அப்பா மகன்... ஒரு அபாய ஆட்டம் !
வாசகிகள் பக்கம்
##~## |
என் மகனுக்கும், கணவருக்குமான ஈகோ பிரச்னையில் நிம்மதி இழந்து நிற்கிறோம் நானும், என் மகளும். மகனுக்கு ஏழு வயது, மகளுக்கு இரண்டு வயது இருந்த சமயம்... வெளிநாட்டு வேலைக்குப் போனார் கணவர். இந்தப் பிரிவு எங்கள் அனைவருக்குமே தாங்க முடியாத துயரமாக இருந்தாலும், அன்றைய குடும்பச் சூழல் அந்த வேலையை ஒதுக்கும் தைரியத்தை எங்களுக்குத் தரவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு வார விடுமுறையில் வருவார். மற்றபடி, கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளுமே எங்களுக்குள் பாலமானது.
குடும்பத் தலைவர் வீட்டில் இல்லாமல் வாழும், வளரும் சூழலை நானும் என் பெண்ணும் ஏற்றுக் கொண்டோம், புரிந்து கொண்டோம். ஆனால், என் பையன் வளர வளர, அப்பா மீது அவனுக்கு கோபமும் வளர்ந்தது. ''குடும்பத்தைவிட காசுதான் அவருக்குப் பெருசாயிருக்கா..?'' என்று சூடானவனிடம், ''நம் எதிர்காலத்துக்காகத்தான் அப்பா இந்த தியாகத்தைச் செய்கிறார்'' என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் பயனில்லை.
அதேசமயம், அப்பா இல்லாத குடும்பத்தை, பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் தலைமகனாக தன் கடமையைச் செய்ய அவன் தவறவில்லை. என்னையும், தங்கையையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான். ஆனால், அவனுக்கும் அப்பாவுக்குமான இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே வந்ததுதான் வேதனை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அமைதியாகிவிட்டேன்.

இருபது ஆண்டுகள் வெளிநாட்டில் கழித்த கணவர், தற்போது இங்கேயே செட்டிலாகிவிட்டார். தான் இத்தனை வருடம் தவறவிட்ட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துவிடும் ஆசையுடன் இருக்கிறார். ஆனால், இதுவரை தன் கட்டுப்பாட்டில் இருந்த குடும்பத்தை, அப்பாவிடம் ஒப்படைக்க மனமில்லை மகனுக்கு. கூடவே அவர் மீது இவன் வளர்த்து வந்த வெறுப்பும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் இடையே தினமும் சண்டை வெடிக்கிறது.
'என்னைப் புரிஞ்சுக்காம பேசறானே...’ என்ற ஆற்றாமையும் கோபமுமாக, மகனுடன் மல்லுக்கு நிற்கும் கணவரை சமாதானப்படுத்த முடியவில்லை. அவனையும் மாற்ற முடியவில்லை. நாளிதழ் வாங்கும் விஷயத்தில்கூட ஈகோவால் முரண்படுகின்றனர்.
இதற்கு நடுவே, என் மகள் ஒரு பையனைக் காதலிக்கிறாள். நானும் அவனை அறிவேன். படிப்பு, வேலை, குடும்பம் என்று எல்லாவற்றிலும் சிறப்பானவன். பிரச்னை என்னவென்றால், இதை நாங்கள் எங்கள் வீட்டில் சொன்னால், யாராவது ஒருவர் ஒப்புக்கொண்டாலும்... வேண்டுமென்றே இன்னொருவர் நிச்சயமாக எதிர்ப்பார். கணவருக்கும், மகனுக்கும் நடக்கும் ஆடு - புலி ஆட்டத்தில் என மகளின் வாழ்க்கை வெட்டுப்பட்டுவிடுமோ எனக் கவலையாக இருக்கிறது.
உங்கள் ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 268ன் சுருக்கம்...
''திருவிழாவுக்காக நன்கொடை வசூலிக்க வீடு வந்தது எங்கள் பகுதி இளைஞர் படை ஒன்று. அதில் ஒருவன் மட்டும், அதற்கு முன் நான் அறிந்திராதவனாக இருந்தான். கையில் பணம் இல்லாததால் மறுநாள் வரச் சொன்னேன். மறுநாள் வந்தது, அதே பையன். ஹாலில் அமர வைத்துவிட்டு பணம் எடுத்து வந்து கொடுத்தேன். அவன் திடீரென, 'உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் பெட்ரூமுக்கு வர்றீங்களா?’ என்றான். ஆடிப்போன நான், 'மரியாதையாக இங்கிருந்து போயிடு' என்று திட்டியதோடு... வேகமாக வெளியே வந்து கத்தி கூட்டத்தைக் கூட்டிவிட்டேன். பக்கத்தில் குடியிருந்தவர்களால் போலீஸில் ஒப்படைக்கப்பட்டான் அவன்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நான் வெளியில் போகும்போதெல்லாம்... மற்றவர்கள் என்னைப் பற்றி பேசுவது போலவே உணர்கிறேன். 'அவன் அப்படி என்னிடம் கேட்குமளவுக்கு நம் நடத்தையில் ஏதும் குறை இருக்கிறதோ?' என்றும் எனக்குள் குழப்பங்கள். இதிலிருந்து மீள வழி சொல்லுங்களேன் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்...
ஊர் என்ன நினைத்தால் என்ன?

யாரோ ஒருவன் பெட்ரூமுக்கு அழைத்ததே முரண்பாடாக இல்லையா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். இதில் பெரிதாக எந்தத் தவறும் இல்லை. 'மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ?' என்று ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துக் கொண்டிருந்தால்... வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்விட வேண்டியதுதான். உங்களைப் பற்றி அவர்கள் மதிப்பிட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகிறது? எனவே, இதைப் பற்றியே கவலைப்பட்டு வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாமல், வழக்கம் போல உங்கள் வேலைகளில் மூழ்குங்கள் தோழி!
- எஸ்.சத்யா முத்துஆனந்த், தொரப்பாடி
அந்த நிமிடம் மறந்திருக்க வேண்டும்!
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் எதற்காக நடக்கிறது என்பதைப் பற்றி நம்மாலேயே கணிக்க முடியாது. அதற்காக நம்மை நாமே குழப்பிக் கொண்டிருந்தால்... மன வலிகளே மிஞ்சும். இந்த உலகில் உங்களைப் பற்றி தினமும் நினைத்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பதற்கு மற்றவர்களுக்கு நேரமும் இல்லை, அவசியமும் இல்லை என்பதை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் செய்தது சரி என்பதில் உறுதியாக இருந்தால்... இந்த விஷயத்தை அந்த நிமிடமே மறந்திருக்க வேண்டும். போனது போகட்டும். இதற்குப் பிறகும் குழப்பாமல், சுத்தமாக துடைத்தெறியுங்கள் அந்த நிகழ்வை!
- கிருஷ்ணவேணி பாலாஜி, திருநீலக்குடி
நீயரு வழிகாட்டி!
உண்மையைச் சொல்ல வேண்டுமானால்... நீதான் மற்ற பெண்களுக்கு ஹீரோயின். தகுந்த நேரத்தில் சமயோஜிதமாக நடந்திருக்கிறாய். அதற்காக எனது வாழ்த்துக்களைச் சொல்லி விடுகிறேன். இது, மற்ற பெண்களுக்கும் வழிகாட்டியான ஒரு விஷயமே!
- சுபா ராஜ்குமார், சென்னை-8
பார்வையில் கவனம் தேவை!
இந்த விஷயத்தில் தவறு உன் மீதுதான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது எனக்கு. அந்த பையன் வீட்டுக்கு வந்தபோது, அதற்கு முன் அறிமுகமில்லாதவன் என்பதற்காக நீ அவனை உற்றுப் பார்த்திருக்க வேண்டும். அதுதான் இந்த அளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்கும் என்று தோன்றுகிறது. 'புதிதாக இருக்கிறானே' என்று நீ பார்த்த பார்வை, அவனை வேறுவிதமாக சிந்திக்க வைத்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
இது உனக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே ஒரு பாடம்தான். ஆம், நம்முடைய பார்வையை, வார்த்தைகளை எந்த இடத்தில் எந்த அளவுக்கு வீச வேண்டும் என்பது உட்பட பலவற்றிலும் நாம் அளந்து அளந்தே நடந்து கொள்ள வேண்டும். காரணம்... சினிமா, மீடியா என்று அனைத்துமே பலவிதங்களிலும் நமக்கு எதிரான வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். அதற்கு ஆட்படும் சிலர், இப்படி நடந்து கொண்டுவிடும்போது, சிக்கல் நமக்கானதாகிவிடுகிறது!
- எஸ்.பிரேமா, காஞ்சிபுரம்