக்கும். ஆனால், அவருக்காக விட்டுக்கொடுத்தேன்.

என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்!

ஒரு வாரத்துக்கு முன், எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டில் ஒரு திருமணம் நடந்தது. அதற்கு எங்களை அழைக்கவில்லை. விசாரித்தபோது, `மணவாழ்க்கை நடத்தும் பெண் தாலி, மெட்டி இல்லாமல் வந்து விசேஷத்தில் நின்றால், பார்க்க நல்லாவா இருக்கும்’ என்று சொன்னார்களாம். இதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் குழம்பிப்போனேன். கணவரிடம் கேட்டபோது, `அழைக்காதவர்களைப் பற்றி யோசித்து நேரத்தை வீணாக்காதே’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். எனக்கும் அது சரியெனப்பட்டது. சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் சாதாரணப் பெண்ணாக வாழ்வதா, அவர் மனம்கோணாத மனைவியாக வாழ்வதா எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கிறேன். ஆலோசனை கூறி உதவுங்கள் தோழிகளே...

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

உன் அணிகலன்... உன் உரிமை!

மங்கள நிகழ்ச்சிக்கு மங்கலமான அடையாளங்கள் முக்கியம்தானே? நீங்கள் பெண்ணாக அணிகலங்களை அணிய விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் உரிமையை உங்கள் கணவரிடம் எடுத்துச்சொல்லுங்கள். அவருக்கு வேண்டுமானால் அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களை நிர்பந்திக்க அவருக்கு உரிமை இல்லையே... பேசிப் புரியவையுங்கள்.

- டி.வசந்தா, திண்டுக்கல் - 1

மனதுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்!

உங்களுக்குப் பிடித்த மாதிரி அணிகலன்களை அணிந்துகொள்வதில் ஒரு தவறும் இல்லை. மனதுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். உங்கள் கணவர் போகப்போகப் புரிந்துகொள்வார்.

- சூடாமணி, மதுரை - 14

உன்னை வருத்திக்கொள்ளாதே!

கணவரின் அன்புக்காக நீயே மனமுவந்து அணிகலன்கள் அணிவதை விட்டுக்கொடுத்தால் தவறில்லை. ஆனால், உன்னை வருத்திக்கொண்டு எதையும் செய்யாதே. கணவரிடம் பக்குவமாகப் பேசி உண்மையை உணர்த்து!

- வசந்தி மதிவாணன், அரூர்