
சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்
ஓடி ஓடி உழை!
நீரும் நெருப்பும் மாதிரி இரட்டையர்கள் பற்றிய கதைதான் இது. ஒட்டுமொத்தமான பெரிய சோற்றுப்பானையிலிருந்து இரண்டு பருக்கைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இரண்டும் வெவ்வேறு தட்டு அரிசிகள். இருவருக்கும் ஒரே வயது. முதல் பையனை `ஏலக்காய்’ என்று அழைக்கலாம். இரண்டாவது பையனை `தீக்குச்சி’ என்று அழைக்கலாம். இரண்டுமே காரணப் பெயர்கள்தான்.
ஏலக்காயின் பூர்வீகம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிறுநகரம். தாத்தா ஒரு லோடுமேன். மலையிலிருந்து ஏலக்காய் லோடு ஏற்றிக்கொண்டு நள்ளிரவில் லாரிகள் வந்து நிற்கும். லாரிகள் வந்தவுடன் சாக்கு போர்த்தப்பட்ட, பூட்டப்பட்ட கடைகளின் எல்லோர் கண்களும் ஒருசேர விழித்துக்கொள்ளும். இளம் மஞ்சள் வெளிச்சம் வந்து விழும்போது எல்லோர் கண்களும் ஒரே நேரத்தில் விழிக்கின்றன. அடித்துப் பிடித்து எழுந்து ஓடுவார்களாம். டவுசரை இடுப்புக்கு மேலே தூக்கிக்கொண்டு தாத்தாவுக்குத் துணையாய் ஏலக்காயும் ஓடுவானாம்.
தாத்தாவைத் தொடர்ந்து இவனும் லோடு தூக்கினான். அங்கே தொடங்கிய ஓட்டத்தை இன்னமும் அவன் நிறுத்தவில்லை. நன்றாகவே படித்தான். லோடுமேன் பேரன் சின்னதாய் ஒரு தொழிலதிபர் ஆனான். அதிலேயே அவன் திருப்திப்பட்டுக்கொள்ள வில்லை அவனது ஒரு மனம். இன்னொரு மனமோ, `போதும் ஓட்டம்’ என்று சொன்னது.

என்னிடம் வந்து அமர்ந்ததிலிருந்து ஏலக்காய் பதற்றத்தோடு இருந்தான். ``என்னை மாதிரிப் பையன்கள் எல்லாம், வாழ்க்கையை வேற மாதிரி வாழ்றாங்க; என்ஜாய் பண்றாங்க. வாழ்க்கையில எல்லா நிறத்தையும் வாழ்ந்து பார்க்கிறாங்க. நான் மட்டும் ஏன் சீரியஸாவே இருக்கேன்? எந்நேரமும் மேலே போகணும்கிற கவலை தொடர்ந்துகிட்டே இருக்கு. மத்தவங்க எல்லோரும் வாழ்க்கையை ஒரு தேடல் மாதிரி, தவம் மாதிரி நினைச்சு வாழ்றாங்க. பணம் பணம்னு நான் ஓடுறதை நினைச்சா வெறுப்பா இருக்கு” என்றான். ஏலக்காய் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், தீக்குச்சிக்கு நண்பன் ஒருத்தன் கொடுத்த பதில் இவனுக்கும் பொருந்தும்.
தீக்குச்சியின் சொந்த ஊர், சென்னைக்குப் பக்கத்தில்தான். எந்நேரமும் வாயில் சிகரெட்டை வைத்துத் தீக்குச்சியை உரசியபடி இருப்பான். சிகரெட்டைப் புகைக்காத நேரத்திலும் தீக்குச்சியை உரசி, காலுக்குக் கீழே போட்டுக்கொண்டே இருப்பான். தீப்பெட்டிகளை பண்டல் பண்டலாக வாங்கி வந்து வைப்பான். அவனது காலுக்குக் கீழே தீக்குச்சிகள் சிதறிக் கிடக்கும். நகரத்துக்குப் பக்கத்தில் அவனுக்கு ஒரு கல்யாண மண்டபமும் இருக்கிறது என்றால், வசதியைக் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.
எந்நேரமும் போதையில் மிதக்கிறான். வீட்டில் யாரிடமும் அவனுக்கு மரியாதையில்லை. ``சின்னப்பையனா இருக்கும்போதே என்னோட ரெண்டு சித்தப்பாக்களும் எனக்கு டிரிங்க்ஸ் ஊத்திக் கொடுப்பாங்க. சின்னப்பசங்களைக் குடிக்கவைக்கிறது தப்பில்லையா அங்கிள்?” என்றான். ஆனால், தங்கமான பையன். என்னை முதல்முறையாகப் பார்த்தபோது, ``எனக்கு வாழ்றதுலயே விருப்பமில்லை அங்கிள். வேலைக்குப் போறதைப் பற்றி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ்! ” என்றான். களிப்பின் எல்லையில்... அதேசமயம் வெறுப்பில் நின்றுகொண்டிருந்தான்.

பணம் குறித்து அவனிடம் நிறைய முறை பேசியிருக்கிறேன். ``பணம்லாம் ஒண்ணுமில்லை அங்கிள். எனக்கு அதுலயெல்லாம் விருப்பமில்லை. எனக்கு மேரேஜ்லகூட ஆர்வமில்லை அங்கிள்” எனப் பட்டும்படாமல் சொல்வான். ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அரை மணி நேரத்தில் செலவு செய்துவிட்டு வந்து நிற்பான். பணம், கஷ்டங்கள் குறித்து ஏதாவது பேசத் தொடங்கினால், கொட்டாவி விடுவான், முகத்துக்கு நேராகவே. அவனை எதைக்கொண்டு மீட்டெடுப்பது என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
ஒருகட்டத்தில் அவனை அழைத்துக்கொண்டு மலை பங்களா ஒன்றுக்கு நண்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நண்பனும் சாதாரண ஆளில்லை. இந்தப் பையன் இப்போது செய்வதை, அவன் டவுசர் போட்ட காலத்திலேயே செய்து முடித்த ஆள். இப்போது குடும்பம், பொறுப்பு என வந்ததும் சொக்கத்தங்கமாக மாறிவிட்டான். தீக்குச்சியை எடுத்த எடுப்பிலேயே `நம்ம ஆள்!’ என அடையாளம் கண்டுகொண்டான். என்னைத் தனியே போகச் சொல்லிவிட்டு, அவனைத் தத்தெடுத்துக் கொண்டான்.
இரண்டு நாள்கள் இருவரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். சிகரத்தை நோக்கி ஒரு வண்டிப்பயணம் மேற்கொண்டார்கள். நடு இரவில் அறைக்குள் இரண்டு பேரும் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருப்பது அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொள்வார்கள். ஏதோ உள்ளுக்குள் ஆழமாக ரசாயன மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அடர்த்தியாய் உணர்ந்தேன். எந்தச் சூழ்நிலையிலும் என்ன பேசினார்கள் என்பதை மட்டும் கேட்கவே கூடாது என யோசித்துக்கொண்டேன். திரும்பி வரும்போது பையன் கொஞ்சம் போதையில்தான் இருந்தான். ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னான். ஏதோ ஒன்றைக் கண்டடைந்துவிட்டவனின் உற்சாகம் அந்த வார்த்தையில் இருந்தது. ``அங்கிள், உங்களைவிட உங்க ஃப்ரெண்டு செம கெத்து” என்று சொல்லிவிட்டு அவன் கண்டடைந்த வார்த்தையைச் சொன்னான்.

``மாடு மாதிரி உழைக்கணும். மகாராஜா மாதிரி வாழணும். அப்பதான் எந்த போதையும் டேஸ்ட்டா இருக்கும்.” தீக்குச்சி, அவனுக்கான வார்த்தைகளை ஒரு தேயிலை எஸ்டேட் மரத்தடியிலிருந்து பெற்றுக்கொண்டான். இதே வார்த்தைகளைத்தான் ஏலக்காயிடமும் தட்டில் வைத்துக் கொடுக்கவேண்டியிருக்கிறது.
பணம் சம்பாதிப்பது சம்பந்தமான ஆழமான எதிர்மனநிலை அல்லது பணத்தை மதிக்காத மனநிலை என இரு வழிகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. பணம் எப்போதும் தன்னை மதிப்பவனிடமே வந்து சேர்கிறது. மதிக்காதவனிடம் இருக்கிற பணம் சீக்கிரமே கரைந்துபோகும். தவிர, பணம் சம்பாதிப்பது தொடர்பான எதிர்மனநிலை, இன்னொரு காலகட்டத்தின் மனநிலை. கொஞ்சம் அதிகப்படியாகச் சொல்வதென்றால், அந்த மனநிலையை உண்மையிலேயே பொருட்படுத்தத் தேவையில்லை.
`பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள். பொருள் நம் அடிப்படையைத் தீர்மானிக்கிறது. அது கூடுதலாகவே சுகவாழ்வை நமக்கு அருள்கிறது. சுகவாழ்வு வாழத்தானே இந்தப் பூமிக்கு வந்தோம். சீப்பட்டு அலைவதற்காகவா எங்களது வீட்டுக் கருப்பை எங்களைப் பெற்றுப் போட்டது. ``ஏலக்காய் தூக்கிச் சுமந்த இல்லையா... சுகமா வாழலாம் தப்பில்லை. கொண்டாட்டத்துக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை. சார்ஜ் போட்டுட்டுப் போய் மறுபடியும் களத்தில் குதி. போதும் நிறுத்திக்கலாம்னு உன் அடியாழம் சொல்றவரைக்கும் ஓடு” என்றேன் ஏலக்காயிடம்.
நன்றாகக் கூர்ந்துபார்த்தால், எங்களுக்கு அடுத்து பிறந்த தலைமுறை மிகையான பதற்றத்தில் இருப்பது தெரிகிறது. முன்முடிவோடு எல்லாக் கருத்துகளையும் உருவாக்கிக்கொள்கி றார்கள். அப்புறம் அந்தக் கருத்தைக் கட்டிப்பிடித்துப் படுத்துக்கொண்டு அதனோடு சண்டை யிட்டுக்கொள்கிறார்கள். இவர்களுக்கு இப்படி இலவசமாகக் கருத்துகளை உற்பத்தி செய்து தருவதற்கு என்றே ஊருக்குள் நிறைய பெரிய தலைக்கட்டுகள் சுற்றுகின்றன. அவர்களின் பதற்றம் அவர்களுடைய வேலைகளிலும் தொற்றிக்கொள்கிறது. மேலே மேலே போக வாய்ப்புகளிருந்தும் இதுமாதிரியான எதிர் மனநிலைகளில் சிக்கிக்கொண்டு அவற்றை யெல்லாம் தவறவிட்டுவிடுகின்றனர்.
எங்கள் கல்லூரியான சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஹாஸ்டலில் எல்லோரும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், நாங்கள் அப்போதே எதிர்க்கலக நடவடிக்கையாக அதை எதிர்த்துப் பொங்கல் விழா கொண்டாடி, ஆங்கிலம் பேச மாட்டோம் என அடம்பிடித்தோம். இப்போது நன்றாக யோசித்துப்பார்க்கிறேன். கற்றுக்கொள்வதில் இருக்கும் பயம்தான் என்னைத் தனிப்பட்ட முறையில் அதை எதிர்க்கச் சொல்லியது. மற்றவர்களுக்கு எப்படி என எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலம் தெரியாததால் பல இடங்களில் என்னுடைய பொங்கல் பானை பொங்கவில்லை. இதுபோன்ற எதிர்மனநிலைகளைக் கக்கத்தில் தூக்கிக்கொண்டு சுற்றவேண்டிய அவசியமில்லை என்பது இப்போது புத்திக்கு உறைக்கிறது.
எங்களைவிடக் கூடுதலாக ஏலக்காய்களும் தீக்குச்சிகளும் ஆழ்ந்த குற்றவுணர்வோடு தேவையற்ற கருத்துகள் பலவற்றையும் பற்றிக்கொண்டு அலைகிறார்கள். எல்லாவிதமான சுமைகளையும் உதறுவதற்காக எல்லோருக்கும் சொல்வது இதுதான்... `மாடு மாதிரி உழைங்க. மகாராஜா மாதிரி வாழுங்க!’
- அறம் பேசுவோம்!