
சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்
அக்கறை காட்டுங்கள்!
முழங்கால் அளவு இருக்கும் சதுரக் கம்பி தாங்குமேடை ஒன்றை ஊன்றியபடி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் தாங்கித் தாங்கி நடந்து போவார் அந்த ஐம்பது வயதுக்காரர். பின்னாலேயே நான் மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு போவேன். முதல் தடவை, எனக்கு வழிவிடுவதற்காகப் பெரிதும் சிரமப்பட்டார். வலியில் கறுத்த தாடைகள் துடித்ததை காருக்குள் இருந்தே அறிய முடிந்தது. ஐந்து நிமிடப் பிரயத்தனங்களுக்குப் பிறகே அவரால் எனக்காக அந்தக் கருவேலம் முற்கள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கி வழிவிட முடிந்தது.
விபத்து ஒன்றில் சிக்கி அவர் முற்றிலும் உருக்குலைந்து இருந்தார். அவர் அருகே போன நான், ``இனிமேல் எனக்காகப் பிரயத்தனப்பட்டுப் பதறிக்கொண்டு வழிவிடத் தேவையில்லை’’ என்று சொன்னபோது, வலியை மீறிச் சிரித்தார். `ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படி தன்னை வருத்திக்கொண்டு எங்கே நடந்து போகிறார்?’ என்ற கேள்வி, இயல்பாகவே என்னுள் எழுந்தது.
அவர் இயலாதவர் என்பதால், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அந்தக் குறிப்பிட்ட நாளில் பெயர் கொடுக்கப்போகிறார் என்பது தெரிந்தது. அதுவரை நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து எனக்கு சிக்கலான பார்வையே இருந்தது. `வேலையே செய்யாமல் குளத்துமேட்டில் அமர்ந்து வெற்றிலையை மென்றபடி ஊர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றுகூட எழுதியிருக்கிறேன். ஆனால், வாழவே வழி இல்லாதவர்கள் பலரின் பிழைப்பு அதை வைத்துதான் ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தபோது, பொத்தாம் பொதுவாக எழுதியதற்காக வெட்கப்பட்டேன். அவர் மட்டுமல்ல, அங்கு குவியும் பல முதியவர்களைப் பார்க்கிறேன். பலரால் கைகளை ஊன்றி பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகே எழுந்து நிற்க முடியும். அப்படியே சப்பக்கென அடுத்த நொடியில் தரையில் அமர முடியாது. அரசாங்கம் ஏதோ ஒருவகையில் இன்னொரு பக்கம் பாயத் துடிக்கிற பணத்தை மடை மாற்றி இவர்கள் பக்கமாகவும் கொஞ்சம் திருப்புகிறது எனத் தோன்றுகிறது. ஒருவகையில் பாவத்தைத் தீர்க்கும் கணக்கு இது என்றுகூடச் சொல்லலாம்.

`பிழைக்கத் தெரியாதவர்கள்’ என ஒரு பிரிவு, உலகம் முழுக்கவே இருக்கிறது. கொஞ்சம் குழந்தைத்தனமானவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.அப்படி ஒருத்தரின் கதைதான் இதுவும்.
``ஊருக்குள்ள வந்து `கொழந்த’னு கேட்டுப்பாருங்க. சின்னப்புள்ளைகூட என் வீட்டுக்கு வழி காட்டும். எப்பயும் பிஸ்கட் பாக்கெட்டை கையில் வெச்சுக்கிட்டே திரிவேன்” என்று மூன்று ஓட்டைகள் தெரியும் முன்னம்பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் குழந்தை என்கிற குழந்தைசாமி அண்ணன். அவருக்கு 65 வயதாகிறது. அவர் சொல்வது உண்மைதானா என அறிய, விளையாட்டுக்காக அவர் ஊரில் போய்க் கேட்டேன்.
எல்லோரும் சிரித்துக்கொண்டே அவர் வீட்டுக்கு வழி காட்டினார்கள். குழந்தை எந்த அளவுக்கு நல்லவர் என்றால், முன்னாள் மாமனாருக்கு இன்னமும் தெவசம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி அப்பாவி. அந்த அப்பாவியிடம் `இந்த அப்பாவியை நன்றாகப் பார்த்துக்கொள்’ எனச் சொல்லி, கையில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்மாவும் அவருக்கு சம்பந்தமே இல்லாத இவருடைய மாமனாருக்கு, பயபக்தியோடு தெவசம் கொடுக்கப்போயிருந்தார்.
``மாமனாரைக்கூட மறக்காம இருக்கீங்களேண்ணே!’’ எனக் கேட்டபோது, ``என்ன சாமி இப்பிடி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. என் குருராயர் அவரு. மருந்தடிக்கிறதுக்கு தண்ணி அள்ளி ஊத்தப் போன எனக்கு, தொழிலையும் கத்துக்கொடுத்து பொண்ணையும் கட்டிக்கொடுத்தவர். ஜென்மம் இருக்கிறவரைக்கும் பண்ணுவேன். நான் போயிட்டாலும் இவளையும் பண்ணச் சொல்லிருக்கேன்” என இரண்டாவது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்.
மருந்து அடிக்கிறதுக்கு தண்ணீர் ஊற்றுகிறவராய் வாழ்வைத் தொடங்கிய குழந்தையண்ணனின் கால் படாத காடுகளே இல்லை. ``ஒரு நாளைக்கு நூறு டேங்க் அடிப்பேன். அன்னிக்கெல்லாம் ஒரு டேங்குக்கு ஒண்ணாருவா. எனக்கு அதை எப்படி எண்ணணும்னுகூட தெரியாது. எங்க மாமனாரு கையில அப்படியே கொடுத்திருவேன். அப்ப அதுவே பெரிய சம்பாத்தியம். சாப்பிட்ட ஊட்டமும் அப்படி” என்று சொல்லி அவர் விவரிக்கும் உணவுப்பழக்கங்கள் எச்சில் ஊறவைப்பவை. ``என் முன்னாள் மாமனார், மொசக்கறிய ஆப்பையில் அள்ளி, தட்டில் போடுவார்’’ என்பார்.
இரண்டாவது மனைவியின் முதல் கணவரின் வழியாக வந்த பிள்ளைகள் இவரையும் சேர்த்துக் கைவிட்டுவிட்டனர். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், இவர்தான் ஒதுங்கிக்கொண்டார். உடல் தளர்ந்த பிறகு பழக்காடுகளுக்குப் போய் கழிவுக் காய்களை வாங்கிக்கொண்டு வந்து விற்கிற சிறு வியாபாரி ஆகிவிட்டார். இவரது குணம் அறிந்து இவருக்காகவே இப்படி ஒதுக்கப்பட்டவற்றை எடுத்து வைக்கிறவர்களும் உண்டு. இவர் அவர்களுக்கு முறை வியாபாரி அல்ல. அவர்கள்தான் இவரது வருகைக்காகக் காத்திருக்கும் நன்முறை வியாபாரிகள். இத்துப்போன டி.வி.எஸ் 50 வண்டியில் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு போவார். அந்த வண்டி அவருடைய சொல்பேச்சைத்தான் கேட்கும். ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் போகும் அந்த வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்கிற வித்தையைக் கடைசிவரை என்னால் கற்றுக்கொள்ள இயலவில்லை. ``ஏண்ணே... கால்ல உதைச்சு ஸ்டார்ட் பண்ற மாதிரி வண்டி வாங்கிக்கலாம்லயா” என்று கேட்டால், ``குழந்தைக்கு அதெல்லாம் ஸ்டார்ட் பண்ணத் தெரியாது சாமி’’ என ஒற்றை வரியில் மறுத்துவிடுவார். அவர் கிளிப்பிள்ளை மாதிரி முதல் தடவை என்ன சொல்லித்தருகிறோமா அதைத்தான் கடைசி வரை பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பார்.
அவர் முகத்தில் படரும் சிரிப்புக்காகவே கழிவுக் காய்கள் அவருடைய பெட்டியில் வந்து விழுகின்றன. ``குழந்தைக்குக் கொடுத்து உதவுறது நம்மோட கடமை’’ என டீக்கடை வாசலில் வைத்து ஒரு மத்திய விவசாயி என்னிடம் சொன்னார். ``மார்க்கெட்ல நல்ல விலை போகுதாம்ல. பெட்டிக்கு அம்பது ரூவா சேத்துக் கொடுங்க குழந்தைண்ணே” என்று கேட்டபோது அவர் சொன்ன பதிலையும் சொன்ன விதத்தையும் நினைத்தால், எனக்கே இப்போது சிரிப்பு வருகிறது.
``குழந்தையால அவ்வளவுதாம் கொடுக்க முடியும் சாமி. குழந்தைகிட்ட திருட்டுத்தனம் இருக்காது. மத்தவங்க மாதிரி எடையில அடிக்க மாட்டேன். அப்புறம் குழந்தைய கைவிட்டுட்டோம்னு நீங்க வருத்தப்படுவீங்க” என்றார். இடையில் சில நாள்களுக்கு முன்பு அடிக்கடி அவர் வந்து நிற்கவில்லை. அதற்கு முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது வந்து சந்தித்துவிட்டுப் போய்விடுவார்.
அவரை அமரவைத்து, ``இந்த வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்றேன். ``நுவான் நுவாக்கிராம் மருந்து மாதிரி மனுஷங்க மனசுல ஊடுருவிப் பாயணும். நின்னு நிதானமா ஊடுருவிப் பாயணும் தம்பி” என்றார். பழச்செடிகளுக்கு அடிக்கப்படும் மருந்து அது. அந்த மருந்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், குழந்தையண்ணன் சொல்கிற ஊடுருவிப் பாய்தல் உதாரணம் மனதில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
கடந்த சென்னை மழை வெள்ளத்தின்போது உசிலம்பட்டியிலிருந்து வந்த பாட்டி ஒருவர் சென்னையில் எப்படியோ உறவினர்களிடம் இருந்து தப்பிப் பிரிந்துவிட்டார். அந்தப் பாட்டியை அழைத்துக்கொண்டு அத்தனை முதியவர்கள் இல்லத்துக்கும் போய்ப் பார்த்துவிட்டோம். அரசு ஆதரவற்றோர் தங்கும் இடங்களையும் போய்ப் பார்த்தோம். ஒருத்தர்கூட அசைந்துகொடுக்கவில்லை.
உசிலம்பட்டி பாட்டியை விடுங்கள். வயதான ஒருவருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை கேட்டு அலைந்தேன். `35 வயதுக்குமேல் நாங்கள் யாரையும் வேலைக்கு எடுப்பது குறித்து சிந்திக்கவே இல்லை’ என முகத்தில் அடித்தது மாதிரி சொன்னார்கள். எல்லா வணிக நிறுவனங்களும் கடைகளும் இப்போதெல்லாம் முதியவர்களை வேலைக்கு அமர்த்துவதே இல்லை. தப்பிப்போனால் வாட்ச்மேன் வேலை தருகிறார்கள். அதற்கும் உட்கார்ந்து எழத் தெம்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள் என என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் ஆதரவற்ற, குழந்தைகள் இல்லாத, குடும்பம் இல்லாத முதியவர்கள் பலர் பேருந்துநிலையங்களில் கையேந்துவதற்கெல்லாம் யார் காரணம்?
நிறைய இளைஞர்கள் இருக்கும் தேசம் இது என்கிறார்கள். நிறைய முதியவர்கள் இருக்கிற, உருவாகிற தேசமும் இதுதான். வேலையில்லாத இளைஞர்கள் கரணம் போட்டுத் தப்பிவிடுவார்கள். வேலையில்லாத இவர்கள், நகரங்களில் என்ன செய்வார்கள்? நகர மனம் சற்றே இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். நுவான் நுவாக்ரான் மாதிரி நம்முடைய மனசாட்சியை ஊடுருவி மஞ்சள் பூத்த, வெறித்த கண்கள் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையண்ணன் மாதிரியான ஆள்கள் சாபம்விட்டால் நாடு தாங்காது. அதைவிடக் கொடுமை, அவர்களுக்கு சாபமே விடத் தெரியாது என்பதுதான்!
- அறம் பேசுவோம்!