மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 272

ஆடம்பர ரூட்டு...நிம்மதிக்கு வேட்டு

வாசகிகள் பக்கம்

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி - 272

100

##~##

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்திருந்தார் என் நெருங்கிய தோழியின் கணவர். அவர் என்னிடம் கொட்டிய கண்ணீரை இங்கே எழுத்துக்களாகத் தொகுக்கிறேன் தோழிகளே!

''மேடம்... உங்கள் தோழி, என் தங்கையுடன் போட்டி போட்டுக்கொண்டு குடும்பத்தின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள். என் தங்கை வாழ்க்கைப்பட்ட இடம், வசதியானது. அதனால் அவள் ஆடம்பரமாக இருக்கிறாள். அந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் எல்லாவற்றிலும் அவளுடன் சரிக்குச் சமமாக நிற்க வேண்டும் என்கிறாள் என் மனைவி. காஸ்ட்லி செருப்பு, காஸ்ட்லி சேலை, பியூட்டி பார்லர், ஹேர் கட் என்று என் தங்கையைப் பார்த்து வீம்பாக செலவழிக்கிறாள். என் தங்கை சமீபத்தில் ஒரு ஜோடி தங்க வளையல்கள் வாங்கினாள் என்பதற்காக, இவளும் வட்டிக்குக் கடன் வாங்கி தங்க செயின் வாங்கியதுதான் கொடுமையின் உச்சம்.

என் டைரி - 272

'தங்கையின் கணவருக்கு தொழிலில் பெரிய வருமானம் வருகிறது. நானோ மாதச் சம்பளக்காரன். புரிந்துகொள்...’ என்று அவளிடம் பக்குவமாகப் பேசினேன். அவளோ, 'சரிதான்... ஒண்ணுமில்லாதவனைக் கட்டிக்கிட்டது என் தப்புதான்...’ என்று காயப்படுத்திக் கத்துகிறாள்.

அவள் வருத்தப்படும் அளவுக்கெல்லாம் நான் குறைவாக குடும்பம் நடத்தவில்லை. அவள் தேவைகளையும், பிள்ளைகளின் தேவைகளையும் நிறைவாகவே பூர்த்தி செய்கிறேன். வெளியூரில் தங்கி இன்ஜினீயரிங் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்கிறேன். மேற்படிப்பு, திருமணம் என்றும் சேமிக்கிறேன். சொந்தமாக வீடு, தேவையான வருமானம் என்று கௌரவமாகவே குடும்பம் நடத்துகிறேன்.

நல்லவேளையாக பிள்ளைகள் இருவரும் வெளியூரில் படிப்பதால் அவர்களுக்கு அம்மாவின் இந்த அர்த்தமற்ற செயல்கள் தெரியாமல் நிம்மதியாக இருக்கிறார்கள். நானோ... தினமும் இவளுடன் சண்டை, சச்சரவு என நிம்மதி இழக்கிறேன். பொறுப்பான கணவனாக இப்போதும் நான் இருப்பதால்தான், அவளின் ஆடம்பரத்தால் அவள் வளர்த்துக் கொண்டே போகும் கடன்கள் குறித்த கோபங்களை எல்லாம் அடக்கி, அவளை வெறுக்காமல் திருத்தவே முயற்சிக்கிறேன்.

'நாற்பது வயதைத் தாண்டியதால்... மெனோபாஸ் மனநிலை உன்னைப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். டாக்டரிடம் செல்லலாம் வா...’ என்று அழைத்தால், 'எனக்கு என்ன பைத்தியமா?’ என்று என்னையே அடிக்கிறாள். அவளை இந்தப் போட்டி காம்ப்ளக்ஸில் இருந்து எப்படி மீட்பது..?’' என்று நனைந்த கண்களுடன் கேட்டார் அவர்.

என்ன பதில் சொல்வது என்று புரியாமல், அப்போதைக்கு சமாதானப்படுத்தி அனுப்பிய நான், 'அவளை எப்படி மீட்பது?' என்கிற சிந்தனையிலேயே இருக்கிறேன். ஏதாவது வழி சொல்லுங்கள் தோழிகளே..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி - 272

என் டைரி 271ன் சுருக்கம்

''கல்லூரியில் படிக்கும் என் தங்கைக்காக வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், சாலை விபத்தில் பலியாகினர் பெற்றோர். நிராதரவாக நின்ற ஒரே தங்கையை, என் புகுந்த வீட்டுக்கு அழைத்து வந்தேன். அவர்கள் காட்டிய பாசத்தில் ஆறுதலடைந்திருந்த எனக்கு, அது பொய்யென விதி சொன்னது பேரதிர்ச்சி. ஒரு நாள் என் கணவரும், அவருடைய அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது, என் காதிலும் விழுந்தது. 'கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமாகியும் உன் பொண்டாட்டிக்கு குழந்தை இல்ல. பேசாம அவ தங்கச்சிய கட்டிக்கோ... அத்தனை சொத்தும் உனக்கே’ என்ற தன் அம்மாவின் வார்த்தை களை தட்டாமல் கேட்டுக் கொண்டு இருந்தார் என் கணவர். அந்த நொடியிலிருந்தே என் வாழ்க்கை பறிபோகாமல் தடுப்பது எப்படி..? தங்கைக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது எப்படி? என்று அலைபாய ஆரம்பித்துவிட்டது மனது. வழி சொல்லுங்கள் தோழிகளே..!''

வாசகிகள் ரியாக்ஷன்...

முதலில் தங்கையை கவனி!

முதலில் உங்கள் தங்கையை இந்தச் சூழலில் இருந்து உடனடியாக விடுவிப்பதுதான் முக்கியம். எனவே, இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதது போலவே புகுந்த வீட்டாரிடம் நடந்து கொள்ளுங்கள். தங்கையை கல்லூரி விடுதியில் தங்க வையுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது லேடீஸ் ஹாஸ்டல். அதற்கு முன்பாக, உங்கள் புகுந்த வீட்டினரின் திட்டத்தை தங்கையிடம் எடுத்துச் சொல்லுங்கள். வாழ்க்கையில் தனித்து நிற்க ஊக்கப்படுத்தும்விதமாக அதை எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம். படித்து முடித்ததுமே உங்களுக்கு பெற்றோர் செய்த உடனடி திருமணத் தவறை, நீங்களும் அவளுக்கு செய்துவிடாதீர்கள். நல்ல வேலையில் அமர்ந்து, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளச் செய்யுங்கள்.

பிறந்தகத்து சொத்துதான், உங்கள் இருவரின் துருப்புச் சீட்டு. அதனால் டாக்குமென்ட் அனைத்தையும் பத்திரமாக பேங்க் லாக்கரில் வையுங்கள். புகுந்த வீட்டினரின் தரப்பிலிருந்து, உங்கள் தங்கையின் திருமணம் பற்றி கட்டாயப்படுத்தினால், சொத்திலிருந்து சல்லிக்காசுகூட கிடைக்காது என்பதை மறைமுகமாகப் புரிய வையுங்கள்.

- 'அவள் விகடன் ஃபேஸ்புக்' மூலமாக அமலா ஜோசப், சென்னை

இது வெட்டிப்பேச்சு... கண்டுகொள்ளாதே!

திருமணம் ஆகி இரண்டு வருஷம் குழந்தையில்லை என்பது ஒரு விஷயமே இல்லை. இதற்காக உங்கள் இருவர் வாழ்க்கையையும் வீணடிக்க நினைக்கிறார் உங்கள் மாமியார். அதனால் மட்டுமே இந்தத் திருமணம் நடந்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு எல்லாம் செவிசாய்த்து நேரத்தை வீணடிக்காதே. இதற்குள் குழந்தைகூட பிறந்து, பிரச்னைக்கு அணை போடலாம். அப்போதும் கூட, அவர்கள் அத்துமீற நினைத்தால், சட்டத்தைக் கையில் எடு. சமூகநலத்துறை, போலீஸ், கோர்ட் என்று தயங்காமல் போராடு. பொருளாதார வசதிகள் ஓரளவுக்கு இருப்பதால், இதுபோன்ற பூச்சாண்டி களுக்கெல்லாம் பயப்படாமல், வாழ்க்கையைக் கடக்கத் தொடங்கு!

- ராஜி குருசுவாமி, சென்னை-88