தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

‘`ஒருவேளை காலம் என்மேல் கருணை காட்டாமப் போயிருந்தா, என் அத்தியாயம் முடிஞ்சு ஒன்பது வருஷங்களாகி யிருக்கும். எனக்கு இது ரெண்டாவது வாய்ப்பு. இந்த வாய்ப்பும் எப்போ வேணா என்கிட்டருந்து பறிக்கப்படலாம். அது வரைக்கும் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருத்தங்களுடைய புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமா இருக்கணும்னு ஆசைப்படறேன்’’ - மென்சிரிப்பில் மனம் ஈர்க்கிறார் அனிதா சத்யம். சென்னையில் வசிக்கிற போட்டோகிராபர்.

அனிதா, `கிகுச்சி' என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டவர். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டவர். அதன் பிறகு கிடைத்த இரண்டாவது வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்துக் கொண்டாடுகிறார். அனிதாவின் கதையைக் கேட்டால் நமக்கு வலிக்கிறது. அவரோ, புன்னகையால் வலி கடக்கிறார்.

‘`மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நான். எம்.ஏ சோஷியாலஜி படிச்சிருக்கேன். அப்பா ஃபேஷன் போட்டோகிராபர். நார்த்ல வளர்ந்தாலும் தமிழர் கலாசாரத்தோடும் கட்டுப்பாடு களோடும் வளர்ந்ததால அப்பா எனக்கு ரொம்ப டீடெயில்டா போட்டோகிராபி சொல்லித்தரலை. கல்யாணத்துக்குப் பிறகுதான் என் போட்டோகிராபி ஆர்வத்தைத் தூசு தட்டினேன். பாயின்ட் அண்டு ஷூட் கேமராவில் எனக்குப் பிடிச்ச காட்சிகளை போட்டோஸ் எடுத்திட்டிருந்தேன். குழந்தை களை ஸ்கூல்ல விட்டுக் கூட்டிட்டு வர்றது, வீட்டு வேலைகளை முடிச்சிட்டு போட்டோஸ் எடுக்கிறதுனு பிசியா போயிட்டிருந்த என் வாழ்க்கையில 2010-ம் ஆண்டுல அந்தப் பிரச்னை தலையெடுத்தது.

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

தினமும் சாயந்திரமானா 104, 105 டிகிரியில கடுமையான காய்ச்சல் அடிக்கும். அதிகாலை வரை குறையாது.  அப்புறம் சாயந்திரம் வரை நார்மலா இருப்பேன். ஒவ்வொரு நாளும் உடம்புக்குள்ளே கட்டிகள் மாதிரி உருவாகும். எத்தனையோ டாக்டர்ஸ் பார்த்தும் அது என்ன பிரச்னைனு கண்டுபிடிக்கவே முடியலை. கிட்டத்தட்ட நாலு மாசங்கள்  ஆஸ்பத்திரியில இருந்தேன். ஒவ்வொரு நாளும் மரணத்துக்குப் பக்கத்துல நெருங்கிட்டிருந்தேன். எனக்கு வந்திருந்த பிரச்னைக்குப் பெயர் ‘கிகுச்சி’யாம். அரிய நோயான அது, கேன்சருக்கு முந்தைய நிலைன்னும், கவனிக்காமவிட்டால் கேன்சரா மாறிடும்னும் சொன்னாங்க. ஆனா, அதுக்கு என்ன சிகிச்சைகள் தரணும்னு யாருக்கும் தெரியலை.

எனக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அலர்ஜியாயிடும். நரம்புகள் வீங்கிப் புடைக்கும். ஒருநாள் டாக்டர்கிட்ட, ‘அனிதா அவ்வளவுதானா டாக்டர்? என் சேப்டர் முடிஞ்சுபோச்சா?’னு கேட்டேன். என் எட்டு வயசு பெண் குழந்தையை அவளுடைய வகுப்புத்தோழி வீட்டுல விட்டிருந்தேன். அவங்கதான் பார்த்துக்கிட்டாங்க. என் மகன் அப்போதான் முதல் வருஷம் காலேஜ்ல அடியெடுத்துவெச்சிருந்தான். நான் பிழைக்கமாட்டேங்கிற மனநிலைக்கு வந்தபோது, ‘தயவுசெய்து  என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க. ரெண்டு நாளாவது என் மகளோடு இருந்துட்டு சாகறேன்’னு அழுதேன். வாழ்வா, சாவாங்கிற அந்தப் போராட்டத்துல கடைசி முயற்சியா லைஃப் சேவிங் டிரக்னு ஸ்டீராய்டு கொடுத்தாங்க. என் பிரச்னைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படலை தடுக்கறதுக்கான மருந்துகளும் இல்லை. தற்காலிகமா கட்டுப்படுத்த ஸ்டீராய்டு மட்டும்தான் ஒரே வழி. கிட்டத்தட்ட 19 வருஷங்களா அந்த மருந்துகளின் தயவால் தான் வாழ்ந்திட்டிருக்கேன்’’ - மறுபிறவி எடுத்தவருக்கு, இரண்டாம் வாழ்க்கையிலும் இன்னல்கள் இல்லாமல் இல்லை.

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

‘`ஸ்டீராய்டு மருந்துகள் பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மருந்து எடுத்துக்கும்போது உடம்பு முழுக்க வலி உயிரே போகும். மூட்டுவலியைக்கூட சகிச்சுக்கலாம். ஆனா, எலும்பு வலியை ஃபீல் பண்ணியிருக்கீங்களா? நரக வேதனை அது. கைகால்கள் வீங்கிடும். ஸ்டீராய்டு எடுக்க ஆரம்பிச்சதால என் 40 வயசுலேயே பீரியட்ஸ் நின்னுடுச்சு. பார்வைத்திறன் குறைஞ்சுபோச்சு. திடீர் திடீர்னு மயக்கம் வரும். என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே தெரியாத நிலை ஏற்படும். மிச்ச வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்தாகணும்னு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆஸ்பத்திரியிலேருந்து வீட்டுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் போனஸா தெரிஞ்சது. அம்மா அப்பா விருப்பப்படி வாழ்ந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பாதி வாழ்க்கை முடிஞ்சு போயிருந்தது. தமிழ் கலாசாரம்னு சொல்லிச் சொல்லியே கணவரையும் புகுந்த வீட்டு உறவுகளையும் பார்த்துக்கிறதுதான் பெண்ணின் வாழ்க்கையில பிரதானம்னு என் மனசுல பதியவெச்சிருந்தாங்க. நானும் அப்படித்தான் வாழ்ந்திருக்கேன். ஆனாலும், ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தேன். ரெண்டாவது வாய்ப்பா கிடைச்ச வாழ்க்கையிலாவது எனக்காக வாழணும், எனக்காக ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டேன். போட்டோ கிராபிதான் அதுக்கான பதிலா இருந்தது. ஒரு வருஷம் முழு ஓய்வெடுத்துட்டு, 2011-ம் வருஷத்துலேருந்து முழுவீச்சில் போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன்’’ - சுயம் அறிந்தவரின் புகைப்படங்கள் வாழ்வியல் பேசுகின்றன.

‘`இயல்பிலேயே நான் கூச்ச சுபாவம் உள்ளவள். அந்த சுபாவத்துக்குப் பெண்களை போட்டோஸ் எடுக்கிறதுதான் சரியா இருக்கும்னு தோணுச்சு. கிராமங்களை நோக்கிப் போனேன். வயல்வேலை, கூலிவேலை செய்யற பெண்களைச் சந்திச்சுப் பேசுவேன். போட்டோஸ் எடுப்பேன். வாய்ப்பிருந்தால் அந்தப் படங்களை அவங்களுக்கு பிரின்ட் போட்டுக் கொடுத்துடுவேன். என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிறதை என்னால ஃபீல் பண்ண முடியுது. வண்டி ஓட்ட அனுமதியில்லாதபோதும் இப்பவும் போட்டோஸ் எடுக்க நான் டூவீலரில் கிளம்பிடுவேன். அடிக்கடி மயக்கம் வரும். வண்டி ஓட்டிட்டுப் போகும்போது பலமுறை கீழே விழுந்து, அடிபட்டிருக்கு. எனக்கு என்ன பிரச்னைனு புரியாமலில்லை. ஆனாலும், நான் வாழப்போற நாள்கள் குறைவு. அந்த நிலையில் என்னால வீட்டுல சும்மா உட்கார முடியாது. ‘இதைத்தாண்டி என்ன நடந்துடப் போகுது’ங்கிற எண்ணம். விழும்போதும் விபத்துக்குள்ளாகும்போதும், ‘இது உனக்கு ரெண்டாவது வாய்ப்பு. இதுக்கெல்லாம் சோர்ந்துடாதே... உன்னால இன்னும் நிறைய பண்ணமுடியும்’னு மனசு சொல்லும்’’ - உற்சாக மனுஷியின் இந்த நம்பிக்கைக்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

‘`நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோது, போப் ஜான் பால்-2 பூனாவில் ஒரு சர்ச்சுக்கு வந்திருந்தார். அன்னிக்கு ஸ்கூல் லீவு விட்டிருந்தாங்க. அவர் யாரு, என்ன பண்ணியிருக்காருனு விசாரிச்சேன். ‘இவர் உலகத்துக்கே நல்லது பண்ண வந்திருக்கார்.  ஆதரவற்றவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்வார்’னு நிறைய சொன்னாங்க. நாளைக்குப் பெரியவளானதும் நாமும் அவரை மாதிரி நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு அன்னிக்கு மனசுல விழுந்தது ஒரு விதை. அது நடக்கலை. ஆனாலும், பெண்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா, அவங்களுடைய குட்டிக்குட்டி கனவுகள் நிறைவேற என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். கிராமப்புறங்களில் போட்டோஸ் எடுக்கப்போகும்போது அப்படி அவங்களுடைய சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றுவேன். வரையப் பிடிக்கிறவங்களுக்கு அதுக்கான பொருள்களை வாங்கித் தருவேன். என் காட்டன் சேலைகளைப் பார்த்துட்டு அழகா இருக்கேனு கேட்கறவங்களுக்கு அதே மாதிரி சேலைகள் வாங்கித் தருவேன். ஆனா, அது மட்டுமே போதாதுனு தோணுச்சு.

எனக்கு வந்த பிரச்னைக்கான அறிகுறிகள் தெரிஞ்சதால கேன்சரா மாறுவதைத் தவிர்க்க முடிஞ்சது. கிராமப் பெண்களுக்கு கேன்சர் விழிப்பு உணர்வு கம்மி. நோய் வந்தாலும் தங்களை ஒதுக்கிவெச்சிடுவாங்களோனு வெளியே சொல்லத் தயங்குவாங்க. கேன்சரால பாதிக்கப்படற ஏழைகளுக்கு கீமோதெரபி செய்துக்கற அளவுக்குப் பொருளாதார வசதி இருக்காது. ஒரு முறை கீமோ பண்ண 25,000 ரூபாய் வரை செலவாகும். கையில காசில்லைனு சிகிச்சையைப் பாதியோடு நிறுத்திடறவங்க பலர். அப்படி சிகிச்சைக்கு வசதியில்லாத புற்றுநோயாளி ஒருத்தரை திருச்சியில ஒரு டாக்டர் எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. ‘சாவின் விளிம்பில் நின்னுக்கிட்டிருந்த அவங்களுக்கு ஒருமுறை கீமோதெரபி செய்துக்க உங்களால ஏதாவது உதவ முடியுமானு யோசிங்க’னு சொன்னாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு அவங்களை சம்மதிக்கவெச்சு போட்டோஸ் எடுத்தேன். ‘உங்களுடைய உண்மையான நிலையை மத்தவங்களுக்கு சொன்னாதான் ஏதாவது உதவிகள் வாங்க முடியும்’னு கன்வின்ஸ் பண்ணினேன். ரெண்டு நிமிஷ ஆடியோவிஷுவலா அதை ரெடி பண்ணி என் நண்பர்களுக்கு அனுப்பினேன். அப்படிக் கிடைச்ச உதவியில அவங்களுக்கு கீமோ கொடுத்து, சாவைத் தற்காலிகமா தள்ளிப்போட்டோம். என் நண்பர் மூலமா நடிகர் விஷாலின் தொடர்பு கிடைச்சு, அவர் சன் டி.வி-யில பண்ணின ‘நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்கவெச்சோம். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் ஒரு தனியார் மருத்துவமனை அவங்களுக்குக் வாழும் காலம் வரைக்கும் சிகிச்சைகளை இலவசமா கொடுக்கவும், அவங்களுடைய பெண் குழந்தையின் மொத்த படிப்புச் செலவை ஏத்துக்கிறதாகவும் உறுதியளிச்சாங்க. என் போட்டோஸ் மூலமா ஓர் உயிரைக் காப்பாத்த முடிஞ்துல எனக்கு சந்தோஷம். இதைத் தொடரணும்கிறதுதான் என் லட்சியம்.

வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்

ஆரம்ப காலத்துல ‘இதெல்லாம் உனக்குத் தேவையா’னு கேட்ட என் கணவரும் பிள்ளைங்களும் இப்போ என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. இது இல்லாம நானில்லைனு புரிஞ்சதால ‘பார்த்து பத்திரமா பண்ணு’ங்கிறதோட நிறுத்திக்கிறாங்க. என்னால ஒரு நாளும் சும்மா இருக்க முடியாது. ஏதாவது வேலை செய்யணும். அடூர் கோபாலகிருஷ்ணன் சாரின் மலையாளப் படத்துல ஸ்டில் போட்டோகிராபரா வொர்க் பண்ண வாய்ப்பு வந்தது. பண்ணிக்கொடுத்தேன். பார்ட் டைமா இந்தி சீரியல்களை தமிழுக்கு மொழிமாற்றம் பண்ணிக்கொடுக்கறேன். இந்த எல்லா வேலைகளுமே எனக்குக் கிடைச்ச ரெண்டாவது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிறதுக்கான முயற்சிகள்தான்.

பொதுவா காஸ்ட்லியான கேமராவை யாரும் அடுத்தவங்க கையில கொடுக்கமாட்டாங்க. ஆனா, நான் கிராமங்களுக்கு போட்டோஸ் எடுக்கப்போகும்போது, வயலில் வேலை பார்த்திட்டிருக்கும் பெண்கள் கழுத்துல கேமராவை மாட்டிவிட்டு, அவங்களையும் போட்டோஸ் எடுக்கவைப்பேன். அடுத்தவங்க முகத்துல தெரியற சந்தோஷத்துக்கு ஏதோ ஒருவகையில நான் காரணமா இருக்கேங்கிறதை விடவா, கேமரா பெருசு?  வாழ்க்கை நிலையில் லாதது. இன்னிக்கு இருக்கிறது நாளைக்கு இல்லாமப் போயிடுது. வாழற நாள்களில் நாமும் சந்தோஷமா இருந்து, அடுத்தவங்களையும் சந்தோஷப்படுத்தலாமே’’ - அழகாகச் சொல்கிற அனிதாவை வாழ்க்கைக்கே பிடித் திருக்கிறது. அதனால்தான் இன்னொரு பிறவியையும் அதில் இனிமையையும் அள்ளிக் கொடுத்திருக்கிறதுபோல!

- ஆர்.வைதேகி