மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 412 - கசந்துபோன கனவு...

என் டைரி 412 - கசந்துபோன கனவு...
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி 412 - கசந்துபோன கனவு...

என் டைரி 412 - கசந்துபோன கனவு...

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். அப்பா அம்மாவுக்கு ஒரே பெண். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். பெற்றோருக்கு என்னை வெளிநாடு அனுப்புவதில் விருப்பமில்லாமல் இல்லை; பணம்தான் பிரச்னை. ஆனால், நான் என் லட்சியத்தில் பிடிவாதமாக இருந்தேன். சண்டை போட்டேன். அழுதேன். ஒருவழியாக என் முடிவுக்கு உடன்பட்ட பெற்றோர், வங்கியிலும் வெளியிலும் நிறைய கடன் வாங்கி என் மேற்படிப்புக்குக் கட்டினர். கனவுகள் சுமந்து வெளிநாட்டுக்குப் பறந்தேன்.

என் டைரி 412 - கசந்துபோன கனவு...

‘இதோ என் புதிய உலகத்துக்கு வந்துவிட்டேன்’ என்று குதூகலமாக உணர்ந்தேன். புதிய நண்பர்கள், சுதந்திரமான கலாசாரம் என அனைத்தையும் ரசித்தேன். அவை எல்லாம் இரண்டு மாதங்கள்தாம்.  அதன்பிறகு, இங்குள்ள விஷயங்கள் எல்லாமே எனக்குப் பாரமாகிவிட்டன. இந்த நாட்டின் கல்விமுறை எனக்கு அந்நியமாக இருக்கிறது, பயமுறுத்துகிறது. ஹாஸ்டல் கட்டணத்துக்கும் என்னுடைய தேவைகளுக்கும் பகுதி நேர வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம். இங்கு நண்பர்கள் நடத்தும் ‘பார்ட்டி’களில் கலந்துகொள்வது என்பது ஒரு சம்பிரதாயமாக, எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. பாடங்கள் பற்றிய பயம் ஒருபக்கம், பார்ட்டி அழுத்தங்கள் ஒருபக்கம், பகுதிநேர வேலை களைப்பு ஒருபக்கம் எனத் திணறுகிறேன். சில நேரங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு இவை என்னை அழுத்தும்போது, ‘பேசாமல், சென்னைக்கே திரும்பிவிடலாமா’ என்கிற எண்ணமும் வருகிறது. ஆனால், என் அப்பா என் படிப்புக்காக வாங்கிய கடன்களையும், நான் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அவர்கள் முன் போய் நின்றால், அவர்களின் கதி என்னவாகும் என்பதையும் நினைத்தால், என் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது. அது தற்கொலை எண்ணம் வரைகூட தள்ளுகிறது.

உண்மையில், என் அப்பா வாங்கிய கடனை, நான் படித்து முடித்து அடைக்க வேண்டும் என்கிற ஆசை இப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆனால், இந்தச் சூழலும் மனநிலையும் அன்றாடப் பணிகளைக்கூட செய்யவிடாமல் என்னைச் சிதைக்கின்றன. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் தோழிகளே!

என் டைரி - 411-ன் சுருக்கம்

என் டைரி 412 - கசந்துபோன கனவு...

நான் நடுத்தரக் குடும்பத்துப் பெண். இன்ஜினீயரிங் முடித்த கையோடு, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, பெங்களூரில் இருக்கும் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. கைநிறைய சம்பளம், விடுதி வாழ்க்கை என மாதங்கள் சென்றுகொண்டிருந்தன. இந்த நேரத்தில் மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் வந்து, அதையே வீட்டுக்குத் தெரியாமல் பொழுதுபோக்காகவே செய்ய ஆரம்பித்தேன். ஒளிரும் கேமரா வெளிச்சம் என்னை வேறு ஓர் உலகத்துக்கு அழைத்துச் சென்றது. மூன்று, நான்கு மாதங்கள் எனச் சொந்த ஊருக்கே செல்ல முடியாத அளவுக்கு அதில் பிஸியாக இருந்தேன்.

பொறுத்துப் பார்த்த அப்பாவும் அம்மாவும் நான் இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார்கள். மாடலிங், போட்டோஷூட் என நான் இங்கு செய்யும் வேலைகள் பற்றித் தெரிந்ததும், என் அப்பாவுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ‘இதுக்காகவா கடனை வாங்கி, கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வெச்சேன். இப்படி டிரஸ் பண்ணிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கியே... நாங்க ஊருக்குள்ள தலைநிமிர்ந்து நடக்க முடியுமா?’ என்று கோபப்பட்டதுடன், என்னைச் சொந்த ஊருக்கே அழைத்து வந்துவிட்டார். மாடலிங் துறையில் என் ஆர்வத்தைச் சொல்லி மன்றாடியும், `குடும்ப கௌரவம்தான் முக்கியம்’ என்று மறுத்துவிட்டார்.

இன்றைய நவீன உலகில் மாடலிங், சினிமா போன்றவையும் மற்ற பணிகள் போலத்தான் என்பதை என் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது? என் விலங்குகள் விலக வழி சொல்லுங்கள் தோழிகளே!

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு... வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 100

குடும்பநலன் முக்கியம்!

மாடலிங் செய்வது மகா பாவம் அல்ல. இருந்தாலும், குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லாத துறையில் நீங்கள் எவ்வளவுதான் சம்பாதித் தாலும்  அவர்களுக்கு நிம்மதி கிடைக்காதபோது உங்களுக்கும் கிடைக் காதல்லவா? அதனால் குடும்பநலனில் அக்கறை காட்டலாமே!

- கா. லலிதா காசிராவ், கிருஷ்ணகிரி - 3

பேசிப் புரிய வை!

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சம்பாதிப்பது அவசியம். அதனால் உன் பெற்றோரிடம் பேசிப் புரிய வை. புரிந்துகொள்ளாவிட்டால் நீ விரும்பிய மாடலிங் துறையைச் சேர்ந்தவர்களை உன் குடும்பத்தாருடன் பேச வைத்தால் தீர்வு கிடைக்கலாம்.

- ரேவதி சம்பத்குமார், ஈரோடு - 12

இப்போதைக்குப் பொறுத்துக் கொள்!

பெற்றோர் உன்னை புரிந்துகொள்ளாவிட்டால் அவசரப்பட்டுப் பதிலுக்கு நீயும் அவர்களைக் காயப்படுத்த வேண்டாம். உன்னை நன்கு புரிந்துகொண்ட ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமே!

- சி.விஜயலெட்சுமி, திருச்சி - 55