மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 265

நன்றிக் கடனுக்காக ஒரு தாலி !

வாசகிகள் பக்கம்

##~##

வாழ்க்கையே கேள்விக்குறியாகி, என் குடும்பம் தவித்து நின்ற வேளையில், எங்களைக் கரையேற்றினார், என் மாமா. இப்போது அவரே என் வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கி விடுவாரோ என்ற குழப்பத்தில் நான் இருப்பது, துயரம்!

நான் பிறந்த சில தினங்களிலேயே அப்பா இறந்துவிட்டார். நிராதரவாக நின்ற என்னையும் என் அம்மாவையும் தேற்றி, தாங்கி, பாரம் எனத் தெரிந்தும் எங்களை ஏற்று, இத்தனை காலமாகச் சுமக்கிறார் என் மாமா. இப்போது நான் பட்டதாரியாக வளர்ந்து நிற்பதற்கு, என் மாமா குடும்பத்தின் அரவணைப்புதான் காரணம்.

சமீபத்தில் எங்கள் வீட்டில் என் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. தன் மகனுக்கு என்னைத் திருமணம் செய்து தரும்படி கேட்டார் என் மாமா. அம்மாவும் முழுமனதுடன் சம்மதித்தார். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மாமா பையன் நல்லவர், அன்பானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் பத்தாவது மட்டுமே படித்திருக்கிறார். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறார். இவரை நம்பி எப்படி என் எதிர்கால வாழ்க்கையை ஒப்படைப்பது?

''நீ அவரை ஏத்துக்கிட்டாலும், அவரோட படிப்பு கண்டிப்பா அவருக்கு ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும். அது உங்க வாழ்க்கையைப் பாழாக்கும். அவருக்கும் உனக்கும் 10 வயசு வித்தியாசம் வேற. நிதானிச்சு முடிவெடு...'' என்று எச்சரிக்கும் என் தோழிகளின் வார்த்தைகளை புறந்தள்ள முடியவில்லை.

என் டைரி 265

என் அம்மாவிடம், ''எனக்கு இந்தத் திருமணத் தில் விருப்பமில்லை’' என்று சொன்னபோது... 'நன்றி கெட்டவள்' என என்னைத் திட்டுகிறார். ''அவங்க மட்டும் இல்லைனா, இன்னிக்கு நாம இல்லை. எனக்காக இதுக்கு ஒப்புக்கோ. உன் கால்ல விழறேன்...'' என்று அழுகிறார். ஆனால், என் மனதில் உள்ள விருப்பங்களை, தயக்கங்களைப் பொருட்படுத்த மறுக்கிறார் அம்மா.

பட்ட கடனுக்காக, என் வாழ்க்கையையே வட்டியாக நினைத்து, 'இதுதான் விதி' என மனதை திடப்படுத்திக் கொண்டு மாமா பையனை ஏற்கவா..? இல்லை, எத்தனை மனங்கள் புண்பட்டாலும் சரி... என் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என, இந்தத் திருமணத்தை எதிர்த்து நிற்கவா..?

குழம்பித் தவிக்கிறேன்... தெளிய வையுங்கள்!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 264 ன் சுருக்கம்

என் டைரி 265

''இருபத்து மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கையில், கணவர் என்னைச் சந்தேகப்படாத நாட்களே இல்லை. எந்த ஆணிடம் பேசினாலும், 'கல்யாணத்துக்கு முன்ன உனக்கும் அவனுக்கும் என்ன பழக்கம்’ என்று கேட்டு, வார்த்தைகளாலேயே கொல்வார். இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எல்லா சித்ரவதைகளை யும் பொறுத்துக் கொண்டேன். தற்போது பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருக்கும் என் மகள்கள் மீதும் தன் சந்தேக சித்ரவதையை ஆரம்பித்துவிட்டார். 'வெளியூரில் வேலை கிடைக்க இருக்கிறது. அங்கே போய்விடுவோம். தனியாகக் கிடந்தால்தான் அவருக்கு புத்தி வரும்' என்று அழைக்கிறாள் மூத்தவள். இந்த வார்த்தைகள் நியாயமாகவே படுகின்றன. ஆனால், 'ஊர் உலகம் என்ன சொல்லும்?' என்கிற தயக்கமும் கூடவே நடமாடுகிறது. என்ன செய்யட்டும்?''

வாசகிகளின் ரியாக்ஷன்...

மகளின் திருமணத்தை மனதில் வை!

உங்கள் நிலைமை மிகவும் தர்ம சங்கடமானதுதான். மூத்த மகள் எடுத்து இருக்கும் முடிவை செயல்படுத்தும்பட்சத் தில், உங்கள் மூவரின் மன உளைச்சலுக்கு அது வடிகாலாக அமையும் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த முடிவு காரணமாக உங்கள் கணவரின் மனப்போக்கு, இன்னும் விபரீதமாகக் கூட மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, சரியானதொரு தருணத்தில், ''கல்யாணமாகி இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போற பிள்ளைகளை இப்படி சந்தேகப்படுறது... அவங்க மனநிலைமையையும், வாழ்க்கையும் குலைச்சுப் போட்டுடும்'' என்று பிராக்டிகலாக சொல்லி புரிய வையுங்கள். நெருக்கமான உறவினர்கள் மூலம், கணவருக்கு கவுன்சிலிங்கும் ஏற்பாடு செய்யலாம். நீங்கள் இப்போது எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும்... உங்கள் மகளின் திருமணத்தை மனதில் கொள்ள வேண்டும் என்பதை மறக்கவேண்டாம். 'பெண்ணின் அப்பா எங்கே?' என்று நாளைக்கு கேள்வி எழக்கூடிய சந்தர்ப்பம் வரக்கூடும். எனவே, உங்கள் மகளிடமும் ஓரிரு வருடங்கள் பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்.''

- எஸ்.பி.சுசீலாதேவி, சென்னை-43

தைரியமாக புறப்படுங்கள்!

ஒரு சந்தேகப் பேயால் இத்தனை வருடம் நீங்கள் அனுபவித்த சித்ரவதை போதும். ஒருவருக்கு கழுத்தை நீட்டிவிட்டால்... வாழ்வோ, சாவோ அவருடன்தான் இருக்க வேண்டுமென்கிற பழைய பஞ்சாங்கத்தை தூக்கி எறியுங்கள். வாழ்க்கையின் சந்தோஷ அச்சாணியாக மூத்த மகள் இருக்கிறாள். நல்ல பதவி யில் இருக்கும் அவளால், உங்கள் வாழ்க்கை நிச்சயம் வளமாகும். நாற்பது வயதிலாவது சந்தோஷமாக இருக்க துணிச்சலாக முடிவெடுங்கள். இரு மகள்களுடன் தைரியமாக தனியே புறப்படுங்கள்.

- ஏ.விஜயலட்சுமி, தர்மபுரி

மாறாவிட்டால்... மாறிவிடுங்கள்!

உங்களை தனியே அழைத்துச் சென்று வாழ வைக்கும் அளவுக்கு மகளுக்கு தைரியம் வந்துவிட்ட பிறகு, இனிமேல் உங்களுக்கென்ன கவலை? அவளையே உங்கள் கணவரிடம் சென்று, ''என்னை யாரும் சந்தேகப்படும்படி என் நடத்தை இல்லை. அப்படி அம்மாவும் என்னை வளர்க்கவில்லை. உங்கள் குணத்தை தயவு செய்து இப்போதாவது மாற்றிக் கொள்ளுங்கள்.  இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை என்றால்... இனி எந்தக் காலத்திலும் முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால், நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள நினைக்கிறோம்'' என்று கேட்கச் சொல்லுங்கள். அப்போது அவரின் பதில் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அந்தப் பதிலில்தான் இருக்கிறது... அவருடைய எதிர்காலம்.

- ஜானகி, சென்னை-20