மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...

என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...

என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...

னக்கு 26 வயதாகிறது. இரண்டு சகோதரிகள். நான் ஒருவரைக் காதலித்தேன். அவரும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் பெற்றோர் சம்மத்துடனேயே திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில், எங்கள் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கும் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். ஒருகட்டத்தில் ‘உன்னோடு வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை’ என்று கூறி, பிரிந்து விட்டார்.

என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...

சில மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்து, மனதை மாற்ற முயற்சி செய்தேன். இதற்கிடையில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தை முகத்தைப் பார்த்தால், அவரது கோபம் மறைந்துவிடும் என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றேன். ஆனால், பிடிவாதமாகக் குழந்தையின் முகத்தையும் பார்க்காமல் என்னை விரட்டியடித்தார். பிறகு, எங்களுக்குள் விவாகரத்து ஆனது. சில மாதங்களில் அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கேள்விப்பட்டேன். எனது குழந்தைக்காக வாழ வேண்டும் என்று கடினமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். நானும் எனது மகளும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தோம். `அப்பாவைப் பார்க்க வேண்டும்’ என அவள் அடம்பிடிக்கும்போதெல்லாம் எதை எதையோ சொல்லிச் சமாளிப்பேன்.

இதற்கிடையில் என் நண்பர், என்னைக் காதலிப்ப தாகக் கூறுகிறார். `உன் மகளை என் மகளாக நினைக்கிறேன். நாம் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் கூறுகிறார். எல்.கே.ஜி படிக்கும் என் மகளோடு அன்பாகப் பழகுகிறார். அவளுக்கும் அவரை மிகவும் பிடிக்கிறது. வாழ்வின் நிதர்சனங்களை அவளுக்குக் கற்றுக்கொடுக்கிறார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. ஆனாலும், அவருக்கு இது முதல் திருமணம் என்பதால் தயக்கமாக உள்ளது. நான் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டால், என் சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற அச்சமும் உள்ளது. `ஒரு தடவை பட்டது போதும்; மறுபடியும் ஏமாந்துவிடக் கூடாது’ எனத் தோன்றுகிறது. அதேசமயம் எனக்கும் ஒரு துணை தேவை என்றும் தோன்றுகிறது. அவரை ஏற்றுக்கொள்ளவா, நிராகரிக்கவா?

குழப்பத்தில் இருக்கும் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 412 -ன் சுருக்கம்

 மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். பெற்றோருக்கு என்னை வெளிநாடு அனுப்புவதில் விருப்பமில்லாமல் இல்லை; பணம்தான் பிரச்னை. ஆனால், நான் என் லட்சியத்தில் பிடிவாதமாக இருந்தேன். சண்டை போட்டேன். அழுதேன். ஒருவழியாக என் முடிவுக்கு உடன்பட்ட பெற்றோர், வங்கியிலும் வெளியிலும் நிறைய கடன் வாங்கி என் மேற்படிப்புக்குக் கட்டினர். கனவுகள் சுமந்து வெளிநாட்டுக்குப் பறந்தேன்.

இந்த நாட்டின் கல்விமுறை எனக்கு அந்நியமாக இருக்கிறது, பயமுறுத்துகிறது. ஹாஸ்டல் கட்டணத்துக்கும் என்னுடைய தேவைகளுக்கும் பகுதி நேர வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம். இங்கு நண்பர்கள் நடத்தும் ‘பார்ட்டி’களில் கலந்துகொள்வது என்பது ஒரு சம்பிரதாயமாக, எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. பாடங்கள் பற்றிய பயம் ஒருபக்கம், பார்ட்டி அழுத்தங்கள் ஒருபக்கம், பகுதிநேர வேலை களைப்பு ஒருபக்கம் எனத் திணறுகிறேன். சில நேரங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு இவை என்னை அழுத்தும்போது, ‘பேசாமல், சென்னைக்கே திரும்பிவிடலாமா’ என்கிற எண்ணமும் வருகிறது. ஆனால், என் அப்பா என் படிப்புக்காக வாங்கிய கடன்களையும், நான் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அவர்கள் முன் போய் நின்றால், அவர்களின் கதி என்னவாகும் என்பதையும் நினைத்தால், என் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கிறது. அது தற்கொலை எண்ணம் வரைகூட தள்ளுகிறது.

உண்மையில், என் அப்பா வாங்கிய கடனை, நான் படித்து முடித்து அடைக்க வேண்டும் என்கிற ஆசை இப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆனால், இந்தச் சூழலும் மனநிலையும் அன்றாடப் பணிகளைக்கூட செய்யவிடாமல் என்னைச் சிதைக்கின்றன. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் தோழிகளே!

என் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.100

எதுவுமே கடினம் இல்லை!

முன் வைத்த காலை பின் வைக்காதே. எடுத்த காரியத்தில் ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் கவனத்துடன் இருந்து படித்தால், எதுவுமே கடினம் கிடையாது. `இன்னும் கொஞ்ச காலம்தானே' என்று நினைத்துப் படித்தால் கண்சிமிட்டும் நேரத்தில் முடிந்துவிடும். பிறகு, இந்தியா வந்து விடலாம். பெற்றோருக்கும் மகிழ்ச்சி; உன் லட்சியமும் நிறைவேறிவிடும். 

 - ராஜி குருஸ்வாமி, சென்னை - 88

 மனதில் உறுதி வேண்டும்!

நீ தேவை இல்லாமல் அச்சப்படுகிறாய். `பார்ட்டிகளில் கலந்து கொள்ள மாட்டேன்; பாடங்களை நன்றாகப் படிப்பேன்... பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்' என இப்போது உறுதிகொள்! உன் லட்சியக் கனவை நனவாக்கும் வரை படிப்பைத் தவிர வேறு வகையில் கவனத்தைத் திருப்பாதே! உன்னால் நிச்சயம் வெற்றிகரமாகப் படிப்பை முடித்துவிட்டு வர முடியும்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

 அப்பாவுக்காக...

உன் அப்பா வாங்கிய கடனை உன் படிப்பை முடித்து அடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கைவிடாதே. கஷ்டமாக இருந்தாலும் உன் அப்பாவுக்காக நீ அங்கு இருந்தாக வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. உன் படிப்பைப் பாதியில் விட வேண்டாம்.

 - என்.ரெஜினா, ஈரோடு