அவர் சகவாசம் சரியில்லை...என் சுகவாசம் எனக்கில்லை !
வாசகிகள் பக்கம்
##~## |
எனக்கும் கணவருக்கும் 20 வருடங்கள் வித்தியாசம். இருந்தும் எங்கள் வீட்டின் வறுமையும், 'அரசாங்க உத்யோக மாப்பிள்ளை' என்கிற அவரின் தகுதியும் எங்களை இணைத்தது. சராசரி பெண்ணுக்கு உரிய அன்புடனும், ஆசையுடனும் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.
வருடங்கள் ஓடியபோது, திருமணத்துக்கு முன் அவர் ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் உறவில் இருந்தது தெரிய வந்தது. அதிர்ந்தாலும், தற்போது அந்த உறவு தொடரவில்லை என்பதில் நிம்மதி அடைந்தேன். ஆனால், எங்களின் திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணல்ல... பல பெண்களுடன் அவர் சகவாசம் வைக்க, வாழ்க்கையே எனக்கு சூனியமானது.
அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டதால், என்னை அடித்துத் துன்புறுத்தினார். போலீஸ், புகார் என்று சென்றால், அவரின் வேலைக்கு சிக்கல் ஆகிவிடும் என்பதால், வீட்டுக்குள்ளேயே சிறை வைத்தார். உடல் முழுக்கத் தண்ணீர் ஊற்றி லத்தியால் அடிப்பார். நான் மயங்கி விழ, எழுந்ததும் மீண்டும் அடிப்பார். அத்தனை சித்ரவதைகளையும் என் இரண்டு பெண் குழந்தைகளுக்காகத் தாங்கிக் கொண்டேன்.

இந்த இன்னல்களுக்கு இடையே... வாழ்க்கை உருண்டோட, என் பெண்கள் இருவரும் வளர்ந்து நிற்கின்றனர். இந்த நிலையிலும், பெண்கள் சகவாசம்... பொண்டாட்டியை அடிப்பது என இப்போதும் அவர் திருந்தவில்லை. இவ்வளவு நாளாக பல பெண்களுடன் சுற்றிக் கொண்டிருந்தவர், இப்போது ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உறவில் இருக்கிறார். இத்தனை நாள் இல்லாதவிதமாக குடும்பச் செலவுக்கு பணம் தருவதையும் நிறுத்திவிட்டார். குழந்தைகளுக்கு ஃபீஸ் கூட கட்டவில்லை. பல நாட்களாக சாப்பாடுகூட சரியாக இல்லை. கேட்டால், சீக்கிரத்தில் எங்களைத் தலைமுழுகிவிட்டு, அந்தப் பெண்ணுடன் நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளப் போகிறேன் என்கிறார்.
இத்தனை நாள் இந்த அயோக்கியனின் சித்ரவதைகளை தாங்கிக்கொண்டதே, பொருளாதாரப் பாதுகாப்புக்கும், என் பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்லவிதமாக அமைத்துக் கொடுக்கவும்தான். இப்போது அதுவும் இல்லை என்றாகிவிட்ட நிலையில், இத்தனை நாள் அனுபவித்த அவஸ்தைகள் எதற்காக என்று நினைக்கும்போது, அழுகை முட்டுகிறது அதிகம் படித்திராத இந்த அபாக்கியவதிக்கு.
என்ன செய்ய வேண்டும் இந்த அபலை..?!
- பெயர் வெளியிட
விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 269ன் சுருக்கம்
''குடும்பச் சூழ்நிலை காரணமாக என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை நானும் மகளும் புரிந்து கொண்டோம். ஆனால், 'காசுக்காக அப்பா தங்களை விட்டுச் சென்றுவிட்டார்' என்று வேறு மாதிரி புரிந்து கொண்டு, அவரை ஆரம்பத்திலிருந்தே வெறுக்க ஆரம்பித்துவிட்டான் மகன். என்றபோதும், சின்ன வயதிலேயே குடும்பத்தின் தலைமகனாக நின்று எனக்கும் மகளுக்கும் பாதுகாப்பாக இருந்தான். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கேயே வந்துவிட்டார் கணவர். இந்நிலையில், பழைய வெறுப்பு காரணமாக அடிக்கடி அப்பாவிடம் சண்டை போடுகிறான். இதற்கு நடுவே, என் மகள் ஒருவரைக் காதலிக்க, அவரையே திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். ஆனால், அப்பா - மகன் ஈகோ சண்டையில் சிக்கி இந்தக் காதல் கசக்கி வீசப்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மகளின் வாழ்க்கையை மீட்டெடுப்பது எப்படி?''
வாசகிகள் ரியாக்ஷன்...
மகனுக்கு கவுன்சலிங் தேவை!
உலகம் தெரியாத உங்கள் மகன் மீதும், அதை அவனுக்கு சரிவர புரிய வைக்காத உங்கள் மீதும்தான் கோபம் வருகிறது. அம்மாதான் தன் குழந்தைகளுக்கு அப்பாவையே அறிமுகப்படுத்தும் அற்புதமான வேலையை செய்கிறார். அப்படிப் பார்த்தால், உங்கள் கணவரின் பொறுப்புகளை மகனுக்கு எடுத்துச் சொல்ல நீங்கள் தவறிவிட்டீர் கள். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி மேலும் உங்கள் மகன் கோபத்தில் நெய் வார்க்கா தீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை விட்டு மகனிடம் பேசச் சொல்லுங்கள். நாட்டு நடப்பை, குடும்பத்துக்காக கணவர் செய்திருக்கும் தியாகத்தைப் பற்றியெல்லாம் அவனுக்கு புரிய வைக்கச் சொல்லுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்கள் கணவர் நிச்சயம் தடையாக இருக்கமாட்டார். உடனடியாக இந்த செயலில் இறங்குங்கள்.
- சுதா, பெரியகுளம்
நயமாக பேசி சம்மதம் வாங்கு!
முதலில், மகளின் திருமணத்தை முடிப்பதுதான் சரியாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தை முதலில் மகனிடம் எடுத்துச் சொல்லி, சம்மதத்தைப் பெறுங்கள். அதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று சத்தியமும் வாங்குங்கள். இதேபாணியில் கணவரிடமும் சம்மதம் வாங்குங்கள். குடும்பத்தில் மதிப்பு மிக்க ஒருவரின் துணையோடு நல்ல காரியத்தை நடத்துங்கள். இந்தக் கல்யாண கலகலப்பில்கூட, அப்பா - மகன் ஈகோ உடைந்து தூள்தூளாகக்கூடும்!
- இந்திரா ரகோத்தமன், சென்னை-24