
என் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா?’
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த என்னை நன்றாகப் படிக்கவைத்தார் என் அப்பா. இன்ஜினீயரிங் முடித்த கையோடு, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, பெங்களூரில் இருக்கும் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கைநிறைய சம்பளம், விடுதி வாழ்க்கை என மாதங்கள் சென்றுகொண்டிருந்தன. நான் தங்கியிருந்த விடுதியில் நல்ல வசதியுள்ள, மாடர்னான பெண்களும் தங்கியிருந்தார்கள். அவர்களின் பொழுதுபோக்குகளில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். அப்படியொரு தருணத்தில்தான் ஒருவர் எனக்கு மாடலிங் வாய்ப்பைக் கொடுத்தார்.
‘மாடலிங் எல்லோருக்கும் அமைந்துவிடாது. சினிமாவில் நுழைவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்’ என்று உற்சாகப்படுத்தினார்கள் தோழிகள். வீட்டில் உள்ளவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்குத் தெரிவிக்காமல் கலந்துகொண்டேன். ஒளிரும் கேமரா வெளிச்சம் என்னை வேறு ஓர் உலகத்துக்குக் கூட்டிச் சென்றது. மூன்று, நான்கு மாதங்கள் எனச் சொந்த ஊருக்கே செல்ல முடியாத அளவுக்கு அதில் பிஸியாக இருந்தேன்.

பொறுத்துப் பார்த்த அப்பாவும் அம்மாவும் பெங்களூருக்கு நான் இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார்கள். மாடலிங், போட்டோஷூட் என நான் இங்கு செய்யும் வேலைகள் பற்றித் தெரிந்ததும், என் அப்பாவுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. விடுதிக்கு வெளியில் பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் கன்னத்தில் அறைந்து, ‘இதுக்காகவா கடனை வாங்கி, கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வெச்சேன். இப்படி டிரெஸ் பண்ணிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கியே... நாங்க ஊருக்குள்ள தலைநிமிர்ந்து நடக்க முடியுமா?’ என்று கோபப்பட்டதுடன், என்னைச் சொந்த ஊருக்கே அழைத்து வந்துவிட்டார். மாடலிங் துறையில் என் ஆர்வத்தைச் சொல்லி மன்றாடியும், `குடும்ப கௌரவம்தான் முக்கியம்' என்று மறுத்துவிட்டார்.
இங்கு வந்த பிறகும் அடிக்கடி மாடலிங்குக்கான அழைப்பு வரும். இதைப் பார்த்துவிட்டு, செல்போனை பிடுங்கி உடைத்துவிட்டார் என் அப்பா. `கல்யாணம் நடக்கும் வரை வீட்டை விட்டு எங்கும் போகக் கூடாது’ என்று வீட்டில் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். `மாடலிங் செய்வது மகாபாவமா?’ என்று மன உளைச்சலில் மறுகிக்கொண்டிருக்கிறேன். அண்ணன், தம்பிகூட என்னை விரோதி போலத்தான் பார்க்கிறார்கள். மன வருத்தம் தாளாமல் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றேன்.
இன்றைய நவீன உலகில் மாடலிங், சினிமா போன்றவை மற்ற பணிகள் போலத்தான் என்பதை என் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது? என் விலங்குகள் விலக வழி சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத அவள் வாசகி
என் டைரி - 410-ன் சுருக்கம்
என் மகள் மாடர்ன் கேர்ள். நல்ல வேலையில் இருக்கிறாள். பொறியியல் துறையில் பணிபுரிந்த ஒருவருடன் அவளுக்குத் திருமணம் நடந்தது. அவரவர் துறையில் மேம்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இருவரும் தீவிரமாக இருந்தனர்.
அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. பேரனின் வளர்ப்புக்காகப் பெரியதாக மெனக்கெடல் இல்லாமல், அவனைப் பள்ளியின் பொறுப்பில் விட்டுவிட்டு இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர். என் பேரன் அன்புக்காக ஏங்கியதை அவர்கள் இருவருமே பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

வளரிளம் பருவத்தை எட்டிய என் பேரன், தாய் தந்தையை விரும்பாமல் தனிமையை மட்டுமே நாடினான். ஒருநாள் என் மகளும் மருமகனும் தங்கள் மகனின் நிலை குறித்து என்னிடம் தெரிவித்தனர். `எங்களுடன் ஒற்றை வார்த்தை பதில்களைத் தாண்டிப் பேசுவதில்லை; நண்பர்களோடு அதிக நேரம் செலவழிக்கிறான்; அவர்களில் சிலருக்குப் போதைப் பழக்கம் இருப்பதாக அக்கம்பக்கத்தில் பேச்சு உண்டு’ என்று வருந்தியதுடன், `இதைப் பற்றிப் பேச்சு எடுத்தாலே அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்கிறான்’ என்றும் கூறினர். மகனை நல்வழிப்படுத்துவதற்காக எல்லா முயற்சியும் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சொல்கின்றனர்.
என் பேரனின் மனம் மாற... தவறு செய்திருந்தாலும் இப்போது திருந்திவிட்ட மகள் மருமகன் மன நிம்மதி பெற... என்ன செய்யலாம்? கூறுங்கள் தோழிகளே!
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100
மகனுடன் ஒரு வாரம்!
அப்பா அம்மா இருவரும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு மகனுடன் சுற்றுலா சென்றுவர வேண்டும். பெற்றோர் பாசத்தை அவன் உணரும்போது தவறான பழக்கங்களிலிருந்து நிச்சயம் விடுபடுவான். இனி, `வேலை வேலை’ என்று பரபரக்காமல் அன்பு மகனைப் பேணி வளர்ப்பதை முதற்கடமையாகக் கொள்வது அவசியம்.
- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்
கவுன்சலிங் கொடுங்கள்!
தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் கிடைக்காத மகன் மிகவும் மனம் நொந்திருப்பான். இனியாவது தனிமையைப் போக்கி அவனுடன் நேரத்தைச் செலவழியுங்கள். அதுமட்டுமல்ல... அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் கொடுங்கள். அவன் மனம் நிச்சயம் மாறும்.
- எம்.புவனா, சேலம்
நேரம் பார்த்து நேசம் விதையுங்கள்!
பேரன் நல்ல மனநிலையில் இருக்கும் நேரத்தில், அவன் பெற்றோர் முன்பு செய்த தவற்றைத் தாங்களே முன்வந்து திருத்திக்கொண்ட விதத்தைக் கதை போலக் கூறி, அன்பான வார்த்தைகளை விதையாக விதைத்தால், பேரனின் மனதில் பாசப் பயிர் விளையும். இதன்மூலம் நீங்கள் மன நிம்மதியைப் பெறலாம்.
- இல.வள்ளிமயில், திருநகர்