
என் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா?
எனக்கு 26 வயதாகிறது. இரண்டு சகோதரிகள். நான் ஒருவரைக் காதலித்தேன். பெற்றோர் சம்மத்துடனேயே திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில், எங்கள் வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கும் கணவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் ‘உன்னோடு வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை’ என்று கூறி பிரிந்து விட்டார்.

இதற்கிடையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை முகத்தைப் பார்த்தால் அவரது கோபம் மறைந்துவிடும் என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றேன். ஆனால், பிடிவாதமாகக் குழந்தையின் முகத்தையும் பார்க்காமல் என்னை விரட்டியடித்தார். பிறகு, எங்களுக்கு விவாகரத்து ஆனது. சில மாதங்களில் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கேள்விப்பட்டேன். பிறகு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நானும் என் மகளும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் என் நண்பர், என்னைக் காதலிப்பதாகக் கூறுகிறார். `உன் மகளை என் மகளாக நினைக்கிறேன். நாம் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் கூறுகிறார். எல்.கே.ஜி படிக்கும் என் மகளோடு அன்பாகப் பழகுகிறார். அவளுக்கும் அவரை மிகவும் பிடிக்கிறது. எனக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. ஆனாலும், அவருக்கு இது முதல் திருமணம் என்பதால், தயக்கமாக உள்ளது. நான் வேறொரு திருமணம் செய்துகொண்டால், என் சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற அச்சமும் உள்ளது. அவரை ஏற்றுக்கொள்ளவா, நிராகரிக்கவா?
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
துணை நிச்சயம் தேவை!
உன் நண்பரின் பேச்சு உண்மையில் நம்பத் தகுந்த நிலையில் உள்ளது. அறிதலும் புரிதலும் நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. நிச்சயம் உனக்கு ஒரு துணை தேவை. அவர் வார்த்தைகள் மனப்பூர்வமாக அமைந்துள்ளதால், அவரை நீ ஏற்றுக்கொள்... நிராகரிக்காதே!
- இல.வள்ளிமயில், திருநகர்
குழந்தையின் எதிர்காலம் முக்கியம்!
உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் மிகவும் முக்கியம். அவளுக்கு வளரும் வயதில் அப்பாவின் அரவணைப்பு தேவை. நண்பர் நல்லவர் என்றால் தைரியமாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் தங்கைகளின் திருமணம் பற்றிக் கவலைப்படாதீர்கள். இன்று சமூகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. விவாகரத்தும் மறுமணமும் இன்று சகஜமாகிவிட்டன. உங்கள் நண்பர் உங்கள் தங்கைகளின் திருமணத்துக்கு உதவுவாரா என்பதை உறுதிசெய்துகொண்டு திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க என் வாழ்த்துகள்.
- என்.உஷா, சென்னை - 4
பல முறை பேசி முடிவு செய்!
திருமணம் செய்வதற்குமுன், உன் நண்பரிடம் பலமுறை பேசிய பிறகு திருமணம் என்ற முடிவுக்கு வா. உன் மனதுக்கு நல்லது என்று பட்டால் திருமணம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை. வீணாகக் குழப்பமடையாதே!
- ஆர்.பிருந்தா இரமணி, மதுரை - 9