வலையில் சிக்கிய வாழ்க்கை !
வாசகிகள் பக்கம்
##~## |
என்னையும், தங்கையையும் ஒரு குறையும் வைக்காமல் வளர்த்தனர் பெற்றோர். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, எனக்குத் திருமணத்தை முடித்தனர். அடுத்து, பொறியியல் படிக்கும் தங்கைக்கு நல்வழி செய்து கொடுக்கும் முனைப்பில் அவர்கள் இருந்தபோதுதான், அந்தத் துயரம் நடந்தது... சாலை விபத்து ஒன்றில் என் பெற்றோர் இறந்துவிட்டனர் சில மாதங்களுக்கு முன்.
வீடு, சொத்து என்று வசதிகள் இருந்தும் நிராதரவாக நின்றாள் தங்கை. பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளை அரவணைத்து, என் புகுந்த வீட்டுக்கு அழைத்து வந்தேன். கணவர், மாமியார், மாமனார் என்று அனைவரும் பாசம் காட்டியது... அவளுக்கும் எனக்கும் ஆறுதலாக இருந்தது.
நாட்கள் கழியக் கழிய, நடந்த துயரத்தின் வடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால், அதைவிடக் கொடூரத்தை சீக்கிரமே மீண்டும் அழைத்து வந்திருக்கிறது விதி இப்போது. சமீபத்தில் ஒரு நாள், என் கணவரிடம், அவருடைய அம்மா பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபோது, என் வாழ்க்கை, என் தங்கையின் வாழ்க்கை இரண்டுமே வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து நொந்து கிடக்கிறேன்.

'கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகியும், உன் பொண்டாட்டிக்குக் குழந்தை இல்லை. இதையே சாக்கா வெச்சு அவ தங்கச்சியை நீயே கட்டிக்கோ. அவங்க அப்பா சேர்த்து வெச்சுருக்குற அத்தனை சொத்தும் பாகம் பிரிக்காம உனக்கே வந்து சேர்ந்துடும்’ என்று என் மாமியார் ஓதிக்கொண்டிருந்ததைவிட, என் கணவர் மறுப்புத் தெரிவிக்காமல் மரம் போல் நின்றிருந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சியும், ஆத்திரமும் எனக்குள் அதிகம் கொதிக்கிறது.
புகுந்த வீட்டின் விபரீத எண்ணம் எனக்குத் தெரிந்துவிட்டதை அவர்களிடம் நான் காட்டிக் கொள்ளவில்லை. என் தங்கையிடமும் சூழலைச் சொல்லவில்லை. ஆனால், எப்பாடுபட்டாவது என் வாழ்க்கையையும், தங்கையின் வாழ்க்கையையும் மீட்டெடுக்கத் துடிக்கிறேன். வழி சொல்லுங்கள் தோழிகளே..!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

'இந்தக் கொடுமைக்கு என்னதான் தீர்வு?' என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதாவிடம் கேட்டபோது... ''இந்தச் சகோதரி, உடனடியாக குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் மாஜிஸ்திரேட்டிடம் நேரடியாக புகார் தரலாம். உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் போன்ற கொடுமைகள், மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்காதது போன்ற வற்றுக்காக காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம். பாதிப்புகள் கடுமையாக இருந்தால்... உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட சமூக அலுவலரையும்கூட இதற்காக அணுகலாம். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மூலம் அவர் விசாரணை நடத்துவார். உரிய நிவாரணத்தை கோர்ட் மூலம் பெற்று கொடுப்பார். தேவைப்படுமாயின், அந்தப் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரியும்கூட நியமிக்கப்படுவார். மேலும் குடும்பநல நீதிமன்றத்தை அணுகியும் நிரந்தர, தற்காலிக நிவாரணங்களைப் பெறலாம்'' என்று அனைத்து வழிகளையும் காட்டினார்.
இந்த விஷயங்களை, அந்தத் தோழிக்கு உரிய வகையில் தெரியப்படுத்தியிருக்கிறோம்.
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு... என் டைரி 270ன் சுருக்கம்

''குடும்ப வறுமை காரணமாக, இருபது வயது மூத்தவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த தொடர்பு, திருமணத்துக்குப் பிறகு பலவாகிவிட்டது. இந்த உண்மை எனக்குத் தெரிய வந்த பிறகு, லத்தி உடையுமளவுக்கு அடிவாங்க ஆரம்பித்தேன். பிள்ளைகள் வளர்ந்த பின்பும் அது நிற்கவில்லை. தற்போது, 'வேறு ஒரு பெண்ணுடன் நிரந்தரமாக தங்கிவிடப் போகிறேன்' என்று அச்சுறுத்துகிறார். குடும்பச் செலவுக்குக்கூட பணம் தருவதையும் நிறுத்திவிட்ட அவரால், நடுத்தெருவுக்கு வரும் நிலையில் இருக்கிறேன். 'இத்தனை காலம் பொறுத்துக் கொண்டது எல்லாம் இதற்குத்தானா?' என்று மனம் துடிக்கிறது. அபலைக்கு வழி சொல்லுங்களேன்!''
வாசகிகள் ரியாக்ஷன்...
சட்டத்தை நாடுங்கள்... சவுக்கடி போடுங்கள்!
உடனடியாக, உங்கள் கணவரின் உயரதிகாரிகளிடம் தெளிவாக புகார் கொடுங்கள். கூடவே, மகளிர் நல அமைப்புகளையும் நாடினால், உங்களுக்கு பக்கபலமாக நின்று, பொருளாதார ரீதியாக நீங்கள் வீழ்ந்துவிடாமல் இருக்க, உங்கள் கணவரிடம் இருந்து பணம் பெற்று தரும் வேலையை அந்த அமைப்பினர் செய்வார்கள். மேற்கொண்டு ஒரு வழக்கறிஞரை நாடி, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து சவுக்கடி கொடுக்கவும் தயங்காதீர்கள்.
- என்.சாந்தினி, மதுரை
வேலையைப் பறி... வேலையைத் தேடு!
முதலில் அவருடைய வேலைக்கு நீ உலை வைக்க வேண்டும். 'வேலை போய்விடும்' என்கிற பயத்தில் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசை இருப்பது போல நடிப்பான். சத்தியமாக நம்பி விடாதே. உடனடியாக நீ ஒரு வேலையைத் தேடிக் கொள். சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை என்றால்கூட தயங்காதே! அவற்றுக்கும் இன்று கௌரவமான சம்பளம் கிடைக்கிறது. பிள்ளைகளை கஷ்டப்பட்டு கரையேற்றிவிட்டால், உன் கவலைகள் போயே போச்சு!
- ஆயிஷா பர்வீன், சென்னை-92